Sunday, March 19, 2017

எனது மேடைநாடக அனுபவங்கள் - தொடர்ச்சி-3

தேடிவந்த வாய்ப்பும்,ஆடிப்போன நானும்


           தன்னைப் படிக்கவச்சு பெரிய ஆளாக்கணும் ங்கிற எண்ணம் கொண்ட  ஒரு ஏழைத் தாய்,  ஒரு மிராசுக்கிட்ட அடிமையாகி, பட்ட துயரங்களையும் அதன் விளைவாக அவள் நோய்வாய்ப்பட்டு இறந்த செய்தியைத் தனது தாத்தா மூலமாகக் கேள்விப்பட்ட முகிலன் தன் தாயின் விருப்பப்படி, படித்து அரசு அலுவலராகி அந்த மிராசிடம் அடிமைகளாய் இருந்தவர்களை மீட்கும் கதையே “தாய்ப்பாசம்” என்னும் எனது முதல் நாடகமாக உருவாகி இருந்தது.   

        நாடகக் கலைமன்றத்துக்கும் “ கலைவாணர் மன்றம்” ன்னு பேரு வச்சாச்சு. நாடகத்துக்கும் “ தாய்ப்பாசம்” ன்னு பேரு வச்சு  ஆறு  மாந்தர்கள் பங்கு பெறத்தக்க உரையாடல்களும் எழுதியாச்சு. 

        அரங்கேற்றம்  நடத்துறதுக்கான இடமும் பொருளும்தான் இன்னமும் அமையல.ஆளுக்கு அரை ரூபா சந்தாக்காசு சேத்துக்கிட்டு கூடுவோமுன்னுட்டுப் போன பசங்க அந்தக் காசைத் தேடிக்கிட்டேதான் இருந்தானுக . எப்பக் கூடப்போறானுகளோ?   தவிப்போடு நான்...

               பேறுவச்ச ஆத்தா சோறுபோடாமலா விடுவா?  

             நம்பி்க்கை தளராம காத்திருந்த எனக்கு  அடுத்த ஒரு வாரத்துல அப்படி ஒரு வாய்ப்பும் வந்தது.

               நாங்க  வசிக்கிற  தெருவுல, எனது மாமா உறவுக்காரர் வீட்டுல அவரு மகனுக்கு  வைகாசி  மாதத்தில காதுகுத்து  நடத்த முடிவு பண்ணியிருந்தாங்க.  இரயில்வே துறையில தச்சுத்தொழில் செய்யுற அவர் வீட்டுல நடக்குற முதல் தேவை அது.  நல்லாத் தடபுடலா நடத்தத்திட்டம் போட்டிருந்தாரு.  காது குத்திக்கப்போற அவரு மகன் எங்க கலைவாணர் மன்ற உறுப்பினராவும் இருந்தான்.

           மெதுவா அவன்கிட்ட “ஏன்டா மெய்யப்பா, ஒன் காதுகுத்து விழாவில நம்ம நாடகத்தைப் போடலாமான்னு ஒங்க அப்பாக்கிட்டக் கேட்டுப்பாரேன்? ” ஒரு நப்பாசையில கேட்டு வச்சேன்.

              முதல்ல மறுத்த ரெங்கன் மாமா தன் மகனோட பிடிவாதத்தால ரெண்டு நாள் கழிச்சு என்னைக் கூப்பிட்டாரு.  பயந்துக்கிட்டே போன எங்கிட்ட  “ இந்தபாருப்பா எம்மவன் ஆசைப்பட்டான்னு ஒத்துக்கிறேன். ஆனா காது குத்துக்கு முதல்நாள் ராத்திரி ஒரு அரைமணி நேரத்துக்குள்ள ஒங்க நிகழ்ச்சிய முடிச்சுக்கணும். காசு கீசுன்னு எங்கிட்ட எதையும் கேக்கக் கூடாது” ன்னு ஒரு நிபந்தனையோடு ஒப்புதல் தந்தாரு.

             காசில்லாம நிகழ்ச்சிய எப்படி நடத்துறது? 
             வெறுங்கையில முழம் போட முடியுமா?

             இருந்தாலும்  பாதுகாப்பான வீட்டு நிகழ்ச்சி- ஊராளுங்க எதிர்ப்பு இருக்காது.  விழாப் பந்தலும், மைக்செட்டும் வீட்டுக்காரங்க செலவுல.   அடிக்கிற் காத்தை வச்சு எப்படியாவது  தூத்திக்க வேண்டியதுதான்னு ஒருபக்கம் சந்தோசம்.

             அவசர அவசரமா மன்றம் கூடுச்சு. ஓசியில கெடச்ச வாய்ப்பை நழுவ விடக்கூடாதுன்னு நா சொல்ல.. 

மேக்கப், சீன், மியுசிக் இல்லாம எப்படி நாடகம்  நல்லா இருக்கும்?  பக்கத்து ஊர்ல நடந்த அமெச்சூர் நாடகங்களைப்பாத்த நாடகப் பிரியனான காளிமுத்து ங்கிற உறுப்பினரோட கேள்விகள். 

நியாயமான கேள்விகள் தான். 
இருந்தாலும்  எப்படியாவது  நடத்தியே ஆகணுமுங்கிற முடிவுல எவ்வளவு சிக்கனமா முடியுமோ அவ்வளவு சிக்கனமாச் செய்வோம்.ன்னு ஒரு வாக்குறுதியைச் சொல்லிச் சமாளிச்சேன்.

             நடிக்கிறதுக்கு ஆறுபேரைத் தேர்ந்தெடுத்து அவங்களுக்கான பாடத்தையும் எழுதிக்கொடுத்து ஒரு பத்துநாள் இரவு பகல்ன்னு நேரம் கெடைக்கிறப்பல்லாம் ஒத்திகை நடந்துச்சு.

           மேக்கப்மேனைக் கூப்பிட்டா  குறைச்சலா வச்சாலும் பத்து ரூபா கேப்பாரே. அதனால நானே மேக்கப் மேனா அவதாரம் எடுக்க வேண்டியதாச்சு. 

கால் ரூபா ரெமி பவுடர்  வாங்கி , அரையணா செந்தூரப்பொடியை அதோட  கலந்தா ரோஸ் பவுடர்  ஆச்சு. தனிச் செந்தூரத்தைக் குழைச்சு உதட்டுல தடவுனா லிப்ஸ்டிக். ஆட்டுவால் மயிர் மிராசுக்கு மீசை.. மத்தவனுக்குக் கரித் துண்டால மீசை வரைஞ்சுக்கலாம். சாக்பீஸ் பொடியை குழைச்சு முடியில தடவி  நரைச்ச முடியாக்கிடலாம். அப்பறம் என்ன? மேக்கப் ஓவர்.

                  மியூசிக் என்ன செய்யுறது?. ஒரு ஆர்மோனியம் தபேலா வச்சாக்கூட  அன்னக்கி நெலையில ஆளுக்குப் பத்து ரூபா கொடுக்கணுமே. அதுக்கு எங்கே போறது?

             எங்க ஆறுமுகம் சித்தப்பு ஒரு புல்புல்தாராங்குற கம்பி வாத்தியத்தை வச்சு ஏதாவது அபசுரமா வாசிச்சுக்கிட்டிருப்பாரு. அவரைப் போய்க் கேட்டப்ப ”அட போங்கடா,  பொழப்பத்த பசங்களா ,நானே அரைகொறை, நானாவது நாடகத்துக்கு வாசிக்கிறதாவது?” ன்னு ஒதுங்கினாரு.  தொடர்ந்து நாலஞ்சுபேராச் சேந்து போய் நச்சரிச்சதுல சரின்னு ஒத்துக்கிட்டாரு. 

             தாளத்துக்கு?  காளிமுத்து நான் கடம் வாசிக்கிறேன்னான். ( கடம் ன்னா வெறும் தண்ணிப் பானைதான்)  இடையிடையே தியாகராசன்ங்கிறவன் சினிமாப் பாட்டு பாடிக்கிறேன்னான். இசையமைப்பு  முடிஞ்சது.

            மேடையில்லாம தரையில நின்னா நடிக்கிறது?  மிராசுதாரா நடிக்கிறவனோட ஆசை மேடையேறனுமுன்னு. மெதுவா தேவைக்கார ரெங்கன் மாமாக்கிட்ட “தரையில ஒக்கார வச்சா காது குத்துறது?” ன்னு ஒரு செண்டிமென்டைப் போட அவரும் ஒரு நாலஞ்சு பெஞ்சைப் போட ஏற்பாடு பண்ணிட்டாரு.

           இப்ப இன்னொரு பிரச்சனை உருவாச்சு. பெஞ்சைப்போட்டதும்  மட்டப் பந்தல் தலையில இடிக்கறமாதிரி ஆயிடுச்சு. ஒடனே கொட்டகைக்காரர்கிட்ட சொல்லி அந்தப் பகுதி பந்தலை மட்டும் ஒன்றரை அடி ஒசத்திப் போடச் சொல்லி ஏற்பாடு பண்ணிட்டோம்.

          ஒத்த மைக்ல ஓடியாந்து ஓடியாந்தா பேசி நடிக்க முடியும்? தலைவர் சுப்பிரமணியனோட கேள்வி. விழாவுக்கு ஏற்பாடு செஞ்சிருந்த  மைக்செட் ( முபாரக் சவுண்ட் சர்வீஸ்) காரரைக் கெஞ்சி இன்னொரு மைக் கேட்டோம். நல்ல மனுசன் ஸ்யுர் மைக் ( அப்ப அது மண்டை மைக் ) கொண்டாந்து வச்சிடுறேன்னாரு.

           வெறும் ட்யுப்லைட்டை வச்சா நாடகம் போடுறது? காமெடி மாரிமுத்து சீரியசாக் கேட்டான். கறிச்சாப்பாட்டுக்காக மைக்செட் ஓட்ட வந்த ஆறுமுகம் அதுக்கும் ஏற்பாடு பண்ணுனான்.

           ஒரு சாக்பீஸ் மரப்பெட்டிக்குள்ள 100 வாட் குண்டு பல்பை பொருத்தி, ஒருஅடிவிட்டமுள்ள வட்ட அட்டையில் 4 வட்ட ஓட்டைகளைப் போட்டு, அதுல புகையிலப் பொட்டல கலர் சலபன் தாள்களை ஒட்டி, சாக்பீஸ் பெட்டியின் ஒரு மூலையில  ஒரு ஆணியை அடிச்சு, அதுல அந்தக் கலர் வட்டத்தட்டைச் சுழற்றி  அவசர ஆர்க் லைட் மாதிரி தயார் பண்ணிட்டான்.

           எல்லாம் சரி. சீன் ( திரைச்சீலை) க்கு என்ன செய்யறது? 
நடிக்கிறவன் எல்லாம் அவனவன் அப்பாக்களோட வேட்டிகளைக் கொண்டாரச் சொல்லி, அம்மாக்கள்ட்ட கெஞ்சி வாங்குன ஊக்குகளால வேட்டிகளை இணைச்சு முன்திரை( ட்ராப் ) தயார் பண்ணியாச்சு.

          காதுகுத்துக்கு முதல் நாள் பகல், நல்லா ஒத்திகை பாத்துட்டு   சாயுங்காலமா எல்லா நடிக்கிற பசங்களையும் சவரம் பண்ணிட்டு , சரியா அஞ்சு மணிக்கு பந்தலுக்குப் பின்னால இருந்த ஒரு குடிசைக்கு ஒப்பனை செய்ய வரச்சொல்லியிருந்தேன்.( சில பேருக்கு  முடி அரும்புற பருவம்தான் ஆனாலும் மழிச்சாத்தான் குழைச்ச பவுடர் சரியா ஒட்டும் )

         அதுல கதாநாயகனா நடிக்கிறவன ஏழு மணியாகியும் ஆளையேக் காணோம். என்னடான்னு பாத்தா அவனே ஷேவ் பண்றேன்னு பிளேடால கன்னத்தில கிழிச்சுக்கிட்டு வந்து நின்னான்.  

         அவனைத்திட்டிட்டு பதட்டத்தோட ஒப்பனை செஞ்சிக்கிட்டிருந்த என்னை ஒரு ஆள் வந்து 
“ஒன்னை தேவைகாரர் கூப்புடுறார்” ன்னான். ஏன்டான்னே. அங்கே வந்து பாரு ன்னுட்டு ஓடிட்டான்.  ஒப்பனை செஞ்சிக்கிட்டிருந்த குடிசையை விட்டு வெளியே வந்து பாத்தா....

                                                                                  -- இன்னும் வரும்.

4 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

என்ன ஐயா
இப்படி திடீரென்று தொடரும் போட்டுவிட்டீர்களே
குடிசைக்கு வெளியே என்னதான் நடந்தது?
காத்திருக்கிறேன் ஐயா

திண்டுக்கல் தனபாலன் said...

ஆவலுடன் காத்திருக்கிறேன் ஐயா...

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

டெட்டால் போட்டீர்களா? ஆவலோடு எதிர்பார்க்கிறோம்.

Kasthuri Rengan said...

தொடருக்கு உரிய நேர்த்தி அருமை அய்யா

Post a Comment