Tuesday, May 30, 2017

எனது மேடை நாடக அனுபவங்கள் தொடர்ச்சி-25

                  பைத்தியமாய் ஒரு வைத்தியம் 

              “நாட்டாமை தீர்ப்பை மாத்து” என்ற திரை வசனம் போல, செம்பறவை நாடகத்தைப் பார்த்த ஒரு பெண்ணிய வாதியிடமிருந்து வந்த  கருத்து மடலில்

 “ கெடுக்கப்பட்டவள் இறுதியில் சாகத்தான் வேண்டுமா?”

என்ற கேள்வி என்னை உலுக்கத்தான் செய்தது.. என்றாலும் ஒரு வன்முறையாளனைப் பழிவாங்க அவனது மனைவியை இரு முரடர்களை வைத்து வன்புணர்ச்சிக்குள்ளாக்கி ஒரு பெண்ணே கொன்றதும், இன்னொருவனைத் தற்கொலை செய்து கொள்ளத் தூண்டியதுமான குற்ற நடவடிக்கைகளை அவள் சந்திக்க வேண்டியதைத் தவிர்க்கவும்,  புகழ்பெற்ற மருத்துவரின் மகளாக சமுதாயத்தில் மதிப்பிலிருக்கும் ஒரு பெண்மருத்துவரின் தாய் ஒரு விலைமாது என்ற அவப்பெயரை  தன்மகள் அறியாமலிருக்கவும்,  அந்தச் செம்பறவைத் தன்னைத் தானே மாய்த்துக் கொள்வதாக அந்நாடகத்தின் முடிவை அமைத்திருந்தேன்.  

               அந்தக் குறையினை 1988ல் அரங்கேற்றிய    
   “ கரையேறிய அலைகள்” என்ற நாடகத்தின் மூலம் போக்க முயற்சித்திருந்தேன்.




                 மணக்கொடை என்னும் வரதட்சணை மறுத்தும், சீர் பொருள்கள் வெறுத்தும், ஆடம்பரமில்லாத  திருமணத்தை  விரும்பும் ஒரு வரனுக்குத் தன் மகளைத் திருமணம் செய்து கொடுக்கிறார் ஒரு  மதுரை செல்வந்தர்.

                மருமகனை நம்பி  திருவனந்தபுரத்திலிருக்கும் தனது தொழிற்சாலைக்கு இயந்திரங்கள் வாங்க ஒரு பெருந்தொகையைக் கொடுத்து அனுப்புகிறார் அந்த செல்வந்தர்..

            இருசக்கர உந்தூர்தியில்  மலைப்பாதை வழியே  தனது நண்பனுடன்    சென்ற அவன், ஒரு விபத்தில் மலை உச்சியிலிருந்து வண்டியோடு விழுந்து எரிந்து இறந்து போகிறான்.  மருமகன் இறந்த செய்தி கேட்ட செல்வந்தர் மாரடைப்பால் இறக்கிறார்.

             கணவனையும்  தந்தையையும் இழந்த துக்கம் தாழாத மல்லிகா ( செல்வந்தரின் மகள் )  வைகை  நீர்த்தேக்கத்தில் குதித்துத் தற்கொலை செய்து கொள்ளப் போகிறாள்.

             சுற்றுலா வந்த சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் அருளாந்து, அவளைக் காப்பாற்றி  மனவளர்ச்சி குன்றிய தன் பருவ வயது  மகள் சித்ராவுக்குத் துணையாக இருக்கட்டும் என்று மல்லிகாவைத் தன்னுடன் சென்னை  திருவல்லிக்கேணிக்கு அழைத்துச் செல்கிறார்.

                அங்கு தனது தொழிற்சாலையின் நிர்வாகத்தை மேலாண்மை செய்யும் பொறுப்பை மல்லிகாவுக்குக் கொடுக்கிறார்.

            ஆறுமாதங்கள் உருண்டோட,  அந்தத் தொழிலதிபரின்  மன வளர்ச்சி குன்றிய மகள்   சித்ராவுக்கு வாழ்வளிக்க விரும்புவதாக ஒரு  இரங்கூன் மருத்துவர் வருகிறார்.

               அந்த மருத்துவ மணமகனைப் பார்த்த மல்லிகா அதிர்ச்சியடைகிறாள்.  இறந்து போனதாக தான்  நம்பிக்கொண்டிருந்த தனது கணவன் விநோத் , இரங்கூன் டாக்டர் கிஷோராக அங்கே  வந்திருப்பதை அறிகிறாள்.

                  தன்னை வளர்ப்பு மகளாகக் கருதும்  தொழிலதிபர் அருளாந்திடம்   மாப்பிள்ளையாக    வந்திருப்பது தனது கணவன்தான் எனக் கூறுகிறாள்.

                 விபத்தில் இறந்ததாக அடையாளப் படுத்திவிட்டு, மெய்யப்பர்( மல்லிகாவின் தந்தை)  கொடுத்த பெருந்தொகையோடு பெங்களுரில் தலைமறைவாக இருந்து வரும் விநோத்,  மல்லிகாவை  அந்த வீட்டில் பார்த்து அதிர்ந்தாலும் , வெளிக்காட்டிக் கொள்ளாமல், மல்லிகாவைத்  தனக்கு   யாரென்றே தெரியாது என்று நடிக்கிறான்.    தான் இரங்கூனிலிருந்து வந்த டாக்டர் என்று போலிச் சான்றிதழ் காட்டி  தனது கையாள்களை வைத்து  தொழிலதிபரை  நம்ப வைக்கிறான்.

                 மல்லிகா அவனிடம் தங்கள்  பழைய  நிகழ்வுகளை நினைவு படுத்த, அவன் மல்லிகாவுக்கு பைத்தியம் பிடித்து விட்டது என ஒரு போலி மனநல மருத்துவரை வைத்து அருளாந்தை நம்ப வைக்கிறான்.

                காவல் நிலையத்தில் விநோத்தின் வஞ்சகச் செயல் பற்றிப் புகார் கொடுக்கச் செல்கிறாள்  மல்லிகா.  அவளிடம்  விநோத் - மல்லிகா  திருமணம் நடந்ததற்கான சான்றுகளை காவல்துறை அதிகாரி கேட்க, அழைப்பிதழோ, போட்டோவோ, திருமணப் பதிவோ திருமணம் நடந்ததை நிரூபிக்கும் சாட்சிகளோ  அவளிடம்   இல்லாமையால்  அவள் புகார் புறக்கணிக்கப் படுகிறது. 

             மனநல வைத்தியருடன் மல்லிகாவைத் தேடி   காவல் நிலையம் வந்த அருளாந்தும் அவளைப் பைத்தியம் எனக்கூறி   வீட்டிற்கு அழைத்துச் செல்கிறார்




                  மல்லிகாவினால் தனது திட்டம் பாழாகிவிடும் என அஞ்சிய விநோத்,  இரண்டு நாள்களில் சித்ராவைத் திருமணம் செய்து கொண்டு, அமெரிக்காவில் ஒரு பெரிய இதயநோய் மருத்துவமனை சித்ரா பெயரில்  கட்ட கால்கோள் நடத்தச் செல்ல வேண்டுமென்று   தொழிலதிபர் அருளாந்துக்கு  நெருக்கடி கொடுக்கிறான், மல்லிகா அந்தத்   திருமணம் நடைபெற விடாமல் முட்டுக்கட்டை போடுகிறாள்.

               மனநலம் குன்றிய தனது மகளின் திருமணத்திற்கு மல்லிகா தடையாக இருப்பதை விரும்பாத அருளாந்து அவளை வீட்டை விட்டு வெளியே விரட்டுகிறார்.

                விநோத்தின் விருப்பப்படியே  மருத்துவமனை கட்ட மூன்று கோடி ரூபாயை அவனிடம் கொடுத்து , தனது மகளையும் அவன் குறித்த நாளிலேயே அவனுக்குத் திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் செய்கிறார் தொழிலதிபர் அருளாந்து. 

                வீட்டைவிட்டு வெளியேறிய மல்லிகா ஒரு போக்கிலியைச் சந்தித்து, சித்ராவை எப்படியாவது கடத்தி அந்தத் திருமணம் நடக்கவிடாமல் செய்ய வேண்டுகிறாள்.

               அதற்குள் சித்ராவை  கடத்தி அவளைக் கெடுத்து, அதன்மூலம் சித்ரா தன்னையேத் திருமணம் செய்து கொள்ளும் நெருக்கடியை ஏற்படுத்த முயற்சிக்கிறான் விநோத்.

               கடத்தப்பட்ட சித்ராவை விநோத்திடமிருந்து காப்பாற்ற முயல்கிறாள் மல்லிகா. மதுவெறியில் மிருகமாய் மாறி சித்ராவைக் கெடுக்க முற்பட்ட விநோத்தை    உடைந்த  மது பாட்டிலால்  அவன் வயிற்றுப் பகுதியில் குத்த,  இரத்த வெள்ளத்தில் இறக்கிறான் விநோத்.

                 அங்கே வந்த போக்கிலி வேடத்திலிருந்த  சி.பி.ஐ அதிகாரி ஆனந்தன், விநோத் ஒரு தேடப்படும்  குற்றவாளி என்றும்
அவன் பம்பாய். கல்கத்தா, டெல்லி , நாக்புர் முதலான பெரு நகரங்களில் , செல்வந்தர் வீட்டுப் பெண்களை வரதட்சணை இல்லாமல் திருமணம் செய்து , அப்பெண்களின் பெற்றோரிடம் இதுபோல நிறுவனம் நடத்த வேண்டுமென்று  பெருந்தொகை யினைப் பெற்றுக் கொண்டு , திருமணம் நடந்த தடயங்களே இல்லாமல், அந்தப் பெண்களுடன்  தேனிலவு செல்வதாய் அவர்களைக் கொன்றுவிட்டு. அதை விபத்தாக்கி விட்டு தப்பிவிடுவதையும், தொழிலாய்க் கொண்டவன் என்றும் விவரிக்கிறான். 

              அவனது கூட்டாளி ஒருவனை  டெல்லியிலிருந்து பின் தொடர்ந்து  தான் சென்னை வந்ததாகவும்,    ஆதாரங்களோடு  அவனைக்     கைது செய்ய,  தான்   போக்கிலி வேடத்தில்  மல்லிகாவைச் சந்தித்ததாகவும். அதற்குள் மல்லிகா அவசரப்பட்டு அவனைக் கொன்று கொலைப்பழி யேற்கும் நிலைக்கு வந்ததையும் கூறி வருந்துகிறான்.

                “பெண்களைப் பைத்தியங்களாக்கி   சட்டத்தின் ஓட்டைகளின் வழியே  தப்பிக்கும்  சமூக விரோதிகளுக்கு,   பாதிக்கப்பட்ட  பெண்கள்தான்  சரியான  தண்டனை கொடுக்க முடியும்”  என்று கூறி கணவனானாலும் ஒரு கயவனைத் தண்டித்த மன நிறைவோடு, சிறை செல்கிறாள் பைத்தியக்கார பட்டம் சூட்டப்பட்ட மல்லிகா. 

                இந்த நாடகத்தை அரங்கேற்றும் போது எனக்கு ஒரு நெருக்கடி வந்தது. என்ன தெரியுமா?

                           --- அடுத்த தொடரில்

Friday, May 26, 2017

எனது மேடை நாடக அனுபவங்கள் தொடர்ச்சி-24

                 
 முடிவை மாற்று!!!

               காய்கறி விற்றுக் கபடமில்லாத   சிட்டாகத்  துள்ளித் திரிந்த  காவேரி, தன்னைக் கூட்டாக வன்புணர்வு செய்து தலைமறைவாய்ப் போன இரண்டு பேரைப் பழிவாங்க “கௌரி” என்ற பெயரில் செம்பறவையாய் ஊர்   ஊராய்த் 
தேடித் திரிகிறாள்.

                  அவர்களைக் கண்டுபிடித்து அவளது சபதத்தை நிறைவேற்று வதாகச் சொன்ன சமூக விரோதி செங்கோடனின் உறுதிமொழியை நம்பி  கூட்டு   வன்புணர்ச்சியால் கருவுற்றுத் தனக்குப் பிறந்த ஆறுமாதக் கைக்குழந்தையையும், தனது தம்பியையும்  செங்கோடனிடம் ஒப்படைக்கிறாள். அவன் அவர்களை    ஒரு அனாதை இல்லத்தில் சேர்த்துவிட்டு கௌரியை ஆந்திராப் பகுதிக்கு  அழைத்துச் சென்று, அவளை  வைத்து   விபச்சாரத் தொழில் நடத்திப் பணம் ஈட்டுகிறான்.

                  பதினெட்டு ஆண்டுகளுக்குப் பிறகு,  அவனது உதவியாள்  இராசாளி மூலம் அங்கிருந்து தப்பி,  தமிழ்நாடு வந்து  தன்னைப் பாலியல் வன்கொடுமை செய்த இருவரது இருப்பிடங்களையும் கண்டு பிடிக்கிறாள்.

                தான் தேடிய இருவரில்  தியாகு என்ற  ஒருவன்   திருச்சியில் வழக்குரைஞராக  இருப்பதைத் தனது உதவியாள்  மூலம் அறிகிறாள்.  அவன் மனைவியை தனது உதவியாள் மூலம் கடத்திவந்து,  அவளை மீட்க , அந்த வழக்குரைஞரை வரவழைக்கிறாள்.

                தனது மனைவியை மீட்க வந்த வக்கீலிடம் , 
18 ஆண்டுகளுக்கு முன்   நடந்த  நிகழ்ச்சியை நினைவு படுத்துகிறாள். அவன் அதற்கு வருத்தம்  தெரிவித்து, தன் மனைவியை தன்னிடம் ஒப்படைக்க வேண்டுகிறான்.  தான் பட்டபாட்டை அவனுக்கு உணர்த்த அவன் கண்முன்னே 
அவனது  மனைவியை இரண்டு முரடர்களைக் கொண்டு  
வன்புணர்ச்சி செய்யச் சொல்கிறாள்.  அந்தக் கொடுமையில் வழக்குரைஞர் மனைவி மூச்சுத் திணறி இறக்க, அதைப் பார்த்த வக்கீல் தியாகு பைத்தியக்காரனாகி அலைகிறான்.

                 இன்னொருவன்  ஜார்ஜ், கோவையில்  மருத்துவராக  பெரும் புகழோடும் செல்வச் செழிப்போடும் இருப்பதை அறிந்து அங்கே   செல்கிறாள். அமெரிக்காவில் மருத்துவப் படிப்பு முடித்து அப்போதுதான்  தந்தை வீடு வந்த டாக்டர் ஜார்ஜின் மகள் வித்யாவை    தனது கையாள்களை வைத்து  ஏமாற்றி அழைத்து வந்து  இரகசிய இடத்தில் அடை த்து வைக்கிறாள். 

                மகளைத் தேடிவந்த டாக்டர் ஜார்ஜிடம் தான் யாரென்பதை நினைவு படுத்துகிறாள் கௌரியாக இருக்கும் காவேரி. வாலிப வயதில் தான் செய்த  தவறுக்கு இழப்பீடாக இலட்சங்களை அள்ளித் தருவதாகக் கூறுகிறான் மருத்தவர்  ஜார்ஜ்.  அவனது வன்செயலால் திசைமாறி, விலைமாதாய் நிற்கும் தன்னை மனைவியாக ஏற்றுக் கொள்ளச் சொல்கிறாள். சமுதாயத்தில் புகழோடு இருக்கும்  அவன் அவளின் கோரிக்கையை  ஏற்க மறுக்கிறான்.

               அப்படியானால்  அவன் மகளை  இரு முரடர்களை வைத்துப் பாலியல் பலாத்காரம் செய்யப் போவதாகக்  கூறுகிறாள். 

              அப்போது. தனது மனைவி முதல் பிரசவத்தின்போது இறந்து போனதையும்,  வித்யாவை “சுந்தரேசன் அனாதை இல்லத்திலிருந்து” தத்து எடுத்துத் தன் மகளாய் வளர்ப்பதையும் கூறுகிறான் ஜார்ஜ்.

             சுந்தரேசன் அனாதை இல்லத்தில் செங்கோடனால் ஒப்படைக்கப்பட்ட  தனது ஆறுமாதக் கைக்குழந்தைதான் டாக்டரின் மகளாக வளர்ந்துள்ள வித்யா என்பது  காவேரிக்குத் தெரிய வருகிறது. மனதில் இரக்கம் கசிகிறது.  

                  தன்மகளான       வி த்யாவைச் சீரளிக்க விரும்பாமல், டாக்டரிடம் தன்னை மனைவியாய் ஏற்றுக் கொள்ள  மீண்டும் 
வற்புறுத்துகிறாள். இரண்டு நாள்களில் தன் முடிவைச் சொல்வதாக காவேரியிடம் சொல்லிவிட்டு  வித்யாவைத் தன்னுடன் அழைத்துச் செல்கிறான் டாக்டர் ஜார்ஜ்.

                 புகழ்பெற்ற மருத்துவராய் விளங்கும் தான்,    ஊரறிந்த ஒரு விலைமாதை தன் மனைவியாய்  ஏற்றுக் கொள்ள முடியாமலும்,  காவேரிதான் தனது  தாய் என்பதை வித்யா அறியாமலிருக்கவும் , தனக்குத் தானே விச ஊசி போட்டுக் கொண்டு இறந்து விடுகிறான் அந்த டாக்டர்.

                 செங்கோடன், வெலிங்டன் இராணுவ முகாமிலிருந்து  இந்திய இராணுவ இரகசியங்களைத் திருடி பாகிஸ்தானுக்கு விற்க முயற்சிக்கையில்  பாதுகாப்புப் படை அதிகாரி மணிவண்ணனால்  சுடப்பட்டு, தப்பித்துக் கோவை வித்யா மருத்துவ மனைக்கு வருகிறான்.    இராசாளி மூலம் செங்கோடனின் தேசத் துரோகச் செயலை அறிகிறாள்  காவேரி.  

                  தன்னை விபச்சாரத் தொழிலில் தள்ளியதோடு, தாய் நாட்டுப் பாதுகாப்பையும் சீரழிக்கச்  சதி செய்த  செங்கோடனுக்குச்  சிகிச்சை அளிக்க விடாமல்  வித்யாவைத்   தடுத்து    விடுகிறாள் காவேரி.    மேலும் செங்கோடன் இருக்குமிடத்தையும் இராணுவ முகாமுக்குத் தெரிவிக்கிறாள்.

                 தப்பியோடியவ னைத் தேடி வந்த மணிவண்ணன்,  செங்கோடனிடமிருந்த இராணு இரகசியங்களைக் கைப் பற்றுகிறான்.     உரிய நேரத்தில்   சிகிச்சை  கிடைக்காமையால் செங்கோடனும் இறக்கிறான். 

                 கோவை வித்யா மருத்துவமனையில் இதய நோய் சிகிச்சைக்காக வந்திருந்த சுந்தரேசன் மூலம்,  இராணுவ அதிகாரியாய் இருக்கும் மணிவண்ணன்  18 ஆண்டுகளுக்கு முன் அனாதை இல்லத்தில் விடப்பட்ட   தனது தம்பிதான்  என்பதை  அறிந்து கொள்கிறாள்  காவேரி.

              மணிவண்ணன்  வித்யாவை விரும்புவதையறிந்த காவேரி, அவர்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க  அனாதை இல்ல  சுந்தரேசனிடம் வேண்டுகிறாள்.

              ஊரறிந்த  விலைமகளான ஒருத்தி,   மணிவண்ணனின் அக்கா என்பதோ, வித்யாவின் அம்மா என்பதோ வெளியுலகுக்குத் தெரிந்தால்   உயர்ந்த நிலையிலிருக்கும் அவர்களின் கவுரவம் கெட்டுவிடும் என்றெண்ணிய காவேரி . தான் தேடிய  பணம், பொருள் அனைத்தையும் சுந்தரேசனுடைய  அனாதை இல்லத்திற்கு எழுதி  சுந்தரேசனிடம்  ஒப்படைத்து விட்டு,    விசமருந்தித் தன்னை மாய்த்துக் கொள்கிறாள்.

           ஒரு தேசத்துரோகியின் இருப்பிடத்தை அடையாளம்     காட்டியமைக்காக  காவேரியைப்   பாராட்ட அவளைத் தேடிவந்த மணிவண்ணனும் , அவளுக்கு வாழ்வழிக்க உடனிருந்து உதவிய இராசாளியும்   விசமருந்தி  மரணத்தின் விளிம்பிலிருக்கும்   காவேரியைக்  காப்பாற்ற  முயன்றும்  அந்த செம்பறவை தன் சிறகுகளைத் தானே உதிர்த்துக் கொண்டது.


             இந்த நாடகம் பல தரப்பினராலும் பாராட்டப்பட்டது.
21.03.1987ல்  மீண்டும் புதுக்கோட்டை லாரி உரிமையாளர், ஓட்டுநர், கிளீனர்கள் சங்க ஆண்டு விழாவில்  நகரின் முக்கிய இடத்தில்        ( அண்ணா சிலை அருகே)  நடத்தப்பட்டு செம்பறவையாக நடித்த நடிகைக்கு “குணச்சித்திர நடிகை” என்ற பட்டமும் சங்கத் தலைவரால்  வழங்கப்பட்டது. 

              மூன்று நாள்கள் கழித்து எனது முகவரிக்கு  ஒரு உள்நாட்டு அஞ்சல் வந்தது.  அதில்  “ கெடுக்கப்பட்டவள்  சாகத்தான் வேண்டுமா?  முடிவை மாற்றுங்கள்” என்று ஒரு பெண்ணிய வாதி சாட்டையைச் சுழற்றியிருந்தார். 


உங்கள் பார்வை என்ன? 

                --- அடுத்த தொடரில் “கரையேறிய அலைகள்” 






Wednesday, May 24, 2017

எனது மேடை நாடக அனுபவங்கள் தொடர்ச்சி 23



செம்பறவையான  சிட்டு


                    பட்டி மன்றம் முடிந்தது வீட்டில் வழக்காடு மன்றம் என்ற அன்மைக் கால சொலவடை போல,  மேடை நாடகம்  சுந்தர காண்டமாக முடிந்து,  வீட்டில்  யுத்த காண்டம் தொடரப் போவதை ஆவலுடன் எதிர் பார்த்திருந்தார்கள்   என் மனைவியைப் பகடிபேசிய உறவுகள். 

               பழியஞ்சி கிராமத்தில்  நடந்த    “அவளுக்கு ஒரு நீதி”  நாடகத்தில்  கிராமத்துப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்ட கணவன்,  அவளை நாகரீகமாக  சேலை உடுத்தக் கற்றுக் கொடுக்கும் காட்சியில்  நடித்த நான்,   நாடக மனைவிக்கு இப்படித்தான்  சேலை கட்ட வேண்டும் என்று சேலையை பிளிட் வைத்து இடுப்பில் சொறுகி விட்டபோது,  மேடையின் முன் பார்வையாளர் பகுதியில் இருந்த என் மனைவியை ” ஏன்டி மரகதம், ஓம் புருசன் ஒருநாளாவது இப்டி ஒனக்குக் கட்டி விட்ருப்பானா?“ என நாடகம் பார்த்துக் கொண்டிருந்த உறவுகள்   சீண்டியதன் விளைவு  வீட்டில் ஒரு யுத்த காண்டம் நடக்கப் போகிறது என்றுதான்  எல்லோருக்குள்ளும் ஒரு எதிர்பார்ப்பு. 

                              நாடகம் முடிஞ்சதும்   ஒப்பனை களைச்சு,. கலைஞர்களுக்கு சம்பளமெல்லாம் கொடுத்துட்டு   என் மனைவியைச் சந்திக்க    அவளைத் தேடுனா ஆளைக் காணோம். 

“ அண்ணே, அக்கா அவங்க சித்திகூட பிள்ளைகளைக் கூட்டிக்கிட்டு   வீட்டுக்குப்  போயிட்டாங்க” ன்னு  ஒரு பையன் தகவல் சொன்னான்.  

இதையெல்லாம் பார்த்தவர்கள்   நா அப்படி நடிச்சது பிடிக்காமதான் என் மனைவி  கோவிச்சுக்கிட்டு போயிட்டான்னு நெனைச்சு,

 “ வீட்டுக்குப் போனதும் இருக்கு வாத்தியாருக்கு  செமத்தியா மொத்து” ன்னு முனுமுனுத்ததும்  என் காதுல விழுந்தது.

வீட்ல என்ன நடக்குமுன்னு அவங்களோட கற்பனை இது.

” ஏங்க, அத்தனை பேருக்கு முன்னால  அவளுக்கு சேலையைக் கட்டி விடுறீங்களே உங்களுக்கு வெட்கமா இல்லை?” ன்னு அவ கேப்பா


” வெறும் நடிப்புக்குத்தானே அப்டிச் செஞ்சேன்” ன்னு அவன் சொல்லுவான்


” பிளிட் மடிச்சு அவ கையில கொடுத்து சொறுகிக்கச் சொல்ல வேண்டியதுதானே, அதென்ன நீங்களே கொண்டுபோய் சொறுகிவிட்டு.... அதுவும் தொப்புள்க்குக் கீழே” ன்னு அவ  கொமுட்டுல   இடிப்பா


” அது லோகிப் சேலை அப்படித்தான்டி கட்டணும்”ன்னு அவன் வழிவான்


” ஓகோ, அப்படியே சன்னல் வச்ச ஜாக்கெட்  ஊக்கையும்  மாட்டிவிட வேண்டியதுதானே”ன்னு அவ மொகரையக் காட்டுவா


“  இல்லேப்பா, ஒரு பட்டிக்காட்டு வெகுளிப்பொண்ணுக்கு நாகரீகமா இருக்கது எப்படிங்கிறதுக்காக...” ன்னு அவன் இழுக்குறதுக்குள்ள 


“ நீங்க அந்த தளுக்குக் காரியோட வீட்டுல போயி வேணுன்னாலும் அதையெல்லாம் செய்யுங்க, நா எங்க அப்பா வீட்டுக்குப் போறேன்னுட்டு அவ ஓடப்போறாப் பாரு”


                    இப்படியெல்லாம் கற்பனை செஞ்சு பாத்தவங்களுக்குத் தெரியுமா    அன்னக்கிப் பகல் பயிற்சியின்போது  வீட்ல   அப்படி பிளிட் வச்சு சேலை கட்டிவிட எனக்குக் கத்துக் கொடுத்ததே என் மனைவிதான்னு.   

                 ஆமாம். 1964ல் இருந்து மேடை நாடகத்தில் ஈடுபட்டிருந்த எனது நடிவடிக்கைகள் பற்றி நன்றாக அறிந்து,  1971ல்என்னை விரும்பித் திருமணம் செய்து கொண்டவள் என் மனைவி. உள்ளுர்வாசி.

                   மேலும் எனது நாடகத்தில் நடிக்கவரும் நடிகையர் முதல்நாள் ஒத்திகைக்கு வரும்போதெல்லாம், எனது வீட்டில்தான் தங்குவார்கள். அவர்களிடம்  இணக்கமாக, நல்ல நட்புடன் பழகுவதுடன் அவர்கள் விரும்பும் சுவையான உணவைச் சமைத்து வழங்குவதும் எனது மனைவியே.

                 இன்னும் ஒருபடிமேலே சொல்லணுமுன்ன,      நாடகத்தில் வரும் காதல்காட்சிகளை    எனது வீட்டில் வைத்துதான் நாயகன் நாயகிக்குப் பயிற்சி யளிப்பேன். அதனால் எள்ளளவும் எனது நடத்தை மீது சந்தேகப் படமாட்டாள் என் துணைவி.

             எனது மேடை நாடகத்திற்கான  பல கதைகளின் மையக் கருத்துகள் அவள் எனக்குத் தந்தவை என்பதைச் சொல்வதில் எனக்கொன்றும் தயக்கமில்லை.

             சுருங்கச் சொன்னால்  நான்  ஐம்பதாண்டுகளாய் சமூக மேம்பாட்டிற்கான   கலை இலக்கியத் துறையில் களமாட உற்ற துணையாய் இருந்தவள் என் இணையாள் என்பது மிகையில்லை. 


           மலரினும் மென்மையாக இருக்கும் மகளிர் எரிமலையாய் மாறுவதற்கும், எரிந்து சாம்பலாவதற்கும்  ஆணாதிக்க வன்மங்களே காரணம்  என்பதை  தடம் மாறிப்போன  அவள்  தோழியின்  வாழ்வியல் சம்பவத்தை அடிக்கடிச் சொல்லி ஆதங்கப்படுவாள் என் இணையாள்.


            அப்படி அவள் தந்த ஒரு கதைக்கருதான் “ செம்பறவை” என்னும் பெயரில்  மேடை நாடகமாக 1983ல் அரங்கேறியது.






                   காய்கறி விற்க  வந்த காவேரி என்ற பெண்ணை ஒரே அறையில் தங்கிப்படித்த இரு கல்லூரி மாணவர்கள் கூட்டுப்பாலியல் வன்புணர்வு செய்கின்றனர் .
அதன்விளைவாகக் கருவுற்ற அவள் அவர்களிடம் தன்னைத் திருமணம் செய்துகொள்ள மன்றாடுகிறாள். அவர்கள் அவளைத் திருமணம் செய்து கொள்வதாய்ச் சொல்லி  ஏமாற்றிவிட்டு தேர்வு முடிந்ததும்  வெவ்வேறு திசைகளுக்கு இடமாறிச் சென்று விடுகின்றனர்.

                       திருமணமாகாமல்     கர்ப்பிணியான அவளை ஊர் தூற்றுகிறது. அவளை அந்த நிலைக்கு ஆளாக்கிய இருவரில் ஒருவனாவது தன்னை  மனைவியாய் ஏற்றுக் கொள்வான் என்ற நம்பிக்கையில், தனது 4 வயதுத் தம்பியுடன்   ஊரைவிட்டு வெளியேறி  அவர்கள் தந்த முகவரிக்கு அவர்களைத் தேடிச் செல்கிறாள். முகவரி பொய்யென அறிந்து புலம்பிய அவளுக்கு ஒரு  மூதாட்டி  உதவிட அவளுக்கு ஒரு பெண்மகவு பிறக்கிறது.


                        நான்கு வயது   தம்பியுடனும் ஆறுமாதக்        கைக்குழந்தையுடனும் ஆதரவற்ற நிலையிலிருந்த அவளுக்கு வாழ்வளிக்க முன்வருகிறான் செங்கோடன் என்னும் அன்முறையாளன்.     


                     அவளின் தம்பியையும் கைக்குழந்தையையும்  சுந்தரேசன் என்பவர் நடத்தும் அனாதை இல்லத்தில் ஒப்படைத்து விட்டு  அவளை ஆந்திரப் பகுதிக்கு அழைத்துச் செல்கிறான் செங்கோடன் .      அங்கு   அவளை   விபச்சாரத் தொழிலில் ஈடுபடுத்துகிறான்.   


                   மென்மையான மலர் மனம் படைத்த அவள் தன்னை வஞ்சித்த இருவரையும் தேடிப் பழிவாங்க வன்மையான செம்பறவையாக மாறுகிறாள்.   அவளை ஏமாற்றிய இருவரையும் தேடிப் பழிவாங்க ஒவ்வொரு ஊராக  அவளை  அழைத்துச் சென்று  கேளிக்கை விடுதிகளில் விலைமாதாக ஆக்கிப் பணம் சம்பாதிக்கிறான். 


 18 ஆண்டுகளுக்குப் பின்    தன்னை  வன்புணர்ச்சி செய்தவர்களில் ஒருவன்     திருச்சியில்  வழக்குரைஞராகவும், இன்னொருவன் கோவையில் மருத்துவராகவும் இருப்பதை அறிந்து அவர்களைப் பழிவாங்க முனைகிறாள்.




                     அவளின் முயற்சியில் வெற்றி பெற்றாளா? 

                                                 ---அடுத்த தொடரில் 

Sunday, May 21, 2017

எனது மேடை நாடக அனுபவங்கள் தொடர்ச்சி-22

                  
மனைவி முன்னிலையில்   நடிப்பது தப்பா?

              கோதண்டராமபுரம் பஞ்சாயத்துத் தலைவரின்   அன்பான வேண்டுகோளைத் தவிர்க்க முடியாமல், 1979 ல் நடத்தி பெயர்பெற்ற  சமூகவியல் நாடகமான “ அவளுக்கு ஒரு நீதி” நாடகத்தை  1985 ல் பழியஞ்சி ஊர்த் திருவிழாவில்   நடத்த ஒத்துக் கொண்டேன். 

                   முன்பு நடித்த கதாநாயகனோடு  புதிய நடிகையரை வைத்து பயிற்சியும் அளித்து நாடகத் தயாரிப்பு நடந்து கொண்டிருந்தது.  


                   பஞ்சாயத்தைச் சேர்ந்த 18 பட்டிகளிலும் நாடகம் பற்றிய துண்டறிக்கை விளம்பரங்கள் தடபுடல் செய்யப் பட்டிருந்தது. நாடகம் மூன்று நாள்கள் இருந்த வேளையில்  கதாநாயக நடிகருக்கு பணி பதவி உயர்வு வந்து, உடனடியாக  சென்னை அலுவலகத்தில் பணியில் சேர வேண்டிய கட்டாயம். இரண்டு நாள்களுக்குள் எப்படி ஒரு புதியவரை  மூன்றுமணிநேர நாடகத்திற்குத் தயாரிக்க முடியும்?


              வேறு வழியின்றி நானே அந்நாடகத்தில் கதாநாயகனாக களத்தில் இறங்குவது என  முடிவு செய்தேன்.   மேடை நாடக     இயக்குநராக,  அந்த நாடகத்தில் நடிக்கும் அத்தனை பாத்திரங்களுக்குமான வசனங்களைச் சொல்லிக் கொடுத்திருந்ததால்   கதா நாயகனின்  வசனங்கள்  

 மனப்பாடம் ஆகியிருந்தது.  அந்தத் துணிச்சலில் நானே கதாநாயக அவதாரம் எடுத்தேன்.

             இதில் மறக்க முடியாத பல புதிய அனுபவங்களைச் சந்திக்க வேண்டியதிருந்தது. 


              நாடகத்தன்று காலையே நடிகையரை எனது வீட்டிற்கு வரச் செய்து ஒரு இறுதி ஒத்திகை பார்த்துக் கொண்டு, மாலை 5.00 மணிக்கு அந்த ஊருக்குச் செல்லத் திட்டமிட்டிருந்தோம். 


              எங்களுடைய பொல்லாத நேரம் அன்று  அரசியல் காரணமாக பொது வேலை நிறுத்தம் .


              எல்லாப் போக்குவரத்துகளும் நின்று போயிருந்தன.  வேறு வழியின்றி  நாடகம்  நடக்கும் 5 கல் தொலைவிலிருந்த அந்த கிராமத்துக்கு  நடிகையரை மிதிவண்டியில் ஏற்றிக் கொண்டு 
சென்றோம்.  (அப்போது எங்கள் குழுவில் யாரிடமும் உந்தூர்தி இல்லை.)  இசைக் கலைஞர்களும் தங்கள் இசைக் கருவிகளுடன் அவர்களுடைய மிதி வண்டியிலேயே  அந்தக் கிராமத்துக்கு வந்து  சேர்ந்தனர். அது ஒரு வித்தியாசமான அனுபவம்

               அந்தக் கிராமத்துக்குச் சென்று நாடகக் கொட்டகையைப் பார்த்ததும்  ஒரே   அதிர்ச்சி.  வழக்கமாக  அந்த ஊர்த்திரு விழாவில்    மண்மேடையின் மீது  ஒரு சரிவான கீற்றுக் கொட்டகை போட்டு,   கதம்ப நிகழ்ச்சிதான் கலைநிகழ்ச்சியாக நடத்துவார்களாம்.    முன்புறம் சற்று உயர்ந்தும் பின்புறம் சரிவாகவும் உள்ள கீற்று க் கொட்டகையில் எப்படித் திரைச் சீலைகள் கட்ட முடியும். செலவு சிக்கனம் என்பதால்  திரை அமைப்பாளரை அழைத்துச் செல்லாமல் நாங்களே மூன்று திரைச் சீலைகளை நடிகர் சங்கத்தில் வாடகைக்கு எடுத்துச் சென்றிருந்தோம். அதை எப்படி அந்த சரிவான கொட்டகையில் கட்டுவது?


                    அழைத்திருந்த  பஞ்சாயத்துத் தலைவரைத் தேடினேன். அவர் ஊருக்கு புறத்தே உள்ள கோயிலுக்கு கிடாவெட்டுப் பூசைக்குப் போயிருப்பதாகச் சொன்னார்கள். அங்கு எங்களைக் கவனிக்க வைத்திருந்த ஆளிடம் இந்தக் கொட்டகையில் நாடகம் நடத்த முடியாது என்று சொன்னதும், அவர் அங்கிருந்த கொட்டகை வேலை தெரிந்த இரண்டு பேரை அழைத்து வந்து பின்புறம் சரிந்திருந்த கொட்டகையை ஒரேமட்டத்துக்கு உயர்த்திக் கட்டித் தந்தார். “மேடைக்கு ஏதாவது பெஞ்சுகள் கிடைக்குமா” எனக் கேட்டேன். அரை மணி நேரத்திற்குப் பின்   நான்கு பெஞ்சுகளைக் கொண்டு வந்தார்கள் . அதைவைத்து மேடை அமைக்க முடியுமா? பேசாம மண்மேடையிலேயே     நடிப்பது என்று முடிவுக்கு வந்தோம். நல்லவேளையாக நெல்களத்தை மூடும் தார்ப்பாய் ஒன்று கொண்டு வந்து  அந்த மண்மேடையில் விரித்துத் தந்தார்கள்.


              நீளமும்   அ கலமும் குறைவான அந்தக் கொட்டகையில் சுருக்கமும், இழுபடுவதுமாய் எங்கள் மன்ற நண்பர்கள் திரைகளைக் கட்டி முடித்தார்கள்.


                  500 ரூபாய்க்குள்  ஒரு அமெர்ச்சூர் நாடகத்தை நடத்த வேண்டிய நெருக்கடியால், ஒப்பனைக் கலைஞரை ஒப்பந்தம் செய்து அழைத்துச் செல்லாமல்  ஒப்பனைப் பொருள்களை வாங்கி நாமே  ஒப்பனை செய்து கொள்ளலாம் என  முடிவு செய்திருந்தேன்.  அங்கு ஒப்பனை செய்யத் தனியான இடம் கேட்டபோது     கதவு சன்னல்கள் பொருத்தப் படாது  ஒரு ஓட்டு வீட்டைக் காட்டினார்கள்.   அந்த வீட்டில், ஒரு போர்வையை திரைபோட்டு நடிகையரை ஒப்பனை செய்யச் சொல்லி, நடிகர்களுக்கு நான் ஒப்பனை செய்யத் தொடங்கினேன். 


                இரவு 8.00 மணிக்கு கிடாய் வெட்டு முடிந்து மக்கள் கூத்துப் பொட்டலில் கூடத் தொடங்கி விட்டனர்.   நடிகையர்  தேநீர் கேட்க, அன்று கடையடைப்பு என்பதால் ஒரு வீட்டில் வரக்காப்பி போட்டுக் கொடுத்து விட்டார்கள். வேறு வழியின்றி அதைக் குடித்தோம். 


           ஏற்பாடு செய்த தலைவர்   அப்போதுதான்  ஒப்பனை  செய்து கொண்டிருந்த என்னிடம்   வ ந்து ” என்னப்பா ஆரம்பிக்கலாமா?“ ன்னு கேட்டார். வந்த ஆத்திரத்தை அடக்கிக் கொண்டு ,   இன்னும் கொஞ்ச நேரத்தில் தொடங்கலாம் என்றேன். 


              “ஒருவழியா சாப்பிட்டுட்டு   ஆரம்பி ங்களே” ன்னாரு.   பசியிலிருந்த   உறுப்பினர்களும் “சரி” ன்னு சொல்ல எல்லாருக்கு  தையிலையில் சாப்பாடு வந்தது . அவர்கள் சாப்பிடும் நேரத்தில்  நானும் கொஞ்சம் அரிதாரத்தைத் தடவிக் கொண்டேன்.


               மேடையில் இடமில்லாததால் இசைக்குழு ஹென்றி, ஜோசப் குழுவினர்  இரண்டு பெஞ்சுகளில் மேடையின் முன்னால்  அமர்ந்தனர்.


              நான் கதாநாயகனாய் நடிக்க வேண்டியிருந்ததால்  நாடக ஸ்கிரிப்ட் பார்க்க  அங்கு வந்திருந்த கோயில்பட்டி பாரதி மன்ற அன்பு சிதம்பரம் அவர்களைக் கேட்டுக் கொண்டேன்.  அப்படி இப்படின்னு தட்டிக் கொட்டி நாடகத்தை  தொடங்கும்போது மணி பதினொன்னு.


              அரங்க அமைப்பு, ஒப்பனை. இசை எப்படி இருந்தாலும்  நடித்தவர்கள்  தங்கள் பாத்திரங்களை உணர்ந்து சிறப்பாகவே நடித்தனர்.


              உறவு விட்டுப் போகாமல் இருக்க, அப்பாவின் கட்டாயத்தால்,  பட்டிக்காட்டுப் பெண்ணைக் கட்டிக் கொண்ட பட்டணத்தில் பணிபுரியும்  நாயகன்,  தன் மனைவியை நவநாகரீக மங்கையாக மாற்ற முயலும் கதை  அது.  


                 அதில் ஒரு காட்சியில் பின் கொசுவம் வைத்து மட்டும்  சேலை கட்டத் தெரிந்த  கிராமத்து   மனைவிக்கு  கணவன்  வெளிநாட்டு சார்செட் புடவை வாங்கிக் கொடுத்து  நவ நாகரீகமாக   பிளிட்  ( முன் பிரில் ) வைத்துச் சேலைகட்டக் கற்றுக் கொடுக்கும் காட்சி. 


                 வழுவழுப்பாக நழுவி விழும்  அந்தப் புடவையைக் கட்டமுடியாமல் மனைவி தடுமாறும் போது கணவன்  தானே பிளிட் மடித்து அவள் இடுப்பில் சொறுகி விடுகிறான். கணவனாக நடிக்கும் நான் அப்படிச் செய்தபோது, எதிரே இருந்த பெண்கள் பக்கம் ஒரே சிரிப்பொலி. 


                கூடவே  ” ஏன்டி மரகதம் ஓன் புருசன் ஒரு நாளாவது ஒனக்கு இப்டி சேலை கட்டி விட்ருப்பானா?”  ங்கிற கமெண்ட் வந்தது.  


              விமர்சனம் வந்த பக்கம் அப்போதான் பார்த்தேன்  மேடைக்கு முன்னால் உட்கார்ந்து நாடகம் பார்க்க வந்த     என் மனைவியைச் சுற்றி இருந்த சொந்தங்கள் அவளை அவ்வாறு சொல்லிக் கிண்டல் செய்து கொண்டிருந்தார்கள்.


              மேடை நாடகம் என்னவோ அருமையாக இருந்ததாகச் சொன்னார்கள். 


                மறுநாள் வீட்டில்...


                    --- என்ன நடந்ததுன்னு அப்புறம் சொல்றேன்.

Thursday, May 18, 2017

எனது மேடை நாடக அனுபவங்கள். தொடர்ச்சி-21



ஆளுக்கு ஒரு நீதியா?

                    சின்னக் குழந்தை பாத்திரங்களை  வைத்து நாடகம் போடுவதில் ஏற்பட்ட சிரமத்தால் இனி  குழந்தை பாத்திரங்களே இல்லாத  கதைகளை எழுதுவது என்ற  முடிவில் உறுதியாகவே இருந்தேன்.

                அதேபோல   பொது வெளியில் போடப்பட்ட கீற்றுக் கொட்டகை,  20க்கு 16 பலகை அடித்த மேடைகளில், நான் ஆசைப்பட்ட  பின்புலக் காட்சிகளை அமைப்பதில்  எதிர்பாராமல் நடந்த சிக்கல்களால் இனி  அமெர்ச்சூர் மேடைகளுக்கு அடங்காத  செட்டிங்களைப் போடக்கூடாது என்ற முடிவோடு  வெறும் திரைச்சீலைகளை மாற்றும் காட்சிகளை வைத்து ஒரு நாடகத்தை எழுத முனைந்தேன்.

             அப்படி  பெண்களின் பிரச்சனையை மையக்கருவாகக் கொண்டு  எழுதப்பட்டு 1979ல்   அரங்கேற்றிய நாடகம்தான்
  “ அவளுக்கு ஒரு நீதி”


                     அதிக படிப்பறிவில்லாது , கிராமத்து பழக்க வழக்கங்களில் ஊறிப்போன ஒரு கிராமத்துப் பெண்ணை, சென்னையில் ஏற்றுமதி நிறுவனத்தில் பணிபுரியும் ஒரு  கிராமத்து      இளைஞன் உறவுமுறை விட்டுப் போகாமலிருக்கப் பெற்றோர் செய்த ஏற்பாட்டின்படி  திருமணம் செய்து கொள்கிறான்.

                அந்த இளைஞனின் கிராமத்துத் திருவிழாவினைக் கண்டுகளிக்கச்  சென்னை நிறுவன நண்பர்கள் வருகின்றனர். பின் கொசுவம் வைத்துக் கட்டிய கண்டாங்கிச் சேலையுடனும், நெற்றியில்    காசளவு  குங்குமப் பொட்டுடனும், அள்ளிச் செறுகிய கொண்டையுடனும்  வெகுளியாய் வரவேற்ற தங்கள் நிறுவன உதவி மேலாளரின் மனைவியின் கோலத்தைப் பார்த்த  அந்த  நண்பர்கள் பகடி பேசுகின்றனர்.

                   தன் மச்சினன்  ஊரில் நடக்கும்  முதல்   திருவிழா   தேவைக்கு,  உச்சிக்குடுமியோடு   அவளது அண்ணன், ஆட்டுக்குட்டி, சேவல், அச்சுவெல்லம், பச்சரிசி,  காய்கறி இலைக்கட்டு முதலான சீர்கள் கொண்டு வருகிறான். இவற்றைப் பார்த்த நாகரீக மோக  நகரத்து    நண்பர்கள்  கதைத் தலைவனைக் கேலி செய்கின்றனர்.

                ஒரு வெளிநாட்டுக்கு அழகுப் பொருள்களை ஏற்றுமதி செய்யும் நிறுவனத்தின்  உதவி   மேலாளர் தனது தகுதிக்கேற்ப அவரின் மனைவியை மாற்ற வேண்டுமென்று நண்பர்கள்  வற்புறுத்துகிறார்கள்.

                கிராமத்துக் கலாச்சார நடை உடை பழக்க வழக்கங்களை மாற்ற முனையும்  கதைத்தலைவனை அவனது அப்பா கிராமத்துக் கட்டுப்பாட்டைக் காரணம் காட்டி மறுக்கிறார்.

                  அவளை நாகரீக  மங்கையாக  மாற்ற சென்னைக்கே அழைத்துச் செல்கிறான் அவளின் கணவன். அங்கு அவளை மாற்ற அவன்படும் பாட்டை நகைச்சுவையாய்ச் சொல்லியிருந்தேன்.

               மேலாளர்  பதவி  உயர்வு பெற்றமைக்காக அவன் நண்பர்களுக்கு  ஒரு நட்சத்திர விடுதியில் விருந்து கொடுக்கிறான்.   விருந்துக்கு வந்த கிராமத்து மச்சினன்,   அங்கு நடந்து கொண்டிருந்த      மேற்கத்திய இசை நடனத்திற்கிடையே,  நாட்டுப்புறப் பாட்டுப்பாடி ஆட, அவனுடன் கதைத் தலைவியும் சேர்ந்து ஆடுகிறாள்.  அதைக் கண்ட அவனது  நண்பர்கள்  செய்த கேலிகளால்,   கதைத் தலைவன் அவமானப்பட்டு,    அவளைக் கிராமத்துக்கே திரும்ப அனுப்புகிறான். மேலும் அவளை விவாகரத்து செய்யவும்  தன் தந்தையிடம் வற்புறுத்துகிறான். ஊர்கூடி பஞ்சாயத்து நடக்கிறது.





                 வாழ்க்கையை இழக்க விரும்பாத கதைத்தலைவி,
 தன் கணவன் விருப்பப்படியே  இனி நடந்து கொள்வதாய் பஞ்சாயத்தாரிடம்     சொல்லி, பட்டணத்திற்குச் சென்று  கணவனுடன் சேர்கிறாள்.

              “முள்ளை முள்ளால் தான்  எடுக்க வேண்டும்” என்று முடிவெடுக்கிறாள். தன் கணவன் விரும்பும்படி நடை, உடை பழக்கங்களை மாற்றிக் கொள்கிறாள்.  இன்னும்  ஒருபடி மேலே போய் அவனுடைய நண்பர்களுடன் மிக நெருக்கமாகப் பழகவும், கேளிக்கை விடுதிகளுக்குச் செல்லவும் தொடங்குகிறாள்.

                ஒரு கட்டத்தில்,  கேளிக்கை விடுதியில்  தன் கணவனின் நண்பனுடன் மது அருந்தி, ஆட்டம் போடுவதாகவும் நடிக்கிறாள்.
நாகரீகம் என்ற பெயரில் தன் மனைவி அளவுமீறி அயலானுடன் பழகுவதையும். ஆடம்பர மோகம் கொண்டு அலைவதையும் கண்டு மனம் புழுங்குகிறான் கதைத் தலைவன்.  தன்மான இழப்பைத் தாங்க முடியாது தற்கொலை முயற்சிக்குச் சென்ற கணவனைத் தக்க சமயத்தில் காப்பாற்றி,  அவனை பண்பாட்டுச் சீரழிவை உணரச் செய்கிறாள்.

              இந்த நாடகம் சுற்று வட்டாரக் கிராமப்புற மக்களால் பெரிதும்  பாராட்டப் பட்டது. அதன் விளைவாக எனது உறவினரும்  கோதண்ட ராமபுரம் பஞ்சாயத்துத் தலைவருமாயிருந்த திருமலை அவர்கள், அவர்கள் ஊர்த் திருவிழாவில் அந்த  நாடகத்தை 1985ல்நடத்த வேண்டுமென்றார்.  ஆனால் அவர்  மிகக் குறைவான செலவில் நடத்தித்தர வற்புறுத்தினார் . ஆசைப்படுகிறாரே என நானும் ஒத்துக் கொண்டேன்.  முன்னர் நடித்த  நடிகையர்அ ந்த தேதியில் வேறு நாடகத்தில் ஒப்பந்தமாகி   இருந்தமையால்  திருச்சியிலிருந்து கதாநாயகி நடிகையையும் புதுக்கோட்டை நடிகர் சங்கத்திலிருந்து நகைச்சுவை   நடிகையும் ஒப்பந்தம் செய்தேன்.

                 பழைய கதாநாயகனை வைத்து புதிய நடிகைகளோடு இரண்டு மூன்று  பயிற்சியும் நடந்தது. பதினெட்டுப் பட்டி கிராமத்திலும் எங்கள் நாடகம் நடப்பது பற்றி துண்டறிக்கை விளம்பரம் செய்யப்பட்டது.

                நாடகம் நடக்க மூன்று நாட்களே  இருந்த நிலையில் , கதாநாயகனாக நடித்தவருக்கு ( கல்வித் துறையில்  பணிபுரிந்தவர்) திடீரென  சென்னைக்கு பணி உயர்வு ஆணை வந்தது.அவர் உடனடியாக புதுக்கோட்டையிலிருந்து விடுபட்டுச் 
சென்னை அலுவலகத்தில் பணியில் சேர வேண்டிய நிலை.

             அவருக்கு பணிமுக்கியம். எனக்கு நாடகத்தை நடத்திக் கொடுக்க வேண்டிய கட்டாயம். மூன்று நாள்களுக்குள் ஒரு புதியவரை அந்தப் பாத்திரத்திற்குத் தயாரிப்பது அத்தனை எளிதான செயலா?
.
                              அந்த நிலையில் என்ன செய்வது?

                                                                                        --- அடுத்த தொடரில்






  

Tuesday, May 16, 2017

எனது மேடை நாடக அனுபவங்கள் தொடர்ச்சி 20

               

வலிகளோடும் வழிகள் தேடி... 

                  நாடும் வீடும்   மேடை நாடகத்தில், வஞ்சகன்  ஒருவனால் வஞ்சிக்கப்பட்ட பெண்  மனமொடிந்து    தன்னை மாய்த்துக் கொள்ள காட்டுப் பகுதிக்குள் ஓடுகிறாள். அங்கே மரம்வெட்டும் தொழிலாளி ஒருவன், வெட்டி விழுந்த மரத்தினடியில் சிக்கி உயிருக்குப் போராடிக்   கொண்டிருக்கிறான். அதனைக் கண்ட அப்பெண் அவனைக் காப்பாற்ற முயல்கிறாள். அவன் மீது விழுந்திருந்த மரத்தை (  அரங்கத்திற்கேற்ப கிளைகள் வெட்டப்பட்ட உண்மையான உதியமரம் ) அகற்ற முனைகிறாள். ( ஒத்திகையில் அட்டை மரத்தைப் புரட்டிப் பயிற்சியெடுத்த அந்த நடிகை உண்மையான மரத்தைப் புரட்டச் சிரமப்படுகிறாள். ஒருவழியாக அந்த மரத்தைப் புரட்டி நிமிர்த்தி வைத்துவிட்டு, மரத்துக்கு    அடியில் மயக்கமுற்றுக் கிடக்கும் விறகுவெட்டிக்கு முதலுதவி செய்ய அவனை நோக்கிக் குனிந்த போதுதான் எதிர்பாராத அந்த நிகழ்வு நடந்தது.

                 நிமிர்த்திய மரம் மீண்டும் கீழே விழாமலிருக்க அரங்கத்தின் மேல் கூரையிலிருந்து ஒரு கனமான கொக்கியைத் தொங்க விட்டிருந்தோம். மரத்தை நிமிர்த்தியதும் அதன் கவைப் பகுதியை அந்தக் கொக்கியில் மாட்டிவிட அந்த நடிகை மறந்துவிட்டார். விளைவு, நிமிர்த்திவைத்த அந்த மரம் அந்த நடிகையின் மேல் விழ, அதன் அழுத்தம் தாங்காமல் நடிகை  கீழேகிடந்த விறகு வெட்டிமேல் குப்புற விழ,இருவரும் மரத்தினடியில் ஒருவர்மேல் ஒருவர் கிடக்க  ...      காட்சி அப்படித்தான்போல என நினைத்த பார்வையாளர் பகுதி இளைஞர்களின் விசிலும் கைதட்டலுமாகிய ஆரவாரம் கிளம்பியது .  அரங்கப் பொறுப்பிலிருந்த எங்களுக்கோ என்ன செய்வது என்ற பரபரப்பு தொற்றியது . காட்சிக்குள் நுழையவும் முடியாமல் , நிறுத்தவும் முடியாமல் அப்போது  பட்டபாடு அப்பப்பா.... இதுதான் மேடை நாடகம் நடத்துவதில் ஏற்படும் சிக்கல்களே . திரைப்     படப்பிடிப்பானால் தவறாய்ப்போன காட்சியை நீக்கிவிட்டு   அடுத்த டேக் போய் விடலாம். மேடையில் என்ன செய்ய முடியும் ? கல்லில் விழுந்த கண்ணாடிதான்.

              திரையை மூடிவிட்டு மரத்தைப் புரட்ட, விளக்கணைக்கும் பொத்தானை அழுத்தினால் ஒளியமைப்பாளரும் அந்த நெருக்கடிக் காட்சியில் ஒன்றிப்போய் சிவப்பு விளக்கு எரிவதைக் கவனித்து மேடை விளக்கை அணைக்காமல் விட்டுவிட்டார். 

                  அந்த நெருக்கடியில்,  அந்த நாடகத்தில்  நகைச்சுவைப் பாத்திரத்தில் டீ க்கடை காயாம்பு வாக நடித்த ( தடித்த ) நடிகை  
 ( கதாநாயகி நடிகையின் உடன்பிறந்த    சகோதரிதான் )  காட்சிக்குள் நுழைந்து அந்த மரத்தைப் புரட்டிப்போட்டு, தன் தங்கையைத் தூக்கி விட்டார்.    ( இரத்த பாசமல்லவா )  அதன்பின் திரையிறக்க ப்பட்டது.  நல்ல வேளையாக விபரீதமாக எதுவும் நடக்க வில்லை.  நகைச்சுவை நடிகைதான்   கொஞ்சம் சீரியசாகிவிட்டார். தங்கைக்கு ஏற்பட்ட துன்பத்தால். கதாநாயகி தனது தவறுதான் என்று சொன்னபின்  சமாதானமானார்.  நடிகையை ஆசுவாசப் படுத்தி நாடகத்தைத் தொடர்ந்தோம். இடைப்பட்ட நேரத்தில்  வெண்திரையில் சிலைடு போட்டுச் சமாளித்தோம்.

                புதுமையாக உண்மையான பின்புலத்தை அமைக்க வேண்டுமென்ற எனது ஆர்வக்கோளாறு காரணமாக, உண்மையான மரத்தை வைத்து வெட்டச் செய்ததோடு,  அந்த  நாடகத்தில் வரும் டீக்கடை காட்சிகளில் தேநீர் தயாரிக்கும்  வேம்பாவுடனான டீஸ்டாலை அரங்கத்தில் அமைத்திருந்தேன். 16 அடி அகல மேடைக்குள் அதை   நிறுவுவதிலும், அகற்றுவதிலும் ஏற்பட்ட சிரமங்களை  அப்புறம்தான் உணர்ந்தேன்.

              அந்த டீக்கடை வேம்பாவால் இன்னொரு சிக்கலும் ஏற்பட்டது.  அந்த நாடகத்தில்  மனைவியை இழந்த ஒரு செல்வந்தரின்  மூன்று வயதுக் குழந்தைக்கு  தாயாக  நடிக்க வேண்டிய நிர்பந்தம்  விறகுவெட்டியின் காதலிக்கு வருகிறது.  அந்தக் குழந்தை பாத்திரத்தில் எனது மூன்று வயது மகனை நடிக்க வைத்திருந்தேன்.

             அவனை எனது அப்பா தன் பொறுப்பில் மேடையின் மறை பகுதியில் வைத்துக் கொண்டிருந்தார்.  அரங்கப் பொருள்கள் மாற்றத்தால் காட்சிக்குக் காட்சி இடைவெளி அதிகமாகிப் போனதால் நாடகம் சற்று காலம் நீண்டே நடந்தது. 

             அடுத்து அந்தக்  குழந்தை பாத்திரம் தனது  அம்மாவோடு  வீட்டுக்குள்  சிரித்து விளையாடும் காட்சி  நடக்கவேண்டும்.   நேரமோ  இரவு 1.00 மணி..  குழந்தையாக நடித்த எனது மகன் அவனது தாத்தா மடியில் படுத்துத் தூங்கிவிட்டான்.  தூங்கிவிட்ட குழந்தையை விழிக்க வைக்க,  அவனை வைத்திருந்த எனது அப்பா  காட்சிக்காக வைத்திருந்த வேம்பாவில்  இருந்த பழைய தேநீரை அவனுக்குக்  குடிக்கக்  கொடுத்திருக்கிறார்.  அதைக் குடித்த குழந்தை வாந்தியெடுத்திருக்கிறான்.  பயந்துபோன என் அப்பா,  எனது மனைவியை அழைத்துக் கொண்டு குழந்தையைப்   பக்கத்திலிருந்த மருத்துவரிடம் காட்ட   கொண்டு போய் விட்டனர்.

                நாடகக் காட்சிகளை நகர்த்தும் மும்முரத்திலிருந்த எனக்கு,  காட்சிக்கான குழந்தையைத் தேடும்போதுதான் அரங்கப் பொறுப்பிலிருந்த உதவி இயக்குநர் நடப்பினைச் சொல்கிறார்.


         இப்போது  நான் குழந்தைக்கு அப்பாவாக மருத்துவம் பார்க்கச் செல்வதா?  நாடக இயக்குநராய் நாடகத்தைத் தொடர்வதா?  பாதியில் நாடகத்தை நிறுத்துவதா?  குழப்பத்தில் இருந்த நான் ஒரு முடிவுக்கு வந்தேன். குழந்தையை  எனது மனைவியும் எனது அப்பாவும்  மருத்துவரிடம் காட்டிக் கவனித்துக் கொள்வார்கள். நாடகத்தை என்னைத் தவிர யாராலும் தொடர முடியாது. எனவே நாடகத்தைத் தொடர முடிவு செய்தேன். 

இப்போது நாடகத்தில்  அம்மாவோடு விளையாடும் குழந்தைக்கு  என்ன செய்வது?  என்ற நெருக்கடி.   அந்தக் காட்சியில் நடிக்கும் நடிகையைக் கூப்பிட்டு     “தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தையோடு நான் போய்  விளையாடிவிட்டு வருகிறேன் ” என்று    குழந்தையின் அப்பாவாக நடிப்பவரிடம்  சொல்லும்படி   உடனடியாக உரையாடலை மாற்றி நிலைமையைச் சமாளித்தேன். அடுத்தடுத்து      குழந்தை பாத்திரம் பங்கேற்கும் காட்சிக்கு என்ன மாற்று செய்வது என்ற குழப்பத்தோடு காட்சிகளை நகர்த்திக் கொண்டு  இருந்த நிலையில்,  என் அப்பா எனது மகனோடு மேடைக்கு வந்து  “வாந்தி நின்னுடுச்சுப்பா” ன்னாரு.  சோர்வாக இருந்த என் குழந்தை  மீண்டும் மேடைக்கு வந்த புத்துணர்ச்சியில் அவனுக்கான  உரையாடல்களை  உடன் நடிப்பவர்கள் வாயிலாக வெளிப்படுத்தி ஒருவாறு  நாடகத்தை முடித்தேன். 

              அந்த நாடகத்தில் பெற்ற   கசப்பான பட்டறிவால் 
 “ இனிமே  குழந்தை பாத்திரங்களை  வைத்து நாடகம் எழுதவே கூடாது”
” புதுமைங்கிற பேர்ல மேடைக்கு அடங்காத செட்டிங்களை அமைக்கவே கூடாது” ங்கிற இரண்டு உறுதிகளை  எனக்குள்ளே எடுத்துக்கிட்டேன்.  


 சமூக மாற்றம் காண விழையும் படைப்பாளிகளின்    மனம்   கிளை  தாவும்   குரங்குகள்தானோ? அவை  ஓரிடத்தில்  கட்டுப்பட்டு நிற்குமா? 


எடுத்த முடிவுகளில்  நான் உறுதியாக நின்றேனா?  

               --- அடுத்த தொடரில்  சொல்கிறேன்.


Friday, May 12, 2017

எனது மேடை நாடக அனுபவங்கள். தொடர்ச்சி-19


அவனைக் காப்பாற்றப் போய் அவள்...?

                   

              செறிவும் நிறையும் செம்மையும் செப்பும்
அறிவும் அருமையும் பெண்பாலான - எனப் பெண்டிரின் இலக்கணமுரைக்கிறது தொல்காப்பியம்.   

பெண்ணின் பெருந்தக்க யாவுள  என்கிறார்  திருவள்ளுவர். 

பெண்டிரும் உண்டியும் இல்லெனின்  மக்கட்கு 
உண்டோ ஞாலத்து உறுபயன்? என்கிறது மணிமேகலை.

ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால் 
அறிவிலோங்கி இவ்வையம் தழைக்கும் - என்கிறார் முண்டாசுக்கவி.

மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா - என்றார் கவிமணி.


                இத்தகு பெருமைக்குரிய பெண்ணினம்  காலப் போக்கில் அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்னும் நான்கு முள்வேலிச் சுவர்களுக்குள்  அடைக்கப்பட்டு ஒடுக்கப்பட்டதுதான்  வேதனைக்குரியது.


பெண்டிர்க்கழகு எதிர் பேசாதிருத்தல்,
குலமகளுக்கழகு கொழுநனைப் பேணுதல்

என்னும் இற்றுப்போன சொலவடைகளால் தன்மை 
அற்றுப் போகச் செய்தனர் பெண்டிரை.. 

               அடுப்பூ தும் பெண்களுக்குப் படிப்பெதற்கு எனக் கல்வி  மறுக்கப்பட்டு, ஆணுக்குரிய போகப் பொருளாய், வெறும் பிள்ளை பெறுகின்ற எந்திரங்களாய்  ஆணாதிக்கத்திற்கு அடிமைப்பட்டு ஒடுக்கப்பட்டுக் கிடந்தது.,  

          
         பெண்கள் உயர்வு பெறாமல் ஒரு சமூகம் மேம்படாது.

ஒரு பெண் முன்னேற்றமடைய வேண்டுமானால் அவள் கையிலிருக்கும் கரண்டியைப் பிடுங்கி விட்டு புத்தகங்களைக் கொடுங்கள் என்றார் பெரியார் 

பாட்டைத் திறப்பது பண்ணாலே,-இன்ப 
வீட்டைத் திறப்பது பெண்ணாலே

பெண்கள் அறிவை வளர்த்தால் வையம் 
பேதமை அற்றிடும் காணீர்

பெண்ணுக்கு விடுதலை நீர் இல்லையென்றால் 
பின்னிந்த உலகினில் வாழ்க்கை இல்லை

என்று பாரதியும்

கல்வியில்லை, உரிமையில்லை பெண்களுக்குக் 
கடைத்தேற வழியின்றி விழிக்கின்றார்கள் 

பெண்ஆண் என்ற இரண்டுருளை  யால் நடக்கும்  இன்பவாழ்க்கை

பெண்ணடிமை தீருமட்டும் பேசும் திருநாட்டு 
மண்ணடிமை தீர்ந்து வருதல்  முயற் கொம்பே

என்று பாரதிதாசனும்  தங்கள்  கவிச் சாட்டைகளைச் 
சுழற்றிய பின்னரே  

எட்டுமறிவினில்  ஆணுக் கிங்கே பெண்  இளைப்பில்லை காண்  என்று பெண்கள் கல்வியில்,  வேலைவாய்ப்புகளில்  விளையாட்டுத் துறையில், விண்வெளியில் வியப்பரிய சாதனைகளை நிகழ்த்தி வருகின்றனர் .

அவர்கள் கவிதைகளின் தாக்கம்தான்  என்னை  பெண்ணியம் பற்றிய கருப்பொருள் கொண்ட நாடகங்களை எழுதத் தூண்டியது .

இன்றும்  கிராமப் புறப் பெண்கள் பண்பாடு கட்டுப்பாடு என்ற பெயரில் விலங்கிடப் பட்ட நிலையிலிருந்து  மீள முடியாத  நிலை இன்னும் தொடர்வது வேதனைக் குரியதே.

கொடுத்த வாக்குறுதி, குடும்பச் சொத்துகளைக் காப்பாற்றல் ,  கொத்தடிமை முறை   என்னும் நெருக்கடிகளால் பல இளம் பெண்கள்  முதிய ஆண்களைத் திருமணம் செய்து கொள்வதும், அம்முதிய கணவர்கள் இறந்தாலும்  பெண்கள் மறுமணம் செய்து கொள்ளாமல்  விதவையாகவே  இருக்க வேண்டும்  என்ற கட்டுப் பாடு இன்னும் பல கிராமங்களில் இருக்கத்தான் செய்கிறது.

“வாடாத  பூப்போன்ற மங்கை நல்லாள்
மணவாளன் இறந்தபின் மணத்தல் தீதோ? என்ற பாவேந்தரின் வரிகள் தான்  விதவைத் திருமணத்தை வலியுறுத்தி 1972ல் நான் படைத்த “ பட்ட மரம்” என்ற நாடகம்.

பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் 
பாரினில் பெண்கள் நடாத்த வந்தோம் 

என்ற வரிகளைக் கருப்பொருளாய்க் கொண்டு 1976ல் 
உ ருவானதே ” நாடும் வீடும் ” என்னும்  எனது சமூக நாடகம்.



                   வஞ்சகன் ஒருவனால்  வஞ்சிக்கப்பட்ட  படித்த பெண் ஒருத்தி,  தற்கொலை செய்து கொள்ளக் காட்டுக்குள் செல்கிறாள்.  அங்கு  வெட்டி விழுந்த மரத்துக்கடியில் சிக்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த ஒரு   விறகுவெட்டியைக் காப்பாற்றுகிறாள்,  அவனது நேர்மையாலும்   உழைப்பாலும்  அவனையே விரும்பித்   திருமணம் செய்துகொள்கிறாள் . அவனுடைய தொழிலை மதிப்புக் கூட்டிச் சந்தைப் படுத்தி அவனைப்  பொருளாதாரத்தில்   முன்னேற்றமடையச் செய்கிறாள்.  

 கெடுவாய்ப்பாக அவளை  முன்னர் வஞ்சித்த அந்தக்     கெடுமதியாளன் அந்தக் காட்டுக்குள் தன் கூட்டாளிகளோடு மறைந்து வாழ்ந்து இந்நாட்டு இராணுவ இரகசியங்களை அந்நிய முகாமிற்கு விற்றுப் பொருளீட்ட முயல்கிறான். அவனைச் சட்டத்தின் கையில் பிடித்துக் கொடுத்து ஒரு நெருக்கடியான நேரத்தில் இந்த நாட்டைக் காப்பாற்றுகிறாள்.அந்த முயற்சியில் அந்தப் பெண் சந்திக்கும் சவால்களை எப்படிச் சமாளித்து நாட்டையும் வீட்டையும் காப்பாற்றுகிறாள் என்பதே  மேடை நாடகக்  கதையோட்டம்.

இந்நாடகத்தில் இரண்டு உத்திகளை மேடையில் காட்சிப் படுத்த திட்டமிட்டிருந்தேன்.

                       விறகு வெட்டி  மரத்தை வெட்டும் காட்சியில்      ஒரு உண்மையான மரத்தை நிறுத்தி ( மேடையின் உயர்த்திற்கேற்ப கிளைகளைக் குறைத்து ) கதைத் தலைவனை வெட்டச் செய்து அது அவன் மீது விழும்போது எப்படித் தாங்கிக் குப்புறச் சாய வேண்டும் என்று பயிற்சி யளித்திருந்தேன். அவரும் அப்படியே விழுந்தார். காட்சிப்படி தற்கொலை செய்து கொள்ள வந்த பெண் அதைப் பார்த்து,   அங்கு வந்து மரத்தைப் புரட்டி அவனைக் காப்பாற்ற வேண்டும்.

முதல்நாள் ஒத்திகையின்போது அட்டை மரத்தைத் தூக்கிய அந்த நடிகையால் கனமான உண்மையான மரத்தைத் தூக்க முடியாமல் திணறினார். ஒருவழியாக அந்த மரத்தை நிமிர்த்தியவர் கீழே மயங்கிக் கிடந்தவரைத் தூக்கக் குனிந்தபோது   யாரும் எதிர்பார்க்காத அந்த நிகழ்வு நடந்தது... 

                                          ----நடந்தது என்ன? அடுத்த  தொடரில்...



  

Monday, May 8, 2017

எனது மேடை நாடக அனுபவங்கள்-தொடர்ச்சி 18




தேவைகளும் தேடல்களும்.

                 
               தோல்விகளிலிருந்துதான்  புதுப்புது அனுபவங்கள் கிடைக்கின்றன. அந்த அனுபவங்களே என்னை அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர்த்திச் சென்றன.

             ஆம் தொடக்கக் காலத்தில் மேடை நாடகங்களை அரங்கேற்றுவதில் எனக்கு ஏற்பட்ட  தடைகள்தான்   என்னைத் தகர்ச்சிக்கு  சிலிர்த்தெழ வைத்தன.

              70 களில் தனிநபர் பிரச்சனைகளை மையப்படுத்தி  பொழுது போக்கு நாடகங்களைப் படைத்து அரங்கேற்றிய என்னைச் சீண்டிவிட்டவை சமூக அவலங்கள்தான்.

              அந்த அடிப்படையில்தான்  விதவைகள் மறுமணத்தை வலியுறுத்தும்   “ பட்ட மரம் ” நாடகம் உருவானது. பழமை விரும்பிகள் “கட்டி அறுத்தவளுகளுக்கு கல்யாணமா?” என்று முகம் சுழித்தார்கள்.   ஆனாலும் அதையே உந்துதலாக எடுத்துக் கொண்டு அதே நாடகத்தை பலமுறை அரங்கேற்றினேன்.

              அறியாமையாலும் மூடநம்பிக்கையாலும்   பக்தி என்னும் போர்வையில் பாழ்படும் பாமர மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த  1974ல் நான்  அரங்கேற்றிய “ நிலைக்கண்ணாடி” நாடகத்திற்கு  ஆன்மீக வாதிகள் ஏற்படுத்திய இடையுறு களைத்தான் முந்தையத் தொடரில் எழுதியிருந்தேன்.

             மத்தவன் சொல்லி நாம என்ன கேக்குறது?ன்னு   அங்கலாய்ப்பவர்கள்    தலைவலியும் காய்ச்சலும் தங்களுக்கு வர்றப்பதான்    “ஆமாய்யா அவன் சொன்னதிலேயும் தப்பில்லே”ன்னு ஒத்துக்கிற நிலைக்கு வர்றாங்க.

                  அப்படித்தான் சாதகம், சோதிடம், கைரேகை, குடுகுடுப்பை, கோணங்கி, பில்லி, சூன்யம் எல்லாம் ஏமாற்று வேலைகள், பால்குடம், காவடி, அலகு குத்தல், தீயிலிறங்கி நடத்தல், மதலை சுமத்தல், தோலாண்டி என்பவையெல்லாம்  தேவையற்ற வேண்டுதல்கள்,  மாயம், மந்திரமெல்லாம் மனிதர்களை ஏமாற்றும் செயல்கள் என்னும் கசப்புகளை  எனது “நிலைக் கண்ணாடி” நாடகத்தில்  கலை வடிவில் தேன்தடவிக் கொடுத்தபோது  ஏற்றுக் கொள்ளாமல் எதிர்வாதம் செய்தவர்களில் பலர்  பக்தி மார்க்கத்தினாலேயே  பாதிக்கப்பட்டபோதுதான்  உண்மையை உணர்ந்தார்கள்.

             அப்படி அந்த நாடகத்திற்குப் பிறகு நடந்த பல சம்பவங்களில் ஒரு சில இங்கே...

     நான் முன்பு வசித்த பகுதியில்  எனது பக்கத்துவீட்டுக்காரர்  ஒரு சாமியாடி. அவர்  வீட்டுக் கொல்லைப்புறக் கொட்டகையில் எப்போதும் கோணங்கிச் சத்தம் கேட்டுக் கொண்டேயிருக்கும்.  குடும்பக் கோளாறுகள், நோய் நொடி களால் பாதிக்கப்பட்டவர்கள் எப்படியும் நாளைக்கு நாலுபேர் வருவார்கள். அவர்களுக்கு முத்துப் போட்டுப் பார்த்து நிவர்த்திக்கு ஏதாவது சொல்லி அனுப்புவார்.

              அவருடைய மனைவிக்கு வயிற்றில் கட்டிவந்து துன்பப்பட்டபோதும்  வெறும் சாம்பலை மந்திரித்துத் தடவுவதும், காளிக்கு  முடிகாணிக்கை செலுத்துவதுமாக இருந்து,கடைசியில்  நோய் முற்றிய நிலையில்  மரணமடைந்தார்.  அதேபோல் அந்த சாமியாடியும் தனது நரம்புத் தளர்ச்சி நோய்க்கு மருத்துவத்தை நாடாமல் மாந்தரீகத்தை நாடி இறுதியில் வாதநோய் பாதித்து இறந்தார். அவரது மாந்தரீகத்தை நம்பிய மக்கள் அப்போதுதான் கொஞ்சம்சிந்திக்கத் தொடங்கினார்கள் .

                  பில்லி சூன்யம் வைப்பது, செய்வினை செய்வது, போன்றவற்றில்  பேர் வாங்கிய    எனது  உறவினர் ஒருவர், எனது அந்த நாடகத்தைப் பார்த்துவிட்டு, என் தாயாரிடம் 
 “ பய துக்கிரித்தனமாப் பண்றான், சாமிக்குத்தமாயிடும், கண்டிச்சு வை” ன்னு அறிவுரை சொன்னார்.
அவர் தனக்கு வந்த நோயைத் தீர்க்க வழிதெரியாமல் சிரமப்பட்டு  நோய் முற்றிய நிலையில்  அரிமழம் மருத்துவமனையில்  சேர்க்கப்பட்டு காப்பாற்ற முடியாமல் 
இற ந்தே போனார். அவருடைய வாரிசுகள் அப்போதுதான்
 எனது கருத்தை ஏற்றுக் கொண்டனர்.


                நான் வசித்த பகுதியில் ஐந்து பெண்குழந்தைகளின் தாயார் ஒருவர், போதிய வருமானமற்ற கணவர்,  குடும்பப் பிரச்சனை இவற்றால் மனநிலை பாதிக்கப்பட்டிருந்தார்.  ஆன்மீகத்தில் அளவற்ற நம்பிக்கை கொண்டிருந்த அவர் கணவர் (  எனது நாடகத்தை தரம் தாழ்த்தி விமர்சனம் செய்தவர்)  ஒரு மாந்தரீகரைக் கொண்டு வந்து  தன் மனைவியின் மனநோய்க்கு தீர்வுகாண முயன்றார்.  ஒரு மாதம் இரவு தோறும்    வீ ட்டுக்குள்ளேயே  ஏதேதோ  மந்திரங்கள் செய்வதாகப்   பணத்தைக் கறந்து   அவர்களைக் கடனாளியாக்கி, அந்தப் பெண்மணியைப் பைத்தியமாக்கி  வி ட்டு தலைமறைவாகிவிட்டார்.  அவரே ஒருநாள்  என்னிடம் வந்து  நீ நாடகத்துல சொன்னது சரிதாம்பா. அயோக்கியப் பய என் குடியைக் கெடுத்துட்டான்னு புலம்புனார். பாவம் அந்தக் கவலையே அவருக்கு இறுதியாகி விட்டது.

           எனது நாடகத்திற்கு முட்டுக் கட்டைகள் போட்ட,  எங்கள் பகுதிக் கோயில் பூசாரியாக இருந்த ஒருவர்,  கோயில் பொருள்களை அபகரித்ததும், அவரை ஊரார் புறக்கணித்ததும் எனது நாடகக் கருத்துகளின் மீது பகுதி மக்களுக்கு நம்பிக்கை ஏற்படக் காரணமாக அமைந்தது.

                   எனது கருத்துக்கு ஒத்த கருத்துடையவர்கள் எங்கள்  மணிமன்றத்தில் புதிய வரவுகளாக, மீண்டும் அந்த நாடகம் அதே பகுதியில் 1982 ல் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் தலைமையில் நடந்தேறியது முன்னிலும் சிறப்பான வரவேற்புடன்.


              1991 அறிவொளி இயக்க ஈடுபாட்டினை அடுத்து, தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தில்  இணைந்து செயல் பட்டுப் பட்டி தொட்டிகளிலெல்லாம் அறிவியல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டிருந்த காலம்.

               குறிப்பாக அற்புதங்களை விளக்குதல்  என்னும் தலைப்பில்  மந்திரமா? தந்திரமா? என்ற நிகழ்ச்சி புதுக்கோட்டை மாவட்ட அனைத்து ஒன்றியங்களிலும் நடத்தப்பட்டது.  அதில் வெறும் கையில் விபுதி வரவழைப்பது, தங்கச் சங்கிலி வரவழைப்பது, தேங்காய்க்குள்  மலர்ந்த மலர்கள், எலுமிச்சம் பழத்தினுள் இரத்தம் வரவழைப்பது,  தலையில் தேநீர் தயாரிப்பது, தீ தேய்த்தல், சூடம் விழுங்குதல்,  தீப்படுகையில் நடத்தல், குழிக்குள் மனிதரைப் புதைத்து உயிருடன் மீட்டல்  முதலானவை அறிவியல் வழிப்பட்டவை என்பதை செயல்வழி நடத்திக் கொண்டிருந்தோம். இதற்காக பாண்டிச்சேரி, நாகை முதலிய இடங்களில் பயிற்சியும் பெற்றிருந்தேன்.

                அந்த சமயத்தில்தான்  ஆன்மீகப் போர்வையில் அக்கிரமங்களை அரங்கேற்றிக் கொண்டிருந்த பாத்திமாநகர் பிரேமானந்தா சாமியாரின் அன்முறைச் செயல்கள் கசிந்து கொண்டிருந்தது. குறிப்பாக ஒவ்வொரு சிவன் ராத்திரியிலும் அவர் வயிற்றுக்குள்ளிருந்து லிங்கம் எடுக்கும் அற்புதங்கள் நிகழ்த்துவதும், அதன்பால் ஈர்க்கப்பட்ட பல அரசியல் தலைவர்கள், அரசு உயர் அலுவலர்கள், பல முக்கிய புள்ளிகள் அங்கு சென்று ஆசீர்வாதம் பெறுவதுமான செயல்கள் நடந்து கொண்டிருந்தது.

              ஊடகங்கள் முன்னிலையில் அரசு அலுவலர்கள் பார்வையில்   லிங்கம்  எடுப்பது அற்புதமல்ல அது அறிவியல்  வழிப் பயிற்சி என்பதைப்  பொதுமேடையில்  செய்து காட்டி நீதிமன்றத்திலும் நிரூபித்து அந்தப் போலிச் சாமியார் சிறைத் தண்டனைக்குள்ளானது அனைவரும் அறிந்ததே. அதன்பின்னர் மக்களிடமிருந்த  அத்தகு நம்பிக்கைகள்  கொஞ்சம்  
 மட்டுப்பட்டன. 

            அத்தகு நிகழ்வுகளால் ஈர்க்கப்பட்ட  திருக்குறள் கழகம் போன்ற இலக்கிய அமைப்புகள் தங்கள்  திங்கள் நிகழ்வுகளிலும், ஆண்டுவிழா நிகழ்வுகளிலும்  முற்போக்குக் கருத்துள்ள கலை நிகழ்ச்சிகளை நிகழ்த்த எங்கள் மன்றத்திற்கு    அழைப்பு விடுத்தன.  வாய்ப்புகளில் மகிழ்ந்தாலும், பல மாறுபட்ட பின்புலக் காட்சிகளை வைத்து அரங்குகளில் நாடகம் நடத்திய எனக்கு ஒற்றைத் திரையிலேயே  கதையையும் காட்சிகளையும் நகர்த்த வேண்டிய நெருக்கடி இருந்தது.

ஆனாலும் கருத்துகள் பரவட்டும் என்ற நோக்கில் அந்த மேடைகளிலும்  பகுத்தறிவுக் கருத்துகளை நாடகமாக்கி நடத்தினோம்.  அவற்றுள்   நகர்மன்றத்தில் அரங்கேற்றிய   ஆசிரம அக்கிரமங்களைத் தோலுரிக்கும்    “நெருஞ்சிப் பூக்கள்” என்ற நாடகம் பல தரப்பினராலும் பாராட்டப் பட்டது.

     

            இப்படி  போலிச் சாமியார்களைப் பற்றியேதானா நாடகங்கள் என்று நீங்கள் கேட்பது புரிகிறது. இன்றும் அவற்றின் தேவையுள்ளதால்  இரண்டு தொடர்களும் அதற்கானதாகிவிட்டது.

          அடுத்த  பதிவில், பெண்ணுரிமை, பெண்சமத்துவம்   ச மூக சமநீதி பற்றிய நாடகங்களின் சிறப்புகள் தொடரும்.




Saturday, May 6, 2017

எனது மேடை நாடக அனுபவங்கள் - தொடர்ச்சி -17

தேன்தடவிய கசப்புகள்          

                கற்பனைகளை விட நம்மைச் சுற்றி நிகழும்  அறிவுக்கு ஒவ்வாத     ந டப்புகளே  ஒரு படைப்பாளியை  சமூக   மாற்றத்திற்கான படைப்பை உருவாக்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தி விடுகின்றன.

               அந்த வகையில், நான் களமாடிய கிராமத்து மக்களின் அறியாமையைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு,  அவர்களின் வாழ்வியல் இடர்ப்பாடுகளை மந்திரம்  பில்லி, சூன்யம் முதலிய வற்றால் தீர்ப்பதாக ஆசைகாட்டி, நம்ப வைத்துத் தங்களின் பொருளாதார வசதிகளைப் பெருக்கிக் கொண்ட சில போலிச் சாமியார்களின்   தில்லு முல்லுகளைப்  பற்றிப் பாமர மக்களுக்குத் தோலுரித்துக் காட்ட 
 “ நிலைக்கண்ணாடி” என்னும் நாடகத்தைப் படைத்தேன்.

கதையின் சுருக்கம் இதுதான் 

              அமைதியாக ஓடிக்கொண்டிருந்த ஒரு அரசு ஊழியரின் மனைவிக்கு, மாங்கல்ய தோசம் இருப்பதாக  ஒரு சாதகக்காரன் சொன்னதை நம்பி, அதனை நிவர்த்தி செய்ய ஒரு சாமியாரை நாடுகின்றனர் அந்தக் குடும்பத் தலைவரும் அவருடைய மருமகளும்.

             வசதியான இடம் என்பதை அறிந்த அந்தப் போலிச் சாமியாரும் அந்தப் பெண்ணின் மாங்கல்ய தோசம் நீக்க அவ்வீட்டுக்குச் சென்று வழிபாடு செய்யப் பெரும் பொருள் கேட்கின்றான். முற்போக்குச் சிந்தனையாளனான அப்பெண்ணின் கணவன் அதைத் தடுத்து அந்தப் போலிச்சாமியாரை வெளியேற்றுகிறான்.

              இதில் ஆத்திரமுற்ற அந்தப் போலிச் சாமியார், தன்னை அவமானப் படுத்திய அந்தக் குடும்பத்தைத் தன் வழிக்குக் கொண்டுவர தன்னுடைய கையாள்களை, கைரேகை ஜோசியனாக, குடுகுடுப்பைக் காரனாக,  அவ்வீட்டிற்கு அனுப்பி அந்தக் குடும்பத்திற்கு கேடுகாலம் நெருங்குவதாகக் குறி கூறச்செய்கிறான்.





               சென்னையில் பட்டப் படிப்பு முடித்து கிராமத்திற்குத் திரும்பும் அக்குடும்பத் தலைவனின் தங்கை, அந்தச் சாமியார் அனுப்பிய கைரேகை, குடுகுடுப்பை,  ஆகியோரை அடித்து விரட்டுகிறாள்.

             தன் ஆட்களை அவமதித்த  அந்தத் துடுக்குக்காரியைப்  பழிவாங்க  அவளுக்குப் பேய் பிடித்திருப்பதாக தன் கையாளை கோணங்கிக்காரனாக அனுப்பிப்  பேயோட்ட முயல்கிறான்   அந்தப் போலிச் சாமியார். வந்த கோணங்கிக்காரனையும் எருக்க மிளாறால் அடித்து விரட்டுகிறாள் அப்புரட்சிப்பெண்.

             தனதுமுறைப்பெண்ணாகிய அத்துடுக்குக்காரப்    பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளும் ஆசையில், தனது அக்காளின்  தோசம் தீர்க்க முன்வருகிறான் ஒரு வெகுளி  இளைஞன். தன்கணவனுக்குத் தெரியாமல் தன்வெகுளித் தம்பியை அந்தச் சாமியாரிடம் அனுப்பி, தனது தாலிபாக்கியம் நிலைக்க  பரிகாரம் கேட்கச் சொல்கிறாள் அவனது அக்கா.  

               அவனை அம்மனுக்குப் பால்குடம் எடுக்கச் சொல்லி அவர்களைத் திசை திருப்பிவிட்டு , தன்னை அவமானப் படுத்திய அந்தத் துடுக்குக்காரப் பெண்ணைக் கடத்தி,  வன்கொடுமை செய்யத் திட்டமிடுகிறான் போலிச் சாமியார்.  பால்குட நிகழ்வில்,தனக்கு அம்மன் அருள் வந்ததாக ஆடி அவர்களின் சூழ்ச்சியை முறியடித்து,   அந்தப் போலிச்சாமியார் கும்பலைப் போலீசில் பிடித்துக் கொடுப்பதாக அந்த நாடகத்தை முடித்திருந்தேன்.

               ஒருமாத கால ஒத்திகையில், கதையின் உட்பொருளை மோப்பம் பிடித்த அந்தப் பகுதி கோயில் குருக்கள், பஞ்சாங்கம் பார்க்கும் பண்டாரம் இருவரும் சேர்ந்து முதலில் பகுத்தறிவு வாதியாக நடிக்க முன்வந்த எங்கள் மன்ற உறுப்பினரின் அப்பாவிடம் சொல்லி அவனை நடிக்க விடாமல் செய்தார்கள்.   அதற்கு வேறு நபரைத் தயாரித்து பயிற்சி கொடுத்து வந்தேன். 

              அடுத்து  அந்தப் பகுதிப் பள்ளியில் நாடகப் பயிற்சி நடத்தவிடாமல் பள்ளித் தலைமை ஆசிரியருக்குப்  புகாரளித்து இடையுறு செய்தனர். வேறு இடத்தில் பயிற்சியளித்து வந்தோம். 

              அடுத்து நடிக்க ஒப்பந்தம் செய்திருந்த நடிகைக்கு மிரட்டல் கடிதம் போட்டனர். அவருக்கு தைரியம் சொல்லி முதல்நாளே முழு ஒத்திகைக்கு வரவழைத்தோம்.


              அதையடுத்து, நிகழ்ச்சிக்கு மின் இணைப்பு வழங்கிய அந்த வீட்டு அம்மையார் பற்றி மின்வாரியத்தில் புகாரளித்தனர். உடனடியாக ஒரு மின்னாக்கி ( ஜெனரேட்டர் ) ஏற்பாடு செய்து கொண்டோம்.

                  எல்லாத்தடைகளையும் மீறி நாடகம் நடந்து கொண்டிருந்த போது,  சில சில்லறைச் சலசலப்புகளை அந்தப் பிற்போக்கு வாதிகளின் கைத்தடிகள் ஏற்படுத்திப் பார்த்தார்கள். பாதுகாப்புக் கு வந்திருந்த காவல் துறை யினரால் அந்த சலசலப்பு அடங்கியது.


                இறுதியாக  பால்குடம் எடுக்கும் போது சட்டிப் பறை யடிக்க ஏற்பாடு செய்து அழைத்திருந்த தொழிலாளிக்கு  மதுவை அளவுக்கு அதிகமாக வாங்கிக் கொடுத்து எழுந்து நிற்க முடியாத அளவுக்குச் சாய்த்து விட்டார்கள். அந்த வேடத்தையும் நானே ஏற்று நாடகத்தை வெற்றிகரமாக முடித்தோம். 

காலங்காலமாய் பீடித்திருந்த மூட நம்பிக்கை நோய். கசப்பான மருந்தை அத்தனை எளிதாக ஏற்றுக் கொள்வார்களா?.  அதனால்தான் நாடகக்கலையென்னும் தேனைத் தடவி அந்த மருந்தைப் புகட்டினேன்.  பாராட்டினார்கள் பலர். பகை கொண்டனர் சிலர்.

              இரண்டு நாள்கள் கழித்து நகராட்சி ஆணையரிடமிருந்து விசாரணைக்கு வரச்சொல்லி  எனக்கு அழைப்பாணை வந்தது.
( நான் நகராட்சி நிர்வாகத்தின் கீழ் ஆசிரியராகப் பணிபுரிந்த காலம்) விசாரணைக்குச் சென்ற போது அந்த ஆணையர் 
“ என்னய்யா அரசுப் பணியிலிருந்து கொண்டு அனுமதியில்லாமல் நாடகமெல்லாம் போடுகிறாயாமே?” எனக் கேட்டார். ” அனுமதி வாங்க வேண்டுமென்பது எனக்குத் தெரியாது” என விளக்கமெழுதிக் கொடுத்துவிட்டு வந்தேன். 

              ஆன்மீகப் போர்வையில் உழைக்காமல்  பிழைக்கும் எத்தர்களின் வேலைதான்  அந்தப் புகாரென்று  பின்னர் தெரிந்தது.

              ஆனால் அவர்களே ஒரு கட்டத்தில்  இந்த  நாடகத்தில் காட்டப்பட்டவையெல்லாம் உண்மையென்று உணர்ந்த காலம் வந்தது. எப்போது தெரியுமா?

                                                   --- அடுத்த தொடரில்