Friday, April 21, 2017

எனது மேடை நாடக அனுபவங்கள் - தொடர்ச்சி -14

 கழுதையும் கருநாகமும்..

                  டி.கே.எஸ. சகோதரர்களின் நாடகங்கள், ஆர்.எஸ் . மனோகரின்  இலங்கேஸ்வரன், காடக முத்தரையன், சாணக்கிய சபதம், போன்ற நாடகங்களையும், பேரறிஞர் அண்ணாவின் சந்திரமோகன், நீதிதேவன் மயக்கம் போன்ற நாடகங்களையும், எம்.ஆர்.இராதாவின் இரத்தக் கண்ணீர் நாடகத்தையும்,எம்.ஜி.ஆர் நாடக மன்றத்தின் அட்வகேட் அமரன். எஸ்.வி.சேகர் அவர்களின் நகைச்சுவை நாடகங்களையும்  ஆர்.ஆர். சபா நாடகங்களையும்,  திருச்சி, தேவர் அரங்கு,, காரைக்குடி,  மதுரை ஆகிய ஊர்களுக்குத் தேடிச்சென்று பார்க்கும் ஆர்வம் எனது மாணவப் பருவத்திலிருந்தே தொடர்ந்தது. 

               அவர்கள் பயன்படுத்திய சிறப்புக் காட்சிகளைப் போல  எனது மேடை நாடகங்களிலும்  பயன் படுத்திப் பார்க்க விழைந்தேன்.
அதிலுள்ள நடைமுறைச் சிக்கல்களை அரங்கேற்றும்போதுதான் என்னால் உணர முடிந்தது.

             நாடகம் நடத்துவதற்கென்று அமைக்கப்பட்ட அரங்குகள், ஒளி, ஒலி அமைப்பிற்கான சிறப்பான அமைப்புகள், அரங்கேற்ற  தொழில்நுட்பக் கலைஞர்களையெல்லாம்  கொண்டு பெரிய நாடகக் கம்பெனிகள் சாதித்தவற்றை,  கீற்றுக் கொட்டகை, பலகை மேடை, ஒருமுக எழினி,
( இழுவைத் திரை) தொழில் முறையல்லாத  கலைஞர்களை வைத்துச் சாதிக்க நினைத்தது, “கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி தானும் அதுவாகப் பாவித்துத் தன் பொல்லாச் சிறகை விரித்தாடினாற்போல” என்ற முதுமொழியின் ஆழத்தை எனக்கு உணர்த்தியது.  ஆனாலும்  வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்னும் நம்பிக்கையோடு நான் எனது மேடை நாடகத்தில புகுத்திய சில புதுமைகளால் புதுக்கோட்டை அமெர்ச்சூர் குழுக்களில்   மணிமன்றத்திற்கு ஒரு தனி முத்திரை கிடைத்ததைப்   பல சான்றோர்களின்  பாராட்டுகள்  மூலம் உணர்ந்தேன்.

       அப்படி, சாண்டோ சின்னப்பாத் தேவரைப் போல  “நெனைச்சது ஒன்னு“ என்ற நாடகத்தில் விலங்குகளை நாடக மேடையேற்றும் முயற்சியில் நான் பட்டபாடு வேடிக்கையானது..

அந்த நாடகத்தில் ஒரு பாட்டுவாத்தியார்  தனது மாணவர்களுக்கு கருநாடக சங்கீதம் கற்றுக் கொடுப்பதாகவும், அந்தக் குரலைக் கேட்டு ஒரு கழுதை அவர் வீட்டுக்குள் நுழைவதாகவும் ஒரு காட்சியை நகைச்சுவைக்காக அமைத்திருந்தேன்.


            அதற்காகத்  தெரிந்த சலவைத் தொழிலாளியிடம்  ஒரு குட்டிக் கழுதையையும் கேட்டிருந்தேன். முதல்நாள் ஒத்திகையின் போது  இரண்டு சிறிய படிக்கட்டுகளில் ஏறிக் காட்சிக்கு ஒத்துழைத்த அந்தக்குட்டிக் கழுதை,  மறுநாள் நாடகத்தன்று, உயரமான மேடையில் அமைக்கப்பட்டிருந்த மரப் படியில் ஏறமுடியாமல் தவித்தது.

             காட்சியில் பாகவதர் கழுதை வரும் வரை திரும்பத்  திரும்பப் பாடிக் கொண்டே இருக்கிறார்.  கழுதையோ அரங்கேற முடியாமல் திணறுகிறது. பலத்த போராட்டத்திற்குப் பின் ,கழுதையின் உரிமையாளர் , எங்கள் மன்ற அரங்க உதவியாளர் துணையோடு கழுதையைத் தூக்கி  மேடையில் ஏற்றிவிட்டார். மேடை விளக்குகளையும் இசை முழக்கத்தையும் பார்வையாளர் ஆரவாரத்தையும் கேட்ட கழுதை, மிரண்டு   மேடையின் முன்வழியாகக் குதிக்க முயன்றது. மேடையில் அமைத்திருந்த விளக்குகளை காலால் உதைக்க, ஒளியமைத்த செல்வின் சார் பதறிப்போய் விளக்குகளை அணைத்துவிட்டார், நல்லவேளை முன்பக்கம் கழுதை மேடையிலிருந்து குதிப்பதற்குள் நானும் அரங்க உதவியாளர்களும் அதைப் பிடித்து பின்னால் இழுத்துவிட்டோம். ( ஒரு உதையை வாங்கிக் கொண்டுதான் ).
 இந்தக் களேபரத்தில் கத்த வேண்டிய கழுதைக்கு இசைக்கலைஞர் பீட்டர் டப்பிங் குரல் கொடுத்துக் காட்சியை ஒப்பேத்தினோம்.

              அதே நாடகத்தில்,    தன் வளர்ப்பு மகளைத திரைப்பட நடிகையாக்க  ஆசைப்படுவார்  கதாநாயகியின் வளர்ப்புத தாயார் அங்கம்மா.  உண்மை தெரிந்த, ஒரு சமூக விரோதி ( மாயாவி ) கதாநாயகியின்  உண்மையான பெற்றோர் பற்றிய இரகசியத்தைச் சொல்லாமலிருக்கத் தனக்கு ஒரு இலட்சம் ரூபாய் கேட்பான் அந்த வளர்ப்புத் தாயிடம் . உண்மையை மறைக்க அவன் கேட்ட பணத்தைத் தருவதாக ஒத்துக் கொண்ட அந்தப் பெண்மணி,  மாயாவி அறியாதவாறு ஒரு பாம்புப் பிடாரன் துணையோடு ஒரு சூட்கேஸில்   
 ( பணப்பெட்டி) பணத்திற்குப பதிலாகக் கருநாகப் பாம்பை வைத்து மாயாவியி டம் கொடுத்து அனுப்புவாள். பணத்தாசையில்  பெட்டியைத் திறந்து உள்ளே கைவிடும் மாயாவியை அந்தப் பாம்பு கொத்திவிடும்.  தன்னைக் கடித்த பாம்பினை எதிர்த் தலைவன் கடித்து வீசிவிட்டு கதாநாயகியின் அப்பாவிடம் உண்மையைச் சொல்ல ஓடுவதாகக் காட்சி.

                  இதற்கு ஒரு இரப்பர் பாம்பை ஒத்திகையில் பயன்படுத்தினோம். எதிர்த்தலைவனாக ( மாயாவியாக ) நடித்தவர்,  தான் ஒரு  உண்மையான  நஞ்சில்லாத கருஞ்சாரையைப் பயன் படுத்துகிறேன் என்று தைரியமாகச் சொன்னார். நாடகத்தன்று பகலில் எனது வீட்டிற்கு அந்தப் பாம்பைக் கொண்டுவந்து  அதன் வாயைக் கட்டி பொய்க்கடியாகக் கடித்து வீசும் பயிற்சியையும் எடுத்துக் கொண்டார்.

              நாடகக் காட்சியில் பாம்புப்பிடாரனாக  நடித்த  நான்,  வளர்ப்புத் தாயிடம் பணத்தை வாங்கிக் கொண்டு அந்தப் பாம்பை சூட்கேசில் வைத்து  மூடிக் கொடுத்து விட்டேன். அவரும் ஒரு ஆள் மூலம் அந்தப் பெட்டியை எதிர்த் தலைவன் மாயாவியிடம் கொடுத்து  அனுப்பினார். அடுத்த காட்சியில் பணப்பெட்டிக்குள் பணத்தை எடுக்க ஆவலாய்க் கைவிட்ட எதிர்த் தலைவன் தன்னைப் பாம்பு கடித்துவிட்டதாகக் கத்திவிட்டு பாம்பை வெளியே எடுத்துக் கடித்து வீச வேண்டும். பாம்பு கடிக்க முடியாதபடி வாய் கட்டப்பட்டிருந்தது.
ஆனால்....

                           --- அடுத்த தொடரில் 

2 comments:

இராய செல்லப்பா said...

....என்ன சார் இது, பாம்பு வரும்போது தொடரும் போடுகிறீர்கள்? கடித்ததா இல்லையா ?
- இராய செல்லப்பா நியூஜெர்சி

கரந்தை ஜெயக்குமார் said...

ஆகா
பாம்பு கடித்துவிட்டதா
அல்லது பயந்துவிட்டாரா
காத்துக்கொண்டிருக்கிறேன் ஐயா அடுத்த பகிர்விற்காக

Post a Comment