Friday, April 28, 2017

எனது மேடைநாடக அனுபவங்கள்- தொடர் -16


தடைக் கற்களே  படிக்கற்களாக


                   நீறு பூத்த நெருப்பு நாடகத்தில், சாதி ஆணவக் கொலையாக தாழ்ந்த சாதிப் பெண்ணைக் குத்துவிளக்கு பூசை என்ற பெயரில் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்யும் காட்சியில், அந்தப் பெண்ணுக்கு  நஞ்சு கலந்த பாலைக் கொடுக்க, அதைக்  குடித்த அப்பெண்   குத்து விளக்குகளுக்கிடையே மயங்கிவிழ ,ஆதிக்கசாதி செல்வந்தர் தன் உதவியாளோடு அவள்மீது பெட்ரோலை ஊற்றி தீயைப் பற்ற வைக்க அவள் எரிந்து சாவதாகக் காட்சி.

                  பெட்ரோலுக்குப் பதிலாக டின்னிலிருந்த தண்ணீரை ஊற்றிவிட்டு, குத்து விளக்கு அடுக்கியிருந்த பெஞ்சின்  உள்புற விளிம்பில் பார்வையாளர்க்குத் தெரியாமல் பொருத்தியிருந்த தகரத் தோணியில்  கழிவுஎண்ணையையும் சிறிது பெட்ரோலையும் ஊற்றி வைத்திருந்தோம்.  பெண் உடலில் பற்ற வைப்பது போல, அந்த உதவியாள்  அந்தத் தோணியில் ஊற்றியுள்ள எரிபொருளில் தீயைப் பற்ற வைக்க வேண்டும். அது ஆறடி நீளமுள்ள அந்தத் தோணி முழுதும் பரவி எரியும். வெளியிலிருந்த பார்ப்பதற்கு படுத்திருக்கும் பெண்மீது நெருப்பு எரிவது போலத் தெரியும்.

                 திட்டமிட்டபடி  தகரத்தோணியின் ஒரு நுனியில்  செல்வந்தரின் கையாள் பற்றவைத்த தீ  பெஞ்ச் நீளத்திற்கும் பரவி எரிந்தது. ஆனால் நாங்கள் எதிர்பாராத விதமாக அந்தத் தகரத்தில் ஆணிஅடித்துக் கழற்றிய சிறிய ஓட்டை ஒன்று இருந்திருக்கிறது. அதை அடைக்க மறந்து விட்டோம். அதன் வழியாக எரியெண்ணைக் கசிந்து மேடையில் சொட்ட, சொட்டின் வழியே தீயும் மேடையில் விரித்திருந்த தார்பாயில் பிடிக்கத் தொடங்கியது.

                 முன்னேற்பாடாக மேடையின் இரு பக்கத்திலும் ஈரச்சாக்குகளையும்,  எண்ணைத் தீயை அணைக்கக் கூடிய நுரைத் தீயணைப்பானை வாங்கித் தயாராக வைத்திருந்தோம்.  ( எங்கள் மன்ற உறுப்பினர் தீயணைப்புத் துறையில் அலுவலராக இருந்ததால்)

               தார்பாயில் பற்றிய தீ பரவி, மயங்கி விழுந்ததாகப் பெஞ்சுகளுக்கிடையே  படுத்திருந்த அந்த நடிகையின் சேலை முந்தானை வரை சென்றுவிட்டது. விபரீதத்தை உணர்ந்த நான், முன்திரையை மூடச் செய்து, நடிகையை இழுத்து தீப்பற்றாதவாறு ஒப்பனை அறைக்கு அனுப்பிவிட்டேன். இருபுறமும் தயாராக வைத்திருந்த ஈரச் சாக்குகளைப் போட்டும் தீ அணையாத நிலையில் எனது மகன் உடனடியாக நுரைத் தீயணைப்பானைத் திறந்து இயக்கி நுரையைப் பீய்ச்சி தீயினை அணைத்து விட்டார்  ( அவர் ஊர்க்காவல் படையில் தீயணைப்புப் பயிற்சி பெற்றிருந்தவர்)

               இதற்குள் திரையமைத்திருந்த கலியமூர்த்தி  திரைச் சீலைகளைக் காப்பாற்ற, அவற்றை அவிழ்த்துக் கொண்டிருந்தார். இத்தனைக்கும் பார்வையாளர்கள் காட்சியின் மெய்மையை ரசித்துக் கைதட்டிக் கொண்டிருந்தனர்.   மேடையில் இருந்த இசைக் குழுவினர்  இசைக் கருவிளோடு மேடையைவிட்டு இறங்க, ஒலி, ஒளி அமைப்பாளர் மின்சாரத்தைத் துண்டிக்கவும்தான் நடந்த விபரீதம் வெளியே தெரிந்து,  சற்று நேரத்தில் ஒரே கலவரமாகிவிட்டது.

              தகுந்த முன்னேற்பாடு இல்லாமலிருந்திருந்தால் நாடக அரங்கு, அதைச்சுற்றியிருந்த வீடுகள் எல்லாம் மிகப்பெரிய தீ விபத்தில் சிக்கி சின்னாபின்னமாகியிருப்போம்.  பத்து நிமிட பதற்றத்திற்குப் பின், மீண்டும் நாடகக் காட்சிகள் தொடர்ந்து நடந்து முடிந்தது.

                எங்கள் மன்றக் கவுரவ உறுப்பினராக இருந்த நினைவில் வாழும் திரு சின்னையா அவர்கள், அவ்வாண்டு   திருவப்பூர் தேர்த் திருவிழாவை முன்னிட்டு  நடந்த அவர் குடும்பத்தாரின் மண்டகப்படி நாளன்று   அதே நாடகத்தைப் போடக் கேட்டுக் கொண்டார்.

                 அங்கு மிக எச்சரிக்கையோடு இந்தக் காட்சியை அரங்கேற்றினோம். ஆனால் காட்சிஅரங்கேறிய சிறிது நேரத்தில் ஒரு தீயணைப்பு வண்டி  அரங்கின் பின்புறம் வந்து நின்றது. வந்தவர்களிடம் விசாரித்தபோது  யாரோ நாடகக் கொட்டகை தீப்பிடித்து எரிவதாகப் போன் வந்ததால் அவர்கள் வந்ததாகச் சொன்னார்கள். அது எங்களின் தந்திரக் காட்சி என்று சொன்னபின் அவர்கள் திரும்பிச் சென்றனர்.

                 இதுபோலத்தான்  நான் பணிபுரிந்த இராசகோபாலபுரம் பள்ளி ஆண்டுவிழாவில் கண்ணகி நாடகத்தில், கண்ணகி,  பாண்டியன் அரண்மனைத் தூண்களில் எரிந்து கொண்டிருந்த தீவெட்டிகளை எடுத்து மதுரையை எரிப்பதாகக் காட்சியமைத்திருந்தேன்.  தலைமை ஆசிரியரும், ஆண்டுவிழாக் குழுவினரும்  தீ எரிக்கும் காட்சி வேண்டாமே என்றனர். அதைச் சவாலாக எடுத்துக் கொண்டு,  மிகுந்த முன்னேற் பாடோடு  தந்திரக் காட்சியாக  நடத்தப் பட்டு பயந்தவர்களாலேயே  பாராட்டப் பட்டது.

            அதே பள்ளியில் அடுத்த ஆண்டில் நடந்த ஆண்டுவிழாவில் 
“கருகி மணத்த மலர் ”( ஜோன் ஆப் ஆர்க்) நாடகம் அரங்கேற்றப்பட்டது. நாடகத்தில் ஜோன் ஆப் ஆர்க்கை கட்டிவைத்து தீவைக்கும் காட்சியிலும் இதேபோலத் தந்திரக்காட்சியை நடத்திக் கல்வி அலுவலர் பொதுமக்களின் பாராட்டினைப் பெற்றது அந்நாடகம்.

              புதுக்கோட்டை  சீதையம்மாள் அரங்கில் நடந்த இளங்கோவடிகள் மன்ற ஆண்டுவிழாவில் “சிலம்பின் சிலிர்ப்பு” நாடகத்தில் கண்ணகி மதுரையை எரிப்பதான காட்சியிலும் இதே தந்திர உத்தியால் அந்நாடகம் சிறப்புப் பெற்றது.




                 நாடகம் நடத்துவதற்கென வசதிகள் கொண்ட அமைப்பு ரீதியான அரங்குகள் புதுகை நகரில் இல்லாத நிலையில், தடைகளையும், அச்சமூட்டல்களையும் கடந்து,  வலிந்து சில தந்திர உத்திகளை எனது நாடகங்களில் கையாண்டு வந்தேன்.

                 கண்ணுக்கும் காதுக்கும் விருந்தளிக்கும் நிகழ்த்து கலைகள் வெறும் இன்புறலுக்காக மட்டுமே அமையலாகாது என்பது நாடகச் செம்மல் பம்மல் சம்பந்தம்  அவர்களின் கருத்து. ஒரு கலை அல்லது படைப்பு  பார்ப்பவர் மனதில் ஏதேனும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். அது சமூக மாற்றத்திற்கான ஒரு கருவியாகவே  இருக்க வேண்டும். 

           அந்த எண்ணத்தில் பாமர மக்களிடம் அறியாமையால் மண்டிக் கிடக்கும் மூட நம்பிக்கைகளை மாற்றும் முயற்சியாக “ நிலைக் கண்ணாடி” என்னும் சமூக சீர்திருத்த நாடகத்தை ஆக்கி அரங்கேற்றினேன்.


                 
               இந்நாடகத்தில் போலிச் சாமியாரின் பித்தலாட்டங்கள், கைரேகை ஜோஸ்யம், குடுகுடுப்பை,  கோணங்கி, பால்குடம், காவடி முதலான பக்தி முறைகளால் அமைதி குலைந்த ஒரு குடும்பத்தின் கதையை காட்சிப் படுத்த முனைந்திருந்தேன்.

முப்பது நாள்கள் ஒத்திகை நடந்ததில் கதையின் மையப் பொருளால் தங்களின் மகிமை கெட்டுவிடும் என்றெண்ணிய சில ஆன்மீகவாதிகள் இந்த நாடகத்தை அரங்கேறவிடாமல் பல இடையூறுகளை ஏற்படுத்தினர்.

    அவற்றில் மீண்டு அந்த நாடகம் அரங்கேறியதா? தடைப்பட்டதா?

        -- அடுத்த தொடரில் பார்ப்போமே.

Monday, April 24, 2017

எனது மேடை நாடக அனுபவங்கள்- தொடர்ச்சி-15


பட்டாலும் புத்தி வரலையே


                 கட்டுக் கட்டாக பணத்தாள்கள்  இருக்கும் என்று எதிர்பார்த்து அந்தப் பெட்டியை ( சூட்கேஸை) ஆவலோடு திறந்த  மாயாவியை பெட்டிக்குள் அங்கம்மா வைத்திருந்த  கருநாகம் கடிக்கும். ஆத்திரமடைந்த மாயாவி அந்தப் பாம்பைக் கடித்து உதறி எறிந்து விட்டு மலைக்குகையில் அடைத்து வைத்திருக்கும் உண்மையான தந்தையிடம்  ஓடி அவர் மகளைக் காப்பாற்றச் சொல்ல  வேண்டும் என்பதுதான் காட்சி.

                       பயிற்சியில் பயன்படுத்திய சாரைப்பாம்பை வாயைத் தைத்துப் பெட்டிக்குள் வைத்திருந்தோம். மாயாவியாக நடித்தவர் பெட்டிக்குள் கையை விட்டதும் கடிக்க முடியாத அந்தப் பாம்பு அவர் கைகளில் சுற்றிக்கொண்டது.  அவர் அந்தப் பாம்பை கடிப்பதுபோல் பாவித்துத் தூக்கி எறிய முயன்றார். அவர் கைகளில் இறுக்கமாகச் சுற்றிக் கொண்ட பாம்பு எவ்வளவு உதறியும் கையைவிட்டுப் பிரியவில்லை. இதை எதிர்பார்க்காத அவர்  ஒருகையால் பாம்பின் தலையைப் பிடித்துக் கொண்டு,மறு கையால் அதன் வால் பகுதியைப் பிரிக்க, அது முறுக்க, ஒரு இரண்டு நிமிடப் போராட்டத்திற்குப் பின் ஆவேசமாய் கையைச் சுற்றியிருந்த பாம்பைப் பிரித்து விட்டார். பிரித்த பாம்பை அரங்கத்தின் பின்பக்கத்தில் வீச வேண்டிய அவர் பதற்றத்தில்  முன்பக்கத்தில வீசி விட்டார். 

                அதுவரை கைதட்டி ஆரவாரமாய் ரசித்த பார்வையாளர்கள், தங்கள் மத்தியில் பாம்பு வந்து விழுந்ததும் அதிர்ச்சியில்  கதறிக்கொண்டு களைந்து ஓடத் தொடங்கினர். பாம்பென்றால் படையும் நடுங்கத்தானே செய்யும்.  கூட்டத்திலிருந்த துணிச்சல்காரர் ஒருவர் அதை அடித்துக் கொன்றுவிட்டார்.  என்றாலும் ,  எதிர்பாராத இந்நிகழ்வால் தொழில் நுட்பக் கலைஞர், சக நடிகர்கள் எல்லோரும் கொஞ்சநேரம் வெலவெலத்துப்  போனோம் .  ஆனாலும் நாடகத்தைத் தொடர்ந்தாக வேண்டுமே.  மாயாவியாக நடித்தவரைத் தேற்றி அடுத்த இறுதிக்கட்டக் காட்சிகளை நடத்தினோம். நாடகத்தின் இறுதிக் கட்டம் என்பதால்  மக்கள் மீண்டும் அந்த இடத்தில் உட்கார அஞ்சி நின்று கொண்டே அடுத்தடுத்த காட்சிகளைப் பார்த்தனர். 

              இனிமே  இதுபோல் விசப்பரிட்சையில் இறங்கக் கூடாதுன்னு அப்பவே முடிவு செஞ்சேன். ஆனாலும் அதுவும் பிரசவ வைராக்யம் போலத்தான் போயிற்று.

            1986ல் அரங்கேற்றிய “நீறு பூத்த நெருப்பு” என்ற நாடகத்தில் ஒரு உணர்ச்சி மயமான காட்சி. 


          இந்நாடகக் கதையில்,  தந்தையின் கண்டிப்பை மீறி, தான் காதலித்த ஒரு பெண்ணை கதைத்தலைவன் மணந்து கொள்கிறான்.  தாழ்ந்த சாதிப் பெண்ணைத் தனது மருமகளாக ஏற்றுக்கொள்ள முடியாத ஆதிக்கசாதி யைச் சேர்நத கதைத் தலைவனின் தந்தை, தன் மகனை  ஒறுக்கவோ ஒதுக்கவோ முடியாத நிலையில் அந்தப் பெண்ணை நயவஞ்சகமாகக் கொல்ல முயலுகிறார். 

                 அதன்படி அந்தப் பெண்ணின் சாதித் தோசம் நீங்க   108 குத்துவிளக்கு பூசை செய்யச் சொல்லி, அவளுக்கு பாலில் நஞ்சு கலந்து கொடுத்து விளக்கேற்றச் சொல்வார். விளக்கேற்றும் போது மயங்கி விழுந்த அந்தப் பெண்ணின் உடலில் பெட்ரோலை ஊற்றி எரித்துவிட்டு, குத்து விளக்குப்  பூசை செய்யும் போது சேலையில் தீப்பற்றி எரிந்து இறந்து விட்டதாகத் தன் மகனையும், ஊரையும் நம்ப வைத்து நாடகமாடுவார்.

                  இக்காட்சி பிரமிப்பாக அமைய வேண்டுமென்று  இரண்டு பெஞ்சுகளில் குத்து விளக்குகளை ஏற்றி, அதற்கிடையில் அந்தப் பெண்ணை மயங்கி விழச்சொல்லி, அவள் மீது பெட்ரோல் போல் தண்ணீரை ஊற்றி,  தந்திரமாக ஒரு தீப்படும் காட்சி வைத்திருந்தேன். 

              அக்காட்சியில் நடிக்க வந்த நடிகை எலிசபெத்,  முதல்நாள் முழு ஒத்திகையின்போது  பயந்து நடிக்கத் தயங்கினார். அந்தக் காட்சியில் நான் இரு பெஞ்சுகளுக்கிடையே படுத்து தீயின் வெப்பம்  என்னைத் தாக்காதவாறு  தீ எரித்துக் காட்டி தைரியமூட்டினேன். தயக்கத்தோடு பயிற்சி எடுத்தபின் மேடையில் அக்காட்சியை அப்படியே அரங்கேற்ற முடிவாயிற்று.

                  காட்சிப்படி,  அந்தப் பெண்ணுக்குக் கதைத் தலைவனின் தந்தை வாழ்த்தி நஞ்சு கலந்த ( தேன்தான் ) பாலைக் கொடுத்தார். அந்தப் பெண் பெஞ்சுகளில் அடுக்கி வைத்திருந்த குத்து விளக்குகளை எரிய விட்டார். கடைசி விளக்கேற்றும்போது அவர் மயங்கிக் கீழே விழுந்தார். அதைத் தொடர்ந்து திட்டமிட்டபடி, ஆதிக்க சாதிக்காரர் ஒரு போக்கிலி உதவியுடன் அவள் மீது பெட்ரோலை ஊற்றினார் ( தண்ணீர்தான் ).
எனது உத்தியின்படி  தீப்பற்றி எரியத் தொடங்கியது. பார்வையாளர்கள் காட்சியின்  தீவிரத்தில் உறைந்து போயிருந்தனர்.


            அந்த வேளையில்தான்  நாங்களே எதிர்பாராத,  பதற வைக்கும் அந்தச் சம்பவம் நடந்தது. 

      --- பதற்றத்தை தணித்துக் கொண்டு  தொடர்வோம்

Friday, April 21, 2017

எனது மேடை நாடக அனுபவங்கள் - தொடர்ச்சி -14

 கழுதையும் கருநாகமும்..

                  டி.கே.எஸ. சகோதரர்களின் நாடகங்கள், ஆர்.எஸ் . மனோகரின்  இலங்கேஸ்வரன், காடக முத்தரையன், சாணக்கிய சபதம், போன்ற நாடகங்களையும், பேரறிஞர் அண்ணாவின் சந்திரமோகன், நீதிதேவன் மயக்கம் போன்ற நாடகங்களையும், எம்.ஆர்.இராதாவின் இரத்தக் கண்ணீர் நாடகத்தையும்,எம்.ஜி.ஆர் நாடக மன்றத்தின் அட்வகேட் அமரன். எஸ்.வி.சேகர் அவர்களின் நகைச்சுவை நாடகங்களையும்  ஆர்.ஆர். சபா நாடகங்களையும்,  திருச்சி, தேவர் அரங்கு,, காரைக்குடி,  மதுரை ஆகிய ஊர்களுக்குத் தேடிச்சென்று பார்க்கும் ஆர்வம் எனது மாணவப் பருவத்திலிருந்தே தொடர்ந்தது. 

               அவர்கள் பயன்படுத்திய சிறப்புக் காட்சிகளைப் போல  எனது மேடை நாடகங்களிலும்  பயன் படுத்திப் பார்க்க விழைந்தேன்.
அதிலுள்ள நடைமுறைச் சிக்கல்களை அரங்கேற்றும்போதுதான் என்னால் உணர முடிந்தது.

             நாடகம் நடத்துவதற்கென்று அமைக்கப்பட்ட அரங்குகள், ஒளி, ஒலி அமைப்பிற்கான சிறப்பான அமைப்புகள், அரங்கேற்ற  தொழில்நுட்பக் கலைஞர்களையெல்லாம்  கொண்டு பெரிய நாடகக் கம்பெனிகள் சாதித்தவற்றை,  கீற்றுக் கொட்டகை, பலகை மேடை, ஒருமுக எழினி,
( இழுவைத் திரை) தொழில் முறையல்லாத  கலைஞர்களை வைத்துச் சாதிக்க நினைத்தது, “கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி தானும் அதுவாகப் பாவித்துத் தன் பொல்லாச் சிறகை விரித்தாடினாற்போல” என்ற முதுமொழியின் ஆழத்தை எனக்கு உணர்த்தியது.  ஆனாலும்  வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்னும் நம்பிக்கையோடு நான் எனது மேடை நாடகத்தில புகுத்திய சில புதுமைகளால் புதுக்கோட்டை அமெர்ச்சூர் குழுக்களில்   மணிமன்றத்திற்கு ஒரு தனி முத்திரை கிடைத்ததைப்   பல சான்றோர்களின்  பாராட்டுகள்  மூலம் உணர்ந்தேன்.

       அப்படி, சாண்டோ சின்னப்பாத் தேவரைப் போல  “நெனைச்சது ஒன்னு“ என்ற நாடகத்தில் விலங்குகளை நாடக மேடையேற்றும் முயற்சியில் நான் பட்டபாடு வேடிக்கையானது..

அந்த நாடகத்தில் ஒரு பாட்டுவாத்தியார்  தனது மாணவர்களுக்கு கருநாடக சங்கீதம் கற்றுக் கொடுப்பதாகவும், அந்தக் குரலைக் கேட்டு ஒரு கழுதை அவர் வீட்டுக்குள் நுழைவதாகவும் ஒரு காட்சியை நகைச்சுவைக்காக அமைத்திருந்தேன்.


            அதற்காகத்  தெரிந்த சலவைத் தொழிலாளியிடம்  ஒரு குட்டிக் கழுதையையும் கேட்டிருந்தேன். முதல்நாள் ஒத்திகையின் போது  இரண்டு சிறிய படிக்கட்டுகளில் ஏறிக் காட்சிக்கு ஒத்துழைத்த அந்தக்குட்டிக் கழுதை,  மறுநாள் நாடகத்தன்று, உயரமான மேடையில் அமைக்கப்பட்டிருந்த மரப் படியில் ஏறமுடியாமல் தவித்தது.

             காட்சியில் பாகவதர் கழுதை வரும் வரை திரும்பத்  திரும்பப் பாடிக் கொண்டே இருக்கிறார்.  கழுதையோ அரங்கேற முடியாமல் திணறுகிறது. பலத்த போராட்டத்திற்குப் பின் ,கழுதையின் உரிமையாளர் , எங்கள் மன்ற அரங்க உதவியாளர் துணையோடு கழுதையைத் தூக்கி  மேடையில் ஏற்றிவிட்டார். மேடை விளக்குகளையும் இசை முழக்கத்தையும் பார்வையாளர் ஆரவாரத்தையும் கேட்ட கழுதை, மிரண்டு   மேடையின் முன்வழியாகக் குதிக்க முயன்றது. மேடையில் அமைத்திருந்த விளக்குகளை காலால் உதைக்க, ஒளியமைத்த செல்வின் சார் பதறிப்போய் விளக்குகளை அணைத்துவிட்டார், நல்லவேளை முன்பக்கம் கழுதை மேடையிலிருந்து குதிப்பதற்குள் நானும் அரங்க உதவியாளர்களும் அதைப் பிடித்து பின்னால் இழுத்துவிட்டோம். ( ஒரு உதையை வாங்கிக் கொண்டுதான் ).
 இந்தக் களேபரத்தில் கத்த வேண்டிய கழுதைக்கு இசைக்கலைஞர் பீட்டர் டப்பிங் குரல் கொடுத்துக் காட்சியை ஒப்பேத்தினோம்.

              அதே நாடகத்தில்,    தன் வளர்ப்பு மகளைத திரைப்பட நடிகையாக்க  ஆசைப்படுவார்  கதாநாயகியின் வளர்ப்புத தாயார் அங்கம்மா.  உண்மை தெரிந்த, ஒரு சமூக விரோதி ( மாயாவி ) கதாநாயகியின்  உண்மையான பெற்றோர் பற்றிய இரகசியத்தைச் சொல்லாமலிருக்கத் தனக்கு ஒரு இலட்சம் ரூபாய் கேட்பான் அந்த வளர்ப்புத் தாயிடம் . உண்மையை மறைக்க அவன் கேட்ட பணத்தைத் தருவதாக ஒத்துக் கொண்ட அந்தப் பெண்மணி,  மாயாவி அறியாதவாறு ஒரு பாம்புப் பிடாரன் துணையோடு ஒரு சூட்கேஸில்   
 ( பணப்பெட்டி) பணத்திற்குப பதிலாகக் கருநாகப் பாம்பை வைத்து மாயாவியி டம் கொடுத்து அனுப்புவாள். பணத்தாசையில்  பெட்டியைத் திறந்து உள்ளே கைவிடும் மாயாவியை அந்தப் பாம்பு கொத்திவிடும்.  தன்னைக் கடித்த பாம்பினை எதிர்த் தலைவன் கடித்து வீசிவிட்டு கதாநாயகியின் அப்பாவிடம் உண்மையைச் சொல்ல ஓடுவதாகக் காட்சி.

                  இதற்கு ஒரு இரப்பர் பாம்பை ஒத்திகையில் பயன்படுத்தினோம். எதிர்த்தலைவனாக ( மாயாவியாக ) நடித்தவர்,  தான் ஒரு  உண்மையான  நஞ்சில்லாத கருஞ்சாரையைப் பயன் படுத்துகிறேன் என்று தைரியமாகச் சொன்னார். நாடகத்தன்று பகலில் எனது வீட்டிற்கு அந்தப் பாம்பைக் கொண்டுவந்து  அதன் வாயைக் கட்டி பொய்க்கடியாகக் கடித்து வீசும் பயிற்சியையும் எடுத்துக் கொண்டார்.

              நாடகக் காட்சியில் பாம்புப்பிடாரனாக  நடித்த  நான்,  வளர்ப்புத் தாயிடம் பணத்தை வாங்கிக் கொண்டு அந்தப் பாம்பை சூட்கேசில் வைத்து  மூடிக் கொடுத்து விட்டேன். அவரும் ஒரு ஆள் மூலம் அந்தப் பெட்டியை எதிர்த் தலைவன் மாயாவியிடம் கொடுத்து  அனுப்பினார். அடுத்த காட்சியில் பணப்பெட்டிக்குள் பணத்தை எடுக்க ஆவலாய்க் கைவிட்ட எதிர்த் தலைவன் தன்னைப் பாம்பு கடித்துவிட்டதாகக் கத்திவிட்டு பாம்பை வெளியே எடுத்துக் கடித்து வீச வேண்டும். பாம்பு கடிக்க முடியாதபடி வாய் கட்டப்பட்டிருந்தது.
ஆனால்....

                           --- அடுத்த தொடரில் 

Tuesday, April 18, 2017

எனது மேடை நாடக அனுபவங்கள்- தொடர்ச்சி -13


         
ஆட்டுவித்ததும் ஆடித் தீர்த்ததும்...

            எந்த ஒரு படைப்பாக இருந்தாலும் அது   சமூக மேம்பாட்டிற்கான ஏதேனும் ஒரு சிறிய செய்தியையாவது  உட்கருவாகக் கொண்டு படைக்கப்படவேண்டும் என  நினைவில் வாழும் எனது ஆசிரியர் திரு கரு.செல்லமுத்து அவர்கள்  நான் எட்டாம் வகுப்புப் பயிலும்போது சொன்னதை மறக்காமல் நான் எனது பாடல்கள், சிறுகதை, கவிதை, நாடகம் ஆகியவற்றின் மூலம் செயலாக்கம் செய்து வந்துள்ளேன்.

           பாட்டும் பரதமும் பண்புள்ள நாடகமும் நாட்டிற்கு நல்லன விளைத்தற்கே என்று  சங்கரதாசு அடிகள் கூறியுள்ளதும்,  கலைகள் வெறும் பொழுது போக்கிற்கானதாக மட்டும் அமைதல்  கூடாது என்பதை  மக்களின் வாழ்வியல் பிரச்சனைகளை உள்ளிறுத்தியே அமைதல் வேண்டும் என்பார் மனோன்மணீயம் சுந்தரனார். .  அதிலும் நாடகம் என்பது நாட்டின் அக நிகழ்வுகளை மக்களுக்கு உணர்த்தி  அதற்கான தீர்வைச் சொல்வதாக அமைதல் வேண்டும் என்பார் பம்மல் சம்பந்த முதலியார்.

அந்த வகையில்  மகளிரின்  சமூகப் பிரச்சனையாக காலம் காலமாய் இருந்து வந்த விதவையர்  மறுமணத்திற்கான எதிர்ப்பினையும்  அத்தகு மணங்கள் நடைபெற வேண்டும் என்று பல நூற்றாண்டுகளாக சமூக சீர்திருத்தவாதிகள் வலியுறுத்தி வந்துள்ளதையும் கதைக் கருவாகக் கொண்டு  “ பட்டமரம்” என்னும் பெயரில் ஒரு சீர்திருத்த நாடகத்தை 1972ல் அரங்கேற்றினேன்.

             கொத்தடிமையாக இருந்த ஒரு தாய், தான் பெற்ற கடனைத் தீர்க்க முடியாமல், இறக்கும் தருவாயில் கொடுத்த வாக்குறுதியால் அந்த வயோதிக செல்வந்தருக்குத் அவர்  மகள்  மணம் முடித்து வைக்கப்படுகிறாள்.  மணம் முடிந்த அன்றே அச்செல்வந்தர் மாரடைப்பால் இறந்துவிட, அந்த இளம் பெண் விதவையாகிறாள். அப்பெண்ணை விரும்பும்  கதைத் தலைவனின் தனயன், அப்பெண்ணின் சாதியைக் காரணம் காட்டி அவளைத் தன் தம்பி்க்கு திருமணம் செய்து வைக்க மறுக்கிறான். அண்ணனை மீறவும் முடியாமல் விரும்பிய விதவையைத் திருமணம் செய்யவும் முடியாத நிலையில்  வீட்டைவிட்டு வெளியேறுகிறான்  கதைத் தலைவன். 

                   தன் குலப்பெருமையையும், தம்பியையும் இழக்க விரும்பாத தனயன்  அப்பெண்ணையும் அவளது தந்தையையும்  ஆட்களை வைத்துக் கடத்தி, அவர்களுக்குப்  பணத்தாசைகாட்டி ஊரைவிட்டு வெளியேற்ற முயல்கிறான். காவல் ஆய்வாளரான கதைத் தலைவனின் தம்பி தன் மூத்த சகோதரனின் சூழ்ச்சிகளை முறியடித்து  கதைத் தலைவனான தன் இரண்டாவது சகோதரனுக்கு அவன் விரும்பிய விதவையையே திருமணம் செய்து வைப்பதுதான் கதை.

                இந்த  மேடை நாடகத்தில்  பல உத்திகளைக் கையண்டிருந்தேன்.   திருமண மேடை, தையல்கடை, மலைக்குகை, காவல்நிலையம், கேளிக்கை நடனவிடுதி, கனவுக்காட்சியில் பின்புல மாற்றங்கள் என்னும் பல அம்சங்களை  இந்நாடகத்தில் காட்சிப் படுத்தி யிருந்தேன்.  அவற்றுக்காகப்  பெரிய மேடை அமைக்க வழக்கமாக நாடகம் போடும் தொடர்வண்டி நிலைய சாலை ஓரம் இடம் போதாமையால் ஊருக்கு வடபுறம் ( புதுவயல் பகுதியில் விளையும்  நெல் அடிக்கும் களம். தற்போது பெரியார் நகராக உள்ளது)  மணல்மேடு என்னும் பெரிய திடலை ஒழுங்குபடுத்தி பெரியதான மேடை அமைத்திருந்தோம்.      
( இப்போது புதுக்கோட்டை வருவாய் அலுவலர், கோட்டாட்சியர் குடியிருப்பாக மாறியுள்ளது)  மேலும் புதுக்கோட்டை நகர், மற்றும் சுற்றுவட்டாரக் கிராமங்களிலிருந்து  பாய், சாக்குகளோடு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை பெருகிக் கொண்டே யிருந்ததால் அந்தப் பெரிய திடலைத் தேர்வு செய்யவேண்டியதாயிற்று.

              மின்சாரத்திற்கு ஜெனரேட்டர் ( மின்னூக்கி ) ஏற்பாடு செய்ய வேண்டியதாயிற்று. விரிவான செலவினங்களுக்கு,  மன்ற நாடகத்தின் தன்மையால்  நன்கொடையாளர்கள்  உதவினார்கள். நன்கொடை பரிசுச் சீட்டு மூலம் ஓரளவு நிதி கிடைத்தது.

             இந்நாடகத்தில் முதல்காட்சிக்கு அமைத்த திருமண அரங்கத்தைப் பிரித்து அடுத்த காட்சி தொடங்குவதற்குச் சற்றுத் தாழ்வு ஏற்பட்டது. அந்த இடைவேளையைப்  பாடகி ஜானகி தன் இனிய பாடலால் நிரப்பி உதவினார்.

                ஒரு விதவையின் வேதனைக் கதையைச் சோர்வில்லாமல் நகர்த்த,  நான்கு நகைச்சுவைப் பாத்திரங்கள்  கைகொடுத்து உதவின.  
ஒரு தையல் கலைஞன்,  அவனது காதலி, காசா எடுக்கும் உதவிப்பையன், கறிக்கடை  பாய்,   பாகவதர்,  போலீசு என்ற பாத்திரங்கள் வழங்கிய நகைச்சுவை நடிப்பு நாடகத்தை விறுவிறுப்பாக்கியது .  

                இதில் குறிப்பிடத்தக்க சில  புதிய உத்தி நுட்பங்களைச் சோதனை முயற்சியாகச் செய்திருந்தேன்.  சோகப்பாடல் காட்சியி்ல் கதைத்தலைவி வீட்டுப்  பின்புலத்திலும், அவளின் தந்தை காட்டுப் பின்புலத்திலும்  வேதனைப் படுவதாக , ஒரே மேடையை இருபிரிவாக்கி காட்சிப் படுத்தியிருந்தேன்.  ஒளிப்பதிவு நுட்பத்தால் செல்வின் பின்புலங்களை வேறுபடுத்திக்காட்டியது  சிறப்பாக அமைந்த ஒன்று.

                 அதேபோல கதாநாயகன்  கதாநாயகியோடு மகிழ்ந்து ஆடிப்பாடுவதான காதல்காட்சியில்,  தண்ணீரில் மிதக்கும் தாமரை செட்டிங்கில் காதலர், வான் நட்சத்திரங்கள்,மேகக்கூட்டத்திலிருக்கும் பிறைநிலவில் காதலர்,  பெய்யும் மழையில் நனைந்தபடி காதலர் என மூன்று பின்புலங்களை பாடல் இடையிசைக்குள் மாற்றிக் காட்டிக் காட்சியமைத்திருந்தேன்.  பாடலின்  மூன்று சரணங்களுக்கும் காதலர் இருவரும் வெவ்வேறு உடை மாற்றத்தோடு வரச் செய்திருந்தேன். 

இந்தக் காட்சி பார்வையாளர்களிடையே நல்ல பாராட்டைப் பெற்றது.  மழைக்காட்சியில் பி.வி.சி. குழாயில் துளைகளிட்டு அதன்வழியே பம்ப் மூலம் தண்ணீர் பீய்ச்ச, மழை பெய்வது  இயல்பானதாக அமைந்தது. என்ன ஒரு சிக்கல்,   மேடையில் விரித்திருந்த தார்ப்பாயில்  பெய்ய வைத்த செயற்கை மழைநீர் தேங்கியதில்,  கதாநாயகன் நடனமாடும் போது வழுக்கிவிழ, கதாநாயகி அவனைத் தாங்கிப் பிடித்தது  காட்சியை உணர்ச்சிமயமாக்கியது. 

            அடுத்து கதாநாயகியையும் அவளது தந்தையையும்  அடைத்து வைத்த மலைக்குகையை விட்டு  மூன்று பாறைத் திறப்புகள் வழியே வெவ்வேறு  வண்ண ஒளியில் ஒரு மர்ம உருவம் வெளிவருவதான காட்சியை அமைத்திருந்தேன் .  ஒளிப்பதிவாளர் செல்வின் அவர்களின் சீரிய முயற்சியால் அந்தக் காட்சி பார்வையாளர்களின் கைதட்டலைப் பெற்றதை மறக்கவே முடியாது.

             இந்நாடகத்தில் ஒரு கேளிக்கை விடுதி  நடன மங்கையுடன் மேற்கத்திய நடனமாட வேண்டிய நடிகர் திடீரென வராமையால், மேலாளர் பாத்திரத்தில் நடித்த நான், அந்த நடனத்தை ஆட  வேண்டியதாயிற்று. 

இதைவிட இன்னொரு நெருக்கடியையும் சமாளிக்க வேண்டியதாயிற்று.

                 சுடுகாட்டுக்கு அருகில் உள்ள பாழடைந்த மலைக்குகையில் அடைத்து  வைத்துள்ள கதாநாயகி மற்றும் அவரது அப்பாவைக் கண்டுபிடிக்க தையல்கடை வீரமுத்து  கசாப்புக் கடை பாய், போலீசு 123 ஆகியோர் போவார்கள். காட்டுப் பகுதியிலிருக்கும் அந்த இடத்திற்கு வழி தெரியாமல் அவர்கள் தவிக்கும்போது,  சுடுகாட்டில் பிணத்தை எரித்துவிட்டுத் திரும்பும் ஊழியர் இருவரிடம் , சுடுகாடுவரை வந்து குகையைக்கு வழிகாட்டச் சொல்லிக் கேட்க, அவர்கள் பிணமில்லாமல் சுடுகாட்டுக்குவரமாட்டோம் என்பார்கள். உடனே  டைலர் வீரமுத்து அந்தப் பகுதியில் கிடந்த பாடை ஒன்றை எடுத்துவந்து  அதில் தானே பிணமாகப் படுத்துக் கொண்டு சுடுகாட்டுக்குத் தூக்கிச் செல்லச் சொல்வான்.   

              அந்தக் காட்சிக்குப்  பறைமுழக்க, தொழில்முறை ஊழியர் ஒருவரை ஏற்பாடு செய்திருந்தோம். காட்சிக்கு அவரைத் தேட , அவர் மதுபோதையில் அரங்குக்கு  பின்பகுதியில் நிதானமில்லாமல் சாய்ந்து கிடந்தார். எவ்வளவு உசுப்பேற்றியும் அவரைத் தெளிய வைகக முடியாததால் நானே சட்டை பேண்டைக் கழற்றிவிட்டு வேட்டி துண்டுக்கு மாறி, பறையை அடித்துக் கொண்டு செல்லவேண்டிய தாயிற்று .  பாடமேற்பார்வை ( பிராம்ப்ட்) பார்த்துக் கொண்டே கவுரவத் தோற்றத்தில் இப்படிப்பட்ட நெருக்கடிகளையும்  ஆட்டுவிக்கும் நாடக இயக்குநர் ஆடிச்சமாளிக்க வேண்டிய சந்தர்ப்பங்கள் மேடை நாடகத்தில் பலப்பல. 

                                                          ---அவை பற்றி அடுத்த தொடரில் 


Saturday, April 15, 2017

எனது மேடைநாடக அனுபவங்கள் தொடர்ச்சி -12

                  

முள்களைந்து சுவைத்த சுளை

                     நாடகத்தின் முதல் காட்சியை திகிலோடு ஆரம்பிக்க நினைத்த நான், தூக்கில்  தொங்கிக் கொண்டிருந்த நடிகர் கயிறு உறுவி நடிகை மீது விழுந்ததில், அப்படியே  திகைத்துப் போய் நின்றேன்.    முன்திரையை மூடிவிட்டு  முதலில் அந்த பெண்ணிற்கு ஏதும் பாதிப்புள்ளதா எனத்தான் பார்த்தேன்.   நல்லவேளை  தூக்கில் தொங்கிய நடிகர் ( காளிமுத்து ) மெலிந்த உடலும் குறைந்த எடையும் உள்ளவராய் இருந்ததாலும், விழுந்ததில் நடிகைக்கோ அவருக்கோ பெரிய பாதிப்பு எதுவுமில்லாமல் போயிற்று.

                இத்தனைக்கும்  மேடைத் தளப்பொறுப்புக்கு இருவர், அரங்கப் பொருள்கள் வைத்து அகற்ற இருவர், அடுத்தடுத்த காட்சிகளில் நடிக்க வேண்டியவர்களைத்  தயார்படுத்த ஒருவர், ஒப்பனைகளில் மாற்றமிருந்தால் உடனுக்குடன் செய்ய ஒப்பனையாளருடன் உறுப்பினர் ஒருவர், வசனத்தை மறந்து விடாமல எடுத்துக் கொடுக்க ஒருவர் என நாடகத்தில் நடிப்பவர்களை விட அரங்க நிர்வாகப் பணிக்கு மேடை நாடகத்தைப் பொறுத்தவரை அதிக ஆள்களையே அமர்த்தியிருந்தேன். 

                  இதல்லாமல், இசை அமைப்பாளர்க்கு, காட்சி உரையாடல்  களுக்கேற்ற சிறப்பு ஒலிகள் பற்றிய ஒரு குறிப்பு, ஒளியமைப்பாளர்க்கு அதேபோல் காட்சிக்கேற்ற வண்ணஒளி பற்றிய குறிப்பு , திரை இயக்குபவரிடம் காட்சி எண், அதற்குரிய திரை பற்றிய குறிப்பு, ஒலி அமைப்பாளரிடம் பாடல்கள் பதிவு செய்த ஒலிநாடாவை எந்தெந்த காட்சிகளில் இயக்க வேண்டும்  ஆகிய குறிப்புகளையெல்லாம் எழுதி முதல்நாள் முழு ஒத்திகையின் போதே கொடுத்து ,அதன்படி அவர்கள் செயல்பட வேண்டுமென அறிவுறுத்தி இருந்தேன். இப்படி என்னதான் முன் ஏற்பாடுகள் செய்திருந்தாலும் எதிர்பாராமல் மேடையில் ஏற்படும் குளறுபடிகளையும் கடந்துதான் மேடை நாடகத்தை நடத்தி வெற்றி காண முடியும்.

                  தொங்கவிட்டிருந்த  கயிறு உறுவி தன் மீது அப்பா நடிகர் விழுந்ததால் கொஞ்சம் அதிர்ச்சி அடைந்தாலும்,  உணர்ச்சி வேகத்தால் தன்னால் ஏற்பட்ட தவறு என்பதை உணர்ந்த அந்த நடிகை பெரிதாக எதுவும் அலட்டிக் கொள்ளாமல் சிரித்துக் கொண்டே “ சாரி சார்” என்று சொல்லிவிட்டு அடுத்த காட்சிக்கு தயாராகிவிட்டார். “கொஞ்சம் ஓய்வு எடுத்துக்கம்மா” ன்னு சொல்லிட்டு  நான்காவது காட்சியை அடுத்து போடவேண்டிய சிலைடு   (நாடகம், நடிப்பவர், தொழில்நுட்பாளர் பற்றிய விளம்பரம்)  நிகழ்ச்சியை  உரிய தொழில் நுட்பாளர்களிடம் அறிவுறுத்தி  வெண்திரையில் ஒளிப்படக் காட்சியாக ஓடவிட்டேன். இந்த திடீர் மாற்றத்தால் இடைவெளி நேரம் கொஞ்சம் அதிகமானாலும், அடுத்தடுத்த காட்சிகள் விறுவிறுப்பாகவே நடந்தன.

                இந்த நாடகத்தில் இன்னொரு நகைச்சுவையான நிகழ்வும் எதிர்பாராமல் நடந்ததைக் குறிப்பிட்டாக வேண்டும். துப்பறியும் இந்த மர்ம நாடகத்தில் ஒரு துப்பறி நிபுணர்( சி.ஐ.டி சிங்காரம் ) மாறு வேடத்தில் ( கைரேகை சோதிடர் கைலாசமாக ) இடையிடையே நகைச்சுவை பாத்திரமாக வந்து கொண்டே இருப்பார். அந்த வேடத்தை  பொன்.பாலசுப்பிரமணியன் ( இன்றுவரை மணிமன்றத் தலைவராக இருப்பவர்) ஏற்று சிறப்பாக செய்து பார்வையாளர்களின் கைத்தட்டல்களை வாங்கிக் கொண்டே வந்தார்.

               நாடகத்தின் உச்சகட்டக் காட்சி.  கதைஎதிர்த் தலைவன் ( வில்லன் ) தான் செய்த கொலையை நேரில் பார்த்த முதியவர் ஒருவரை ஒரு மலைக்   குகைக்குள் ஒரு பாறைக்   கல்லோடு சேர்த்துக் கட்டிப் போட்டிருப்பான்.  அந்த இடத்தைத் துப்பறிந்து அங்கு கைரேகை சோதிடர் வேடத்தில் வருவார் துப்பறியும சிங்காரம் 

              காவலுக்கு இருந்தவர்களிடம்  ஓரிடத்தில் புதையல் இருப்பதாகப்  போக்குக் காட்டி வெளியே அனுப்பிவிட்டு,  கட்டிக்கிடந்த  கிழவன் உடைகளைத் தான் மாற்றி அணிந்து கொண்டு , கிழவனைக் கட்டி இருந்த பாறையில் தன்னைப் பொய்க்கட்டு கட்டிப் போடச் சொல்லி, அந்தக் கிழவனை விடுவித்து போலீசை அழைத்துவர அனுப்பிவிடுவான் சி.ஐ.டி.  கிழவன் சென்ற சற்று நேரத்தில் வில்லன் அங்கு வந்து கட்டிக் கிடந்த கிழவனை மண்ணெண்ணை ஊற்றி எரித்துக் கொல்லப் போவதாய்க் கொக்கரித்துக் கொண்டு மண்ணெண்ணை டின்னோடு கிழவனை நெருங்குவான். 

              கதைப்படி அந்தக் கிழவன் வேடத்திலிருந்த சி.ஐ.டி தனது பொய்க் கட்டுகளை அவிழ்த்துக் கொண்டு தான் அணிந்திருந்த ஜிப்பாவுக்குள் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் வில்லனின் கையில் சுட வேண்டும். பிறகு காவல்படை வந்து வில்லனைக் கைது செய்யும்.

              காட்சியில் வில்லன் மண்ணெண்ணை டின்னை த் திறந்து கொண்டு கிழவனை நெருங்குகிறான். கிழவன் வேடத்திலிருந்த சி.ஐ.டி சிங்காரமாக நடித்தவர்  போலிக் கட்டுகளை அவிழ்த்துக் கொள்கிறார். அதிர்ச்சியடைந்த வில்லன் எண்ணை டின்னை வீசிவிட்டுத் தன் இடையில் சொருகியிருந்த கத்தியை எடுக்கிறான். சி.ஐ.டி தனது ஜிப்பாவின் சைடு பாக்கெட்டுக்குள் கையை விட்டுத் துப்பாக்கியை எடுக்க முயல்கிறார்

             துப்பாக்கியின் விசை பாக்கெட்டில் இருந்த பிசிர் நூலில் மாட்டிக் கொண்டு வெளியே எடுக்க வரவில்லை.  ( நாடகத்திற்காக அவசர அவசரமாகத் தைத்த புது ஜிப்பா பிசிர் நூல்களைக் கத்தரிக்க தையல்காரர் மறந்து விட்டார்.)  

            துப்பாக்கியை எடுத்து  நீட்டட்டும் என்று  துப்பாக்கி வேட்டுச் சத்தம் கிளப்ப வேண்டியவர் காத்திருக்கிறார்.   பரபரப்பு இசை ஒலிக்க ஆர்மோனியம் ஹென்றி சாரும் தயாராக இருக்கிறார்.( மின்னணு கீ போர்டெல்லாம் அப்போதில்லை ) வில்லன் நடிகரும் சூடுபட்ட இடத்தில் இரத்தத்தை வழியவிட  சிவப்புச் சாயத்தை இடது கையில்  எடுத்துத் தயாராகி விட்டார். ஒளியமைப்பாளரும் சிவப்பு ஒளி பாய்ச்ச துப்பாக்கி வெளிவரும் அந்த நேரத்தை எதிர்பார்த்திருக்கிறார். சி.ஐ.டி.யாக நடித்தவர் துப்பாக்கியை இரண்டு முறை இழுத்துப் பார்க்கிறார் . நூலில் வசமாய்ச் சிக்கிக் கொண்ட துப்பாக்கி பையைவிட்டு வர மறுக்கவே, பைக்குள் கையைவிட்டவாறே துப்பாக்கியை சட்டையோடு தூக்கி வில்லனுக்கு நேரே நீட்டி  “டொப்” என்று  சுடும் சத்தத்தையும்  தானே வாயொலியில் கொடுத்து விட்டார்.  வில்லனாக நடித்தவரும் அதற்கேற்ப கத்தியைக் கீழே போட்டுவிட்டு  இரத்த நிற சாயத்தை வலது மணிக்கட்டில் தடவிக்கொண்டு அலற, அதற்கடுத்து உண்மையான துப்பாக்கிச் சூடு சத்தமும்,  ஒளி,இசை அதைத் தொடர பார்வையாளர் பகுதியில் ஒரே ஆரவாரம். பாராட்டியா? பகடி செய்தா? தெரியவில்லை. ஆனால் நாடக இயக்குநர் மனசு பட்ட பாட்டை மேடை நாடகம் நடத்தி அனுபவித்தவர்களே உணர்வர்.  தொடர்ந்து காவல் துறை வந்து வில்லனைக் கைது செய்து நீதிமன்றத்தில் நேர்படுத்துவதாகக் காட்சி.

              நீதிமன்ற அரங்க அமைப்பும் வழக்காடு நிரலும்  நாடகத்தின்  சில்லறைச் சிக்கல்களை மறக்கடித்து அனைவர் பாராட்டுகளையும் பெற்று  வெற்றியாக அமைந்தது. முட்களாய் இருக்கும்  தோலைக் களைந்துதானே பலாச்சுளையின் இனிமையைச் சுவைக்க முடியும். அப்படித்தான் அமைந்தது முத்தமிழ்விழா.

                                  ---- இன்னும் பல சுவையாய் வரும்.


Thursday, April 13, 2017

எனது மேடை நாடக அனுபவங்கள் - தொடர் -11



எதையும் எதிர்கொள்... எல்லாம் எளிதாகும் .

                         புலியைப் பார்த்துப் பூனை சூடு போட்டுக் கொண்டது போல அன்றைய  மாடர்ன் தியேட்டர்ஸ் திரைப்படங்களைப் பார்த்ததன் விளைவு பல உத்திகளை நாடகத்தில் கையாள வேண்டும் என்று என்னை உந்தித் தள்ளியது என்றுதான் சொல்ல வேண்டும்.

              விரலுக்குத் தகுந்த வீக்கமென்றால் சரி. திரைப்பட நுட்பங்களை மேடை நாடகத்தில் அரங்கேற்றுவதில் அத்தனை எளிதானதல்ல என்பது  இந்த நாடகத்தில் பட்ட பிறகுதான் உரைத்தது.

            துப்பாக்கி சுடும் ஒலி இயல்பாக இருக்க வேண்டும். அதையும் முன்னர் வெளிப்படுத்தாமல் நிறை ஒத்திகை( grand reharsal ) அன்று செய்து காட்டி அசத்தலாம் என்று நான் நினைத்ததன் விளைவு  அப்படி  ஒரு சிக்கலை உருவாக்கிவிடும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.

                  வேட்டைத் துப்பாக்கியில்  ரவைகள் போடாமல் வெறும் கருமருந்தைப் போட்டு  வெளிப்பக்கமாக வெடிக்கச் செய்யப் போவதை காட்சியில் நடிக்கும் நடிகையிடமாவது முன்னரே நான் கூறியிருக்க வேண்டும். அதிலும் வேட்டைக்காரர் இரட்டைக்குழல் துப்பாக்கியின்  இரண்டு விசைகளையும் தவறுதலாக அழுத்த இரண்டு குழாய்களிலும் நிரப்பியிருந்த மருந்து ஒரே நேரத்தில்  வெடித்த சத்தம் அந்த பயிற்சி அறைக்குள் இருந்த அத்தனை பேரையும் அதிரத்தான் வைத்தது.

                 அதிலும் கதாநாயகி நடிகை அடிவயிற்றைப் பிடித்துக் கொண்டு அலறியபடி விழவும்  எல்லோரும் கொஞ்ச நேரம் உறைந்துதான் போனோம்.  முதலில் ஒன்றுமில்லை, அதிர்ச்சியில் பயந்து விட்டார். கொஞ்சம்  தண்ணீர் முகத்தில் தெளித்து, தேநீர் கொடுத்தால் சரியாகிவிடும் என்று நடிகையை ஏற்பாடு செய்து அழைத்து வந்த நண்பர் சொல்ல, அப்படிச் செய்த பின்னரும் வலி தாளாமல் நடிகை சுருண்டு படுத்து அரற்றியதும் எங்களுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை.

                  உடன் வந்த  அவருடைய இளைய  சகோதரி( அவரும்  அந்த நாடகத்தில் நகைச்சுவை பாத்திரமேற்று நடிப்பவர் )  வலியால் துடித்த நடிகையிடம் தனியாக ஏதோ கேட்டுவிட்டு “ உடனடியாக ஒரு மருத்துவரிடம் அவரைக் கொண்டு செல்ல வேண்டும்”  என்றார்.  இரவு மணி 1.30.அந்த நேரத்தில் எந்த மருத்துவரைத் தேட முடியும்? அந்தப் பகுதியில் அப்போது இரவி என்ற மருத்துவர் ஒருவர்தான் குடியிருந்தார். அவரிடம் அழைத்துப் போகலாமா என்று கேட்டதற்கு அவரின் இளைய சகோதரி. “இல்லை ஒரு பெண் மருத்துவரிடம்தான்  உடனடியாகக் காட்ட வேண்டும்” என்று பரபத்தார்.

                    இப்போதென்றால் பெரியார்நகர், கம்பன் நகரில 7,8 பெண் மருத்துவர்கள் இருக்கிறார்கள். அப்போது அது   புதுவயல் என்ற பெயரில்  வெறும் வயல்வெளியாகத்தான் இருந்தது. எப்படியும் 2 கி.மீ க்கு அப்பாலுள்ள நகருக்குள்தான் கொண்டு சென்றாக வேண்டும். இப்போது போல ஆட்டோ, டாக்சிகள்  அந்தப் பகுதியில் அதிகமில்லை. மன்ற உறுப்பினர் நாக.செயராமன் மட்டும் ஒரு லூனா வண்டி வைத்திருந்தார். அதில் அந்த நடிகையைக் கொண்டு செல்ல முடியாது என்று இளைய  சகோதரி சொல்ல. இரயில்  பயணிகளை நம்பி  தகரக் கொட்டகை ஒன்றில் ஒரு வில்வண்டி ( மாட்டு வண்டிதான்)  வைத்திருந்த வால்பூசாரி என்பவரை அமர்த்தினோம்.

                   அப்போதுதான் தொடங்கியிருந்த மகளிர்க்கு ஒரு தனியார் மருத்துவமனை. ( பெயர் வேண்டாம். இப்போது அவர்கள் மகளிர் மருத்துவமனை சிறப்பாக இயங்கி வருகிறது.) அந்த மருத்துவ மனைக்குக் கொண்டு சென்றோம். நன்றிக்குரிய அப்பெண் மருத்துவர் உடனடியாக அவருக்கு சிகிச்சை மேற்கொண்டு, பயப்பட ஒன்றுமில்லை.  ஒருநாள் உள்நோயாளியாக இருக்க வேண்டுமென்றார்.  மறுநாள் நாடகம் .  இரயில்வே ஸ்டேசன் சாலையை முக்கால் பகுதி ஆக்கிரமித்து மேடை அரங்கம்  அன்று மாலையே போட்டாகிவிட்டது. ஒரு இரவுமட்டும் தொடர்வண்டி நிலையம் செல்லும்  நகரப் பேருந்தை  முன்னதாக நிறுத்தி பயணிகளை இறக்கிவிட வேண்டிக் கொண்டிருந்தோம். மறுநாள் 15.01.1969  காலை கொட்டகை பிரித்தாக  வேண்டும். பட்டிமன்றப் பேச்சாளர்கள் வேறு  மறுநாள் திருவள்ளுவர் நாளன்று வேறு இடங்களில் பேச தேதி வாங்கியிருக்கிறார்கள். இந்தச் சூழலில் கதாநாயகி மருத்துவ சிகிச்சையில். என்ன செய்வது?  வேறு நடிகையை ஏற்பாடு செய்து ஒரு பகலுக்குள் பயிற்சியளித்து நடிக்க வைக்க முடியுமா?  நாடகத்தை தள்ளி வைப்பதா? தள்ளி வைத்தால் மீண்டும் எடுத்தக் கூட்டி நடத்த ஏற்படும் கூடுதல் பொருளாதாரத்திற்கு எப்படி ஏற்பாடு செய்வது?

                      இப்படியான எங்களுடைய இக்கட்டான நிலையை ,அந்தப் பெண் மருத்துவரிடம்  தயங்கித் தயங்கி எங்கள் மன்ற உறுப்பினர் நாக.செயராமன் சொல்ல, மருத்துவரும்  நடிகைக்கு ஏற்பட்டுள்ள அதிர்ச்சிநோய்க்கு ஓய்வுதேவை. நாளை மதியம் வரை பார்க்கலாம், தளர்ச்சி நீங்கி இயல்புநிலைக்கு திரும்பிட்டா அதிக அலட்டல் இல்லாமல் அவர் நடிக்கலாம். என ஆறுதலான வார்த்தைகள் சொன்னார். “எந்த அளவுக்கு அவருக்கு உயர் சிகிச்சை அளிக்க முடியுமோ அந்த அளவுக்கு செய்யுங்கள் செலவைப் பத்திக் கவலை வேண்டாம்” என்ற வேண்டு கோளோடு அவருடைய சகோதரியையும்  செயராமனையும்  உடனிருக்கச் சொல்லிவிட்டு நான் திரும்பிவிட்டேன் குழப்பத்திலிருக்கும் உறுப்பினர்களுக்கு ஆறுதல் சொல்ல.

             மறுநாள் முத்தமிழ்விழா நடத்துவதா தள்ளிவைப்பதா? என   ஒரு முடிவுக்கு வரஇயலாமல் விடியும்வரை குழம்பிய மன்ற உறுப்பினர்களிடம்  “எது நடந்தாலும் சமாளிப்போம். நாளை நல்ல பொழுதாய் விடியட்டும் நமக்கு” என்று கூறிவிட்டு  மீண்டும் மருத்துவமனை சென்றேன். 

                  குளுகோஸ் ஏறியவாறு தூங்கிக் கொண்டிருந்த அந்த நடிகை காலை 7 மணிக்கு  கண் விழித்த போதுதான்  எனக்கு நல்ல மூச்சு வந்தது. “எப்படிம்மா இருக்கு இப்ப?” எனக் கம்மிய குரலில் கேட்ட எனக்கு அந்தப்பெண்
 “ ஒன்னுமில்லை சார். மத்தியானம் வரைக்கும் ரெஸ்ட் எடுத்துட்டா நார்மலாயிடுவேன். திட்டமிட்டபடி நாடகத்தை நடத்திடலாம்” ன்னு  தைரியம் சொன்னபோது என் கண்கள் என்னையறியாமல் பனித்தன.

                         அவருடைய சகோதரியும் அதையே வழிமொழிய, உடல் நலம் பாதித்த நிலையிலும்  தமிழர் திருநாளில் ஏற்பாடு செய்த ஒரு பொது நிகழ்ச்சி தங்களால் தடைப்பட்டுவிடக் கூடாது எனத்  தன் வலியையும் பொறுத்துக் கொண்டு “நடத்திடலாம்“ என்று ஊக்கமளித்த அந்த இலங்கைச் சகோதரிகளின் மனித நேயப் பண்பாட்டை  நினைக்கும் போது இன்றும்  ஈழ மகளிரின் இனமான மனிதநேயத்தை எண்ணி வியக்காமல் என்னால் இருக்க முடியாது.

                    புதிய உற்சாகத்தோடு திரும்பி  மன்ற உறுப்பினர்களைக் கூட்டி  இலங்கைச் சகோதரிகளின் உறுதிப்பாட்டைச் சொல்லி, திட்டமிட்டபடி முத்தமிழ் விழாப் பணிகளைத் தொடர முனைந்தோம்.  கதாநாயகனும் காமெடியனும் தங்களுடனான டூயட் காட்சிகளுக்கான பயிற்சி  முழுமை பெறாமலிருப்பதைத் தயக்கத்துடன் சொன்னார்கள்.   இரண்டு பாடல் காட்சிகளைத் தவிர்த்து விடலாமா என நான்  கேட்க, அவர்கள் பெண்ணோடு ஆடிப்பாடும் வாய்ப்புப் பறிபோகிறதே எனத்  தயங்க “ சரி  உங்களுக்கு எப்படி ஆட வருதோ அப்படி ஆடுங்கள். கதாநாயகிக்கு மட்டும் அதிகம் சிரமமில்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்”  என்று உரிமையளித்தேன்.

                     காலை 11.00 மணிக்குத் திட்டமிட்டபடி நன்கொடை பரிசுச் சீட்டுக் குலுக்கலை நிதிக்குழு  நடத்தியது. அரங்க அமைப்பு  , ஒலி ஒளி , சிலைடு, ஒப்பனையாளர்களுக்கான வழிகாட்டலைச் செய்து கொண்டிருந்தாலும் நடிகையர் மாலை 6 மணியாகியும் வராதது மனதுக்குள் கம்பளிப் பூச்சியாய் அரிக்கத் தொடங்கியது.  

                                 இன்னிசை நிகழ்ச்சியைத் தொடங்கும்  நேரமும் கடந்து கொண்டிருந்தது. இசைக்குழு பாடகி பாடகர் தயாராக இருந்தனர். பட்டிமன்றப் பேச்சாளர்களும்  வந்துவிட்டனர். பட்டிமன்ற நடுவர்  “இன்னும் கச்சேரியே ஆரம்பிக்கலையா? எப்ப கச்சேரி முடிச்சு எப்ப நாங்க பட்டிமன்றம் பேசுறது?” ன்னு புலம்ப ஆரம்பிச்சுட்டார். மருத்துவமனையிலிருந்து இன்னும் நடிகைகள் வரலியேன்னு தவிச்சுக்கிட்டிருந்த நான் அவரோட கேள்வியையும் அலட்சிப் படுத்த முடியாம இன்னிசை நிகழ்ச்சியை தொடங்கச் சொல்லிட்டு  பக்கத்துப் பிசிஓ மூலம் அந்த மருத்துவ மனைக்குத் தொடர்பு கொள்ள ஓடுனேன். ( அப்ப ஏது செல்போனெல்லாம்)  அந்த நேரத்தில் ஒரு வாடகைக் காரில் நடிகையர் இருவருடன் வந்திறங்கினார் ஒருங்கிணைப்பாளர் நாக.செயராமன்.

                     மனசு நிம்மதியோட அவங்களை வீட்டுக்கு அழைச்சிக்கிட்டுப் போய் காபி கொடுத்து கொஞ்சநேரம் ஓய்வெடுக்கச் சொல்லிட்டு மீண்டும் மேடைக்கு வந்தப்ப, இன்னிசை நிகழ்ச்சி அருமையா நடந்துக்கிட்டிருந்துச்சு. பட்டி மன்ற நடுவர் என்னைக் கூப்பிட்டு  “கச்சேரியை முடிக்கச் சொல்லுப்பா. பட்டிமன்றம் தொடங்கணும்” ன்னார். திருச்சியிலேருந்து  பணம் கொடுத்துக் கூட்டிவந்த பிச்சை குழுவினரை ஒரு மணிநேரத்துக்குள்ளே முடிக்கச் சொல்லி மேடையிலேறிக் காதைக் கடிக்க , மனசில்லாம அவரும் அடுத்த பாட்டோட கச்சேரிியை முடிச்சார்.

                     அடுத்து பட்டி மன்ற நடுவர், பேச்சாளர்கள் பற்றிய அறிமுகம் செய்ய மேடைக்குப் போன என்னை ஒப்பனையாளர் மறிச்சு “ எப்ப ஒப்பனை ஆரம்பி்க்கிறது? ன்னு ஒரு கொக்கியைப் போட்டார். மரபுப்படி இயக்குநரை வச்சுத்தான் ஒப்பனையை வழிபாட்டோடு தொடங்குறதுன்னு அவர் அடம்பிடிக்க, பட்டிமன்றப் பேச்சாளர் அறிமுகத்தை முடிச்சிட்டு, ஒப்பனை அறைக்குள்ளே நுழைஞ்சு  நடிகர்கள் ஒப்பனையை  ஆரம்பிக்கச் சொன்னேன். .

நடிகையர் தனியா ( ஒரு போர்வை மறைப்புதான்) ஒரு இடத்துல ஒப்பனையை முடிக்க , பட்டிமன்றம் முடிஞ்சது பத்தரைக்கு.

               நாடகத்துல முதல் காட்சி ஒரு செல்வந்தர்  தன் வீட்டில் தூக்கில் தொங்குறதாகவும், அவரைத் தேடிவர்ற அவரோட மகள் தலையில், தொங்குகிறவர் கால்கள்   இடிக்க  நிமிர்ந்த பார்த்து ,மகள் அலறி மயங்கி விழுவதாகவும் அமைச்சிருந்தேன்.

                   அதிர்ச்சிக்காக சிகிச்சை பெற்று வந்துள்ள பெண்ணுக்கு இந்த அதிர்ச்சியான காட்சியை வைப்பதா, நீக்கிடலாமா ? ன்னு நடிகையிடம் கேட்ட போது  கதையோட சஸ்பென்சே அந்த முதல் காட்சிதான். அதை நீக்குனா கதை புரியாது, நாடகத் தொடர்ச்சியும் இருக்காதுசார். இருக்கட்டும் நா நடிக்கிறேன்னுச்சு.

                  உள்ளுக்குள்ளே எனக்கு உதறல் . இருந்தாலும்  இவர் எப்படிச் செத்தார் ன்னு துப்பறியும் கதை என்பதால் காட்சியை வெட்டாமல் நடத்த ஏற்பாடு செஞ்சு  தூக்குக்கயிறை கொட்டகையின் மூங்கிலில் மாட்டி, தூக்கில் தொங்குறவர்க்கு பாதிப்பு இல்லாத வகையில் முடிச்சுகள் போட்டு கழுத்தில் கயிற்றை மாட்டி தொங்கவிட்டாச்சு. திரை விலகியதும் தொங்கும் கால்களில் மட்டும் வெளிச்சம் பாய்ச்ச ஒளியமைப்பாளர்க்கு அறிவிப்பு கொடுத்திருந்தேன். 
திரையை விலக்கும் முன் ஒளியமைப்பாளர் செல்வின் வந்து “தெரு முச்சந்தியில் எரிந்து கொண்டிருக்கும் மெர்குரி விளக்கை அணைச்சாதான் கால்மட்டும் தெரியுறமாதிரி லைட் அடிக்க முடியும் . இல்லேன்ன மேடை முழுதுக்கும் அந்த வெளிச்சம் வரும்.”ன்னாரு
அந்தப் பகுதிக்கே அந்த ஒரு பச்சை விளக்குதான் பரவலான வெளிச்சம் தர்ற்து. அதை தெரு விளக்குப் போடுற நகராட்சிப் பணியாள் வந்தாத்தான் போடவோ, நிறுத்தவோ முடியும். இதை யோசிக்காம விட்டுட்டோம்.
தயக்கத்தைப் பார்த்த எங்கள் மன்ற உறுப்பினர் ( மின் நுட்பாளர்தான்) விறுவிறுன்னு மின் கம்பத்துல ஏறி ப்யூஸ் கட்டையைக் கழட்டிட்டு வந்துட்டான். இப்ப அரங்கமும் பார்வையாளர்களும் இருளில் .

               ஒருவழியா திரை விலகியது.  தொங்கும் கால்கள் மட்டும் தெரிவதுபோல் ஒளி பாய்ச்சப்பட்டது.  அங்கு வந்த மகள் தலையில் கால்கள் தட்டுகிறது. மகள் கால்களைப் பிடித்துக் கதறி மயங்கி விழவேண்டும் . உணர்ச்சி வசப்பட்ட நடிகை தொங்கிய அப்பா நடிகரின் கால்களை இறுகப்பற்றி இழுத்ததில் கொட்டகை பந்தலில் உறுவாஞ்சுறுக்கு போட்டிருந்த கயிறு உறுவத் தொங்கிக் கொண்டிருந்தவர் அப்படியே நடிகைமீது சரிந்து விழுகிறார்.  பார்வையாளர்களுக்கு இது பிரமிப்பான காட்சி. ஆனால் எங்களுக்கு?
                                 
                                                                      --- தொடரும்.







இயற்கையின் படைப்புகள் எல்லாவற்றையும் நேசிப்போம். ஏற்றம் தரும் மாற்றங்களை யோசிப்போம்.

Sunday, April 9, 2017

எனது மேடை நாடக அனுபவங்கள் தொடர் -10


 விறுவிறுப்பும் பரபரப்பும்!!

                 இந்தி எதிர்ப்புப் போராட்டத்துல மும்முரமா ஈடுபட்டு பி.யு.சி.யோட கல்லூரிப் படிப்புக்கு முற்றுப்புள்ளி வச்சுட்டு,  நாடகம், விளையாட்டுன்னு சுத்திக்கிட்டிருந்த என்னை,  அவர் வேலைபார்த்த இரயில்வே தட ஆய்வாளர் அலுவலகத்துல  ஒரு தற்காலிக வேலையில சேர்த்துவிட்டார் என் அப்பா.

            அந்த தடஆய்வாளர்  ஒருநாள் “ஏன் தம்பி ஏதாவது ட்ரைனிங் கோர்ஸ்க்கு அப்ளை பண்ணி வையேன் ” ன்னாரு. அப்படி விண்ணப்பிச்சிருந்ததுலே புதுக்கோட்டை தொழில் பயிற்சிக் கூடத்துல இன்ஸ்ட்ரூமெண்ட் மெக்கானிக் பிரிவுல சேர்ந்து படிக்கிற வாய்ப்பு கிடைச்சது.

          கெடச்ச நேரத்துல தட்டச்சு லோயர் முடிச்சு ஹையர் பயிற்சிக்குப் போயிக்கிட்டிருந்தேன். அந்த  வாசவி நிறுவனத்தை நடத்துன நன்றிக்குரிய ஆசிரியர் சுந்தரேசன் “ ஏப்பா, ஆதார ஆசிரியர் பயிற்சிக்கு அப்ளிகேசன் போட்டு வை ” ன்னாரு. அம்மாவும் நச்சரிக்க அதுக்கும் விண்ணப்பிச்சு வச்சேன்.
 எதிர்பார்க்காம  புதுக்கோட்டை ஆதார ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் இருந்து நேர்காணலுக்கு அழைப்பும் வந்தது..கலந்துக்கிட்டுத் தேர்வும் ஆனது.  இப்போ அப்பா விருப்பப்படி  தொழிற்பயிற்சியைத் தொடர்வதா? அம்மா விருப்பப்படி ஆசிரியர் பயிற்சியில சேர்வதான்னு ஒரு இக்கட்டான நிலை. இறுதியில் அம்மா விருப்பப்படி ஏழே மாதத்தில் தொழிற்பயிற்சியை இடைவிட்டுட்டு ஆசிரியர் பயிற்சியில் சேர்ந்தேன்.

சரி நாடக அனுபவங்களைச் சொல்றப்ப இந்த சொந்தக் கதை எதுக்குன்னு உங்க மனக்குரல் கேக்குது. 1967,1968 ஆண்டுகளில் நான் புதுக்கோட்டை ஆதார ஆசிரியர் பயிற்சியை விடுதியில் தங்கிப்படிக்க வேண்டியிருந்ததாலே  மணிமன்றத்தின் இரண்டு ஆண்டு நாடகங்கள் நடத்த முடியாமப் போச்சு. அதுக்குத்தான் அந்த முன்னுரை.

                   புதுக்கோட்டை மார்த்தாண்டபுரம் பயிற்சிப் பள்ளி விடுதியில் தங்கியிருந்தாலும் வாரம் ஒருமுறை தெரிஞ்சும் தெரியாமலும் வீட்டுக்கு வந்து அப்பா அம்மாவோட கொஞ்சநேரமும், மன்ற உறுப்பினர்களோட அதிக நேரமும் கலந்து பேசிக்கிட்டுத்தான் இருந்தேன்.

                இந்த இரண்டு ஆண்டு  நாடக ஏக்கத்தையெல்லாம் கொட்டித்  தீர்க்க அருமையான வாய்ப்பாக அமைந்தது 1969 பொங்கல் நாள்  அன்று மணிமன்றம் சார்பாக  இயல், இசை, நாடகம் மூன்றையும் சேர்த்து முத்தமிழ் விழா நடத்துவோம் எனக் குழு முடிவுசெய்திருந்தது. அந்தச் சமயத்துல செயல்திறமும்  கலை ஆர்வமும் மிக்க நாக.செயராமன் ங்கிற நண்பர் ( ஆர்.எம்,எஸ் ஸில் பணிபுரிந்தவர் )  மன்றத்தில் சேர்ந்து முத்தமிழ்விழாவைச் சிறப்பாக நடத்த நல்ல ஒத்துழைப்பைத் தந்தார். அதன்படி புதுக்கோட்டையில் அந்தக் காலத்தில் புகழ்பெற்றிருந்த தமிழறிஞர்களைக் கொண்டு 
 “ நாட்டைக்காப்பவன் உழவனா? வீரனா? “ என்ற தலைப்பில் பட்டிமன்றமும், திருச்சி மாலா -பிச்சை ஹென்றி குழுவினரின் இன்னிசை நிகழ்வும்,அதனைத் தொடர்ந்து  “அவனா செய்தான்?” என்னும் மர்ம நாடகமும் நடத்த முடிவானது.


             மணிமன்றத்தின்  குறிப்பிடத்தக்க நிகழ்வாக இந்நிகழ்வு அமைந்திருந்தது. அளவில் பெரிய அரங்கம்,  முதன் முதலாக இரண்டு பெண்பாத்திரங்கள் பங்கேற்கும் நாடகம், நடிகையர் படங்கள் பதித்த 1க்கு 4 துண்டறிக்கை . அதில் நண்பர்களின் வற்புறுத்தலுக்காக எனது ஒளிப்படமும். 
( நடுவில் இருப்பது நானென்று நீங்கள் நம்பத்தான் வேண்டும்.. அது ஒரு கனாக்காலம்)  திரையரங்குகளில் சிலைடு மூலம் விளம்பரம் . இப்படி ஏகப்பட்ட விரிவான ஏற்பாடுகளில்  மன்ற உறுப்பினர்களும் தேனீக்களாய் உழைத்தனர்.

                  இந்த மேடை நாடகக் கதையிலும் காட்சிகளிலும் பல புதுமைகளைக் கையாளத் திட்டமிட்டிருந்தேன். .மாடர்ன் தியேட்டர்ஸ் படங்கள் பார்த்தது, இராஜேஸ்குமாரின் கிரைம் நாவல்கள் படித்தது இவற்றின் தாக்கத்தில்  ஒரு துப்பறியும் கதை உருவானது. இந்நாடகத்தில்  இரண்டு காதல் டூயட்கள், இரண்டு கேளிக்கை விடுதி நடனங்கள்,  சோகப்பாடல்,( முதன் முதலாகச் சொந்த மெட்டில் ) இரண்டு வீரம் காட்டும்  சண்டைக்காட்சிகள் , நகைச்சுவை, மலைக்குகை செட்டிங். நீதிமன்ற அமைப்பு, பாடல்கள் எனப் பல  அம்சங்கள் கலந்திருந்தன. 

               1968 ஆசிரியர் பயிற்சித் தேர்வு முடித்த கையோடு எழதத்தொடங்கி ஆறுமாதங்களாகக்  கதை, காட்சி அமைப்புகள் திட்டமிட்டு உருவாக்கப்பட்டன.

                   பெண்பாத்திரங்களோடு மன்ற உறுப்பினர் நடிப்பதில முன்னர் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களைப் போக்க  திருச்சியிலிருந்து நடிகையரை இருமுறை பயிற்சிக்கு அழைத்து இணை நடிகர்களின் கூச்சம் படபடப்பு இவற்றை இலகுவாக்கினேன்.

                    செலவுகளைப் பற்றிக் கவலைப் படவேண்டாம் என நாக. செயராமன் தலைமையிலான் நிதிக்குழு தெம்பளித்ததால்   ( பொது நன்கொடையாளர்கள் மனமுவந்து அள்ளித் தந்தனர் ) அரங்க அமைப்பு  கூடுதலான இசைக்கருவிகளோடு  பாடல் பதிவு எல்லாம் சிறப்பானவையாகவே  அமைக்க முடிந்தது.

                வழக்கம்போல நாடகத்திற்கு முதல்நாள் இரவு இறுதி முழு ஒத்திகை  அந்தப் பகுதிப் பள்ளிக் கட்டடத்தில் ( அனுமதி பெற்றுதான் ) நடந்தது.  நடிகையர் இசைக்குழு. ஒளியமைப்பாளர் . ஒப்பனையாளர். அரங்கப் பொருள் கையாள்வோர் எல்லாம் கூட, இரவு 9.00 மணிக்கு ஒத்திகை தொடங்கியது 

                 27ஆவது காட்சியில்,  ஒரு மலைக் குகைப் பகுதியில் கடத்தி அடைத்து வைத்திருக்கும் கதைத் தலைவியை மீட்கச் சென்ற கதைத் தலைவனுக்கும் (கதாநாயகன்) , எதிர்த் தலைவனுக்கும்( வில்லன்)  சண்டை நடக்கும். அப்போது வில்லன் கையிலிருந்த துப்பாக்கி கீழே விழ, தன் இடுப்பிலிருந்த கத்தியால் கதாநாயகனை வில்லன் குத்த முயல்வான். கதாநாயகனைக் காப்பாற்ற கீழே கிடக்கும் துப்பாக்கியை கதைத்தலைவி  எடுத்து வில்லனைச் சுடுவதாகக் காட்சி.

               இதில் துப்பாக்கி வெடிச் சத்தம் இயல்பாக இருக்கவேண்டும் என்று எங்கள் குழுவில் சேர்ந்திருந்த வேட்டைக்காரர், தனது வேட்டைத் துப்பாக்கியில் வெறும் கருமருந்தை நிரப்பி வெடிக்கச் செய்வதாக  ஒத்துக்கொண்டிருந்தார்.( இதை யாருக்கும் சொல்லாமல் கமுக்கமாகவே வைத்திருந்தேன்)  சண்டைக்காட்சியைச்  சில திருத்தங்களோடு பயிற்சியளித்துக் கொண்டிருந்தேன். கதாநாயகி கையில்  துப்பாக்கியை எடுத்து வில்லனை நோக்கி நீட்ட, நான் கைதட்ட, வேட்டைத் துப்பாக்கியை  அவர்  வெளிப்பக்கமாக வெடிக்கச் செய்யவேண்டும். திட்டமிட்டபடி  குறித்த நேரத்தில் நான் கைதட்ட  துப்பாக்கி வேட்டுச் சத்தம் காதைப் பிளக்குமளவு கிளம்பியது. அவ்வளவுதான்  சுருண்டு விழவேண்டிய வில்லனுக்குப் பதிலாக கையில் துப்பாக்கியை வைத்திருந்த நடிகை அடிவயிற்றைப் பிடித்துக் கொண்டு “அம்மா” வென அலறியபடி கீழே விழுந்தார். 

                 கூடியிருந்த அத்தனை பேருக்கும் ஒன்றும் புரியவில்லை. எல்லேர்ரையும் பரபரப்பு தொற்றிக் கொண்டது. நடிகைக்கு என்ன ஆனது? 
                                                                                --- அடுத்த தொடரில் 

Friday, April 7, 2017

எனது மேடை நாடக அனுபவங்கள் தொடர்ச்சி -9

 கிழிஞ்சதோட  முடிஞ்ச கேரக்டர் 

                        மேடை நாடகம் நடத்துவது மாதிரி  சிரமமான  செயல் வேறு இருக்க முடியாது என்பது எனது பட்டறிவில் உணர்ந்த உண்மை.. அதிலும் தொழில்முறையல்லாதவர்களை வைத்து, எழுதிய உரையாடல்களுக்கு உயிரூட்டி மேடையில் வெற்றி காண்பது என்பது மிக மிகக் கடினம்.

            ஆர்வக்கோளாறுல நடிக்கிறேன்னு  பாடத்தை வாங்கிப்புட்டு , ஒரு மாதகாலம் பயிற்சியும் பெற்று,  மேடை ஏறும்போது  படபடப்பாலும், பயத்தாலும் வசனங்களை மறந்து வேர்க்க விறுவிறுக்க நிக்கிறவங்க  ஒரு பக்கமுன்னா , மேடையில் எதிர்பாராமல் ஏற்படும் இடையூறுகளால் நாடகத்தின் போக்கையே மாற்றிவிடும் நண்பர்கள் இன்னொரு பக்கம்.

              ஒளிப்பதிவு செய்து தொகுத்து வெளியிடும் காணொளி நிகழ்ச்சிகளிலோ, சின்னத்திரை வண்ணத்திரை நிகழ்ச்சிகளிலோ , ஏன் வானொலி நிகழ்ச்சிகளாக இருந்தால்கூட ஒரு தவறு நடந்துவிட்டால் அதைத் தவிர்த்துவிட்டு மீண்டும் மீண்டும் ஒலி, ஒளிப் பதிவுகள் செய்து வெட்டி ஒட்டி சீர்செய்துவிட முடியும் இன்றைய மின்னணு தொழில் நுட்பத்தாலே.  தெருக்கூத்துகளில்கூட  தவறாப் பேசிட்டாச்  சப்பைக்கட்டு கட்டி சமாளிச்சுட முடியும். ஆனால் சமூக நாடகங்களில் ஒரு வசனமோ, ஒரு காட்சியோ பிறழ்ந்து போய்ட்டா  அதை எந்த நிலையிலும் ஈடு செய்ய முடியாது.

            அதுபோலத்தான் பாசத்தின் முடிவு நாடகத்தில் விறைப்பாகவும், கடுமையாகவும் நடிக்க வேண்டிய காவல் துறை அதிகாரியாக நடிச்சவர்  முதல் அரங்கேற்றம் என்பதால் , எதிரே இருந்த கூட்டத்தைப் பார்த்துப் பயந்து வேர்த்து விறுவிறுத்து, படிச்சதில பாதியை மறந்துட்டு   “பளார்“ வாங்கி ஒப்பனை அறையில் உதறிப்போய் நின்றதும்.

               அவர்தான் அப்படின்னா    காவலராய் நடித்தவர், ஒரு  காட்சியில் வில்லனின் கையாளைக் கைது செய்து காவல் நிலையத்துக்கு அழைத்து வருவதாகவும், வழியில்  களைத்துப் போன காவலர், சற்று உட்கார்ந்து ஓய்வெடுத்தபின் செல்லலாம் எனக் கூறி, ஒரு தச்சுப் பட்டறையின் முகப்பில் கிடந்த ஒரு ஸ்டூலில்    உட்கார்வதாகவும், அந்த ஸ்டூலில் டிசைன் ஃப்ளை ஒட்டுவதற்காக பெவிபிக்ஸ் பசையைத் தடவி கடைக்கார தச்சர் காய வச்சிருந்தது தெரியாமல், காவலர் அதில் உட்கார்வதாகவும், எழ முயற்சிக்கும் போது ஸ்டூலோடு அவரது கால் சட்டை ஒட்டிக் கொள்வதாகவும்,  தச்சர் வந்து ஸ்டூலை இழுக்க, போக்கிலி போலீசை இழுக்க, தச்சர் இழுத்ததுல போலீசு தச்சர்மேலே விழுவதாகவும் , அந்த நேரத்தைப் பயன்படுத்திப்  போக்கிலி தப்பித்து ஓடிவிடுவதாகவும் அந்தக் காட்சிய அமைச்சிருந்தேன். 

              ஸ்டூல் கனமா இருந்ததால அதில எவ்வளவு பசை தடவினாலும் காக்கி கால்சட்டையோட  ஸ்டூலை ஒட்ட வைக்க முடியலேங்கிறதை  முதல்நாள் ஒத்திகையிலேயே  தெரிஞ்சுபோச்சு. அதுக்காக மர ஸ்டூலின் இரு விளிம்பிலும் பக்கவாட்டில் தலா ஒரு ஆணியை அடிச்சு ஊக்குபோல வளைச்சு விட்டிருந்தோம். உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கும்போதே போலீசாக நடிப்பவர் தனது கால்சட்டையை அந்த ஆணி ஊக்கில் மாட்டி வைக்கப் பயிற்சி கொடுக்கப்பட்டிருந்தது.

                  திட்டமிட்டபடிதான்  காவலர் உட்கார்ந்து எழுந்திரிக்கும் வரை நடந்தது. தச்சர் வந்து ஸ்டூலை 2,3 முறை இழுக்கும்போது காவலர் பார்வையாளர்களுக்குத் தெரியாமல் தானே ட்ரவுசரில் மாட்டியிருந்த ஊக்குகளைக் கழட்டிவிட வேண்டும் என்பது ஏற்பாடு .    போலீசா நடிச்சவர் மாட்டியிருந்த ஊக்கைக் கழட்டிவிட மறந்துவிட,  மூன்றாம் முறை இழுத்தும் ஸடூல் வராததால், தச்சராக நடித்தவர் பலமாக ஸ்டூலை இழுக்க..காவலரின் ட்ரவுசர்  கிழிஞ்சு  ஸ்டூலோடு போயிடுச்சு. பாவம் உள்ளாடை ( ஜட்டி ) போடாமல் இருந்த காவலர் பின்பக்கம் ஆடையில்லாமல அரைநிர்வாணமாய் நிற்க, போக்கிலி ஓடிப்போக,  பார்வையாளர் பக்கத்திலிருந்து வந்த  ஆரவாரம் அடங்க வெகுநேரமாயிற்று. தனது நடிப்பினை ரசித்து வந்த சிரிப்பொலி என நெனச்சு  காவலராய் நடிச்சவன்  திரும்பிப் பார்த்து, வெட்கம் தாளாமல் மேடையைவிட்டு இறங்கி ஓடியே போயிட்டான். 

             அதையடுத்து, காவல் நிலையத்தில் போலீசு 255  ஆஜராக வேண்டிய காட்சிக்கு அந்த காவலரைத் தேடினால் ஆளையேக் காணோம். ஒரு 5 நிமிடங்கள் தேடியும் ஆளைக் கண்டுபிடிக்க முடியவில்லை. பார்வையாளர் பக்கமிருந்து “நாடகத்தை லேட் பண்ணாம நடத்துங்கடா”  என்ற குரல்கள் பெருக்கெடுக்க ஆரம்பிச்சிடுச்சு. உள்ளே ஒப்பனை அறைக்குள் கிடந்த அவருடைய சிவப்புத் தொப்பியை வச்சு  உடனடி காட்சி ஒன்னை  உருவாக்க வேண்டியதாயிடுச்சு.

                  தச்சராக நடிச்சவரிடம், இன்ஸ்பெக்டர்  “யோவ்  255”ன்னு கூப்பிடும்போது  அந்த சிவப்புத் தொப்பியுடன் போய் ” சார் அவர் புடிச்சிக்கிட்டு வந்த போக்கிலி  என் கடைக்கிட்ட வந்தப்பத் தப்பிச்சு ஓடிப்போயிட்டான்.”  டிபார்ட்மெண்ட் அவரை சஸ்பெண்ட் பண்ணிருமுன்னு பயந்துக்கிட்டு , தானே வேலையை ரிசைன் பண்ணிட்டதா இந்தத் தொப்பியை உங்கக்கிட்ட ஒப்படைக்கச் சொன்னார் சார்” ன்னு சொல்ல வச்சு அந்த கேரக்டரை அத்தோட முடிச்சு வைக்க  வேண்டியதாச்சு.  எப்படியெல்லாம்  சமாளிச்சிருக்கோம் பாருங்க.
( நாடகம் முடிஞ்சு மூனுநாள் வரைக்கும் அவன் என் கண்ணுலபடாம தலைமறைவு வாழ்க்கைதான் நடத்துனான் )  

                                              --- அடுத்த தொடரில் மிச்ச சொச்சம்.

Tuesday, April 4, 2017

எனது மேடை நாடக அனுபவங்கள் தொடர்ச்சி -8

 எழுதாத வசனமும் நகைச்சுவையான நடப்பும்.

                       அடுத்த அனுபவத்தைப் பகிர்வதற்கு முன் கடந்த இரண்டு நாடகங்களின் துண்டறிக்கைகளை நீங்கள் பார்க்க வேண்டாமா?
 இதோ அவை.
16.06.1966ல் மணிமன்றம் நடத்திய மேடை நாடகத்தின் துண்டறிக்கை.(1க்கு16 கையளவு - சிதைந்தது போக மீதி.
இது இரண்டாவது படைப்பின் துண்டறிக்கை. 1க்கு 8 அளவு சிதைவின் மீதி.


இனி தொடர்வோம்...

         நடனம், பெண்பாத்திரத்தோடு நடந்த  நகைச்சுவையான நாடகத்தைப் பார்த்த பல இளைஞர்கள் மன்றத்தில்  வந்து சேர்ந்தார்கள் 
( உறுப்பினர் ஆண்டு சந்தா எட்டணா கட்டித்தான் )

             நாடகத்தைப் பார்த்த  ஊர்ப்பெரியவர்கள் வெளிப்படையாகப் பாராட்டினாலும் , இளைஞர் கூட்டம் இணைவதில் அவர்களுக்கு உள்ளுக்குள் பதைப்பு இருக்கத்தான் செய்தது.  

                 அடுத்தடுத்த  மாதாந்திர மன்றக் கூட்டங்கள் கலைகட்டத் தொடங்கியது. மன்ற வளர்ச்சியில் ஒருபக்கம் மகிழ்ச்சியடைந்தாலும் இன்னொரு பக்கம் பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியும் இருந்தது. நாடக ஒத்திகை பார்க்க இடம் கொடுக்க மறுப்பு, ஊர்ப்பொது இடத்தில் நாடகம் நடத்தவிடாமல்  நகராட்சி. காவல் நிலையத்துக்கு மொட்டை பெட்டிசன் என்றெல்லாம் மறைவான இடையூறுகள் வரத்தொடங்கின. ஆனாலும் எது வந்தாலும் தடைகளை உடைக்கும்  திறன்வாய்ந்த சில புதிய உறுப்பினர்களின் தைரியத்தில் அடுத்த ஆண்டு உரிய அனுமதி பெற்று தொடர்வண்டிநிலைய சாலை வலது ஓரத்தில் நாடகத்தை நடத்துவது என்று முடிவானது. 

             ஆனால் அடுத்த நாடகம் பெண் பங்கேற்று நடிக்கக் கூடியதாக இருக்க வேண்டும் என்று பெரும்பான்மை உறுப்பினர்கள் குரலெழுப்பினர். நடிகை அரிமளம் சுகாசினி  என்ற பெண் அமெச்சூர் நாடகத்தில் நடிக்கிறார் என்று அவரைக் குறைவான சம்பளத்தில்
 ( 30 ரூபாய்தான் ) நடிக்க ஒப்பந்தம் செய்து கொடுத்தார் ஒப்பனையாளர் சுகி.

                ஊர்வாய், பெற்றோர் கண்டிப்புகளுக்குப் பயந்து பெண்களோடு நடிப்பதைத் தவிர்த்து வந்த நிலை தளர்த்தப் பட்டு பெண்பாத்திரம் குறைவாகப் பங்கேற்கும் வகையில் “பாசத்தின் முடிவு“ என்னும் நாடகத்தினை எழுதி முடித்தேன். 

             இப்போது அந்தக் கதாநாயகிக்கு கதாநாயகனாக யார் நடிப்பது என்பதில் பலருக்குத் தயக்கம்.( மறுநாள் பெத்தவங்கக்கிட்ட மொத்து வாங்கணுமேன்னுதான்) . ஒருவழியா உள்ளுரில் அறிமுகமில்லாத  கண்ணன் என்ற புதிய உறுப்பினரைக் கதாநாயகனா நடிக்க வைப்பதென முடிவானது.

நாடகத் தேதி, இடமெல்லாம் முடிவுசெய்து நோட்டீசும் அச்சாகி வந்து விட்டது.


               அந்தச் சமயத்தில்   அந்தப் பகுதிக்கு குடிவந்திருந்த  மணிநாதன் என்பவர் தனது மூத்த மகள் பிரேமாவை        ( பன்னிரண்டு வயது சிறுமிதான்)  நாடக மேடையில் நடன அரங்கேற்றம் செய்து வைக்க  வேண்டினார்.  அதற்குச் சம்பளம் ஏதும் வேண்டாம். என்றும் கூறினார். காசில்லாமல் இன்னொரு பெண் பங்கேற்பு என்றால் கசக்கவா செய்யும்? உறுப்பினர்கள் ஒப்புதலோடு  நாடகத்திற்கிடை இடையே   அவர் நடனமாட ஒப்பந்தம் ஆனது .

              இந்த நாடகத்திற்கு நடிகை மற்றும் இசைக்குழுவோடு ஒரு முழு ஒத்திகை பார்க்கத் தனி இடம் வேண்டுமே எனத் திணறியபோது அந்தப் பகுதியில் காளீசுவரி எண்ணெய் மில் வைத்திருந்தவர் இரவு கடலை காயப்போடும் இடத்தில் ஒத்திகைக்கு அனுமதி தந்தார்.

                       குறிப்பிட்டபடி நாடகத்திற்கு முதல்நாள் இரவு அந்த ஒத்திகையும் நடந்தது. ஆனால் நாயகன்-நாயகி காதல் நடனக் காட்சியைத் தனியாக மறுநாள் என் வீட்டில் வைத்துப் பயிற்சியளிக்கக் கதாநாயகன் கெஞ்சினான்       ( வெட்கமோ பயமோ )

       அதன்படி எனது வீட்டில் தனியிடத்தில் ( எனது தோட்டத்தில் கட்டியிருந்த ஒரு தென்னங்கீற்றுக் கொட்டகைதான்)  பாடல்களுக்கான ( திரையிசை மெட்டில் எழுதிய பாடல்கள் இரண்டு ) நடன அசைவுகளைப் பயிற்சி யளித்தேன். அந்த இடத்தில்  மின்வசதியில்லாததால் பேட்டரி போட்டு  ஒலிநாடாவில் பதிவு செய்த பாடலைத் திரும்பத் திரும்பப் போட்டதில் நாடா இடையில் சிக்கிக்கொண்டு சிக்கல் கொடுத்தது. 
அதை மன்றத் தலைவர் மின் நுட்பாளர் சுப்பிரமணியன் சரிசெய்து தந்தார்.

              ஒருவழியாய் 14.05.1966  அன்று  மேடையேறிய போது நான் சொல்லிக்கொடுத்த நடனங்களை மறந்து பாக்கியராஜ் பாணியில் உடற்பயிற்சி செய்து காதல் காட்சியை ஒருவழியாய் ஒப்பேத்தினான் கதாநாயகன்.

        இந்நாடகத்தில் நான் எழுதிய நகைச்சுவைக் காட்சிகளுக்கு நடித்த மாரிமுத்து மற்றும் பாலசுப்பிரமணியன் ஆகியோர் பார்வையாளர்களை வயிறு குலுங்கச் சிரிக்க வைத்தனர்.  

          எழுதாத நகைச்சுவை ஒன்றும் மேடையில் நடந்தது. காவல் உதவி ஆய்வாளராக நடித்த மாணிக்கம் என்பவர்  காவலர் சீருடையில் மேடைக்கு வந்து எதிரே இருந்த கூட்டத்தைப் பார்த்ததும் ( பல பகுதியைச் சேர்ந்த உறுப்பினர்கள் நடித்ததால் அவ்வப்பகுதி மக்கள் பெருமளவு நாடகம் பார்க்க வந்திருந்தனர்)   பேச்சு வராமல் திகைத்துப் போய் அப்படியே நின்றுவிட, நான் பாடத்தை எடுத்துக்கொடுத்தும் பேசாமல் நிற்கவே பார்வையாளர்கள் பகுதியில் ஒரே சிரிப்பு விசில் சத்தம். நான் விசிலடித்து விளக்கணைத்து திரையை மூடி அவனைத் திட்ட அவன் எதிரே இருப்பவர்களைப் பார்த்துப் பயந்ததைக் கூறினான் . பயப்படாமலிருக்க வில்லனுடைய கூலிங்கிளாஸை ( கறுப்புக் கண்ணாடி) மாட்டிவிட்டு  அரங்கின் ஒளிர் விளக்கை அவன் முகத்தில் பாய்ச்ச ஒளியமைத்த  செல்வின் சாரிடம்  அறிவுறுத்தி, மீண்டும் அரங்கை உயிர்ப்பித்துத் தொடர்ந்தால் மீண்டும் வசனத்தை மறந்து கைகால்கள் உதற காவல் ஆய்வாளர் நின்ற கோலம் பெரிய நகைச்சுவையாய் ஆயிற்று. மீண்டும் அரங்கை மூடி அவனுக்குத் தெம்பளிக்க அவன் போட்டிருந்த  காக்கி ட்ரவுசர் பாக்கெட்டுக்குள் கைகளை விட்டுக் கொண்டு பேசச் சொல்லி மேடையைத் திறந்தேன்.

இத்தனை சிகிச்சைக்குப்பிறகும் எழுதிப் பயிற்சி கொடுத்த வரிகளில் பாதியை விழுங்கி மீதியை மேடையில் துப்பி கூட நடித்தவர்களையும் குழப்பிய நிலையில் காட்சியை முடித்து வந்த அவனை  ஒப்பனை அறைக்குச் சென்று. கொடுத்தேன் ஒரு அறை.  பார்வையாளர்கள் சிரித்ததில் எனக்கு வந்த ஆத்திரம் அது. 

அதைவிட காவலராய் நடித்தவன் செய்த செயல் இன்னும் பெரிய நகைச்சுவையாய்ப் போயிற்று....

 ---- தொடர்கிறேன் அடுத்து