Sunday, February 26, 2017

திருப்புக தேரை - மின்னூலாகியது.




புலவர் பொன்.கருப்பையா  (Pulavar Pon. Karuppiah)
New
Tamil author Pulavar Pon. Karuppiah

Pulavar Pon. Karuppiah

About the author
மிக சிறந்த தமிழாசிரியாரக 36 ஆண்டுகள் பணி புரிந்த இவர், பல்வேறு துறைகளில் புலமை பெற்றவர். இவரின் எண்னிலடங்கா ஈடுபாடுகள் - எழுத்தாளர், நாடக இயக்குநர். பாடலாசிரியர், வில்லிசைக் கலைஞர், இசையமைப்பாளர், பாடகர், ஒப்பனையாளர், இலக்கிய ஆர்வலர், சமூக சேவையாளர், ஊர்க்காவல்படைப்பிரிவு தளபதி என நீண்ட பட்டியல் கொண்டது. இவர், 72 சிறு, குறு நாடகங்கள், 450 இசைப்பாடல்கள், 7 தலைப்புகளில் வில்லுப்பாட்டு, பொதுஅறிவு, இலக்கிய நாடகங்கள் என பல படைப்புகளைப் படைத்துள்ளார். தமிழக நல்லாசிரியர் விருது, பல்துறைக் கலைஞர் விருது, ஆசிரிய மாமணி விருது, நாடகக் கலைமணி விருது என பல விருதுகளைப் பெற்றுள்ளார்.
MORE BOOKS FROM THE AUTHOR - புலவர் பொன்.கருப்பையா  (Pulavar Pon. Karuppiah)
New

Thiruppuga Therai…


Thiruppuga Therai… - Tamil ebook
Author: Pulavar Pon. Karuppiah
Category: Historical
 50.00 / $ 1.99
Be first to Write Review
Back To Top

Monday, February 20, 2017

பண்பாடு காக்கும் தாய்மொழி

மனிதக் கண்டுபிடிப்புகளிலேயே  மகத்தானது மொழிதான். தாய் வழியாகத் தன் பிள்ளைகளுக்கு ஊட்டப்படுவதே தாய்மொழியாகும். 
பேச, எழுத, சிந்திக்க, எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள உதவும் சிறந்ததொரு கருவி தாய்மொழியேயாகும்.

மொழி தோன்றிய காலம் தொட்டே உலகில் பல்லாயிரக்கணக்கான மொழிகள் பேசப்பட்டு வருகின்றன. சில மொழிகள் வரிவடிவமற்றும், பலமொழிகள் தொடர்ந்து மக்களால் பேசப்படாமையாலும் வழக்கொழிந்து மறைந்து வருகின்றன. 

இந்நிலை நீடித்தால் இன்னும் சில ஆண்டுகளில் இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட மொழிகள் இல்லாமல் போய்விடுமோ என மொழியியல் ஆய்வாளர்கள் அஞ்சுகின்றனர்.

நமது இந்தியத்திருநாட்டில்  ஆயிரத்து அறுநூற்றுக்கு மேற்பட்ட மொழிகள் பல இனத்தவரால் பேசப்பட்டு வருவதாகப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. மக்கள் பேசும் தாய்மொழியின் வழியிலேயே  அந்தந்தப் பகுதிமக்களின் பண்பாடு கலாச்சாரம் கட்டமைக்கப்பட்டு உள்ளது.

உலகில் தோன்றிய பெருமொழிகளில் மூவாயிரமாண்டு தொன்மை வாய்ந்தது நம் தமிழ்மொழி. தமிழ்நாட்டில் மட்டுமல்லாது இந்திய அளவிலும் வங்க மொழிக்கு அடுத்ததாக பேசப்பட்டும் , இலக்கிய வளமையுடனும்  இருக்கும் மொழி தமிழ்மொழி  என மொழியியல் வல்லுநர்கள் கருத்திடுகின்றனர்.

தமிழகத்தின் ஆட்சிமொழியாகத் தமிழ் விளங்குகிறது. சிங்கையின் ஆட்சி மொழிகளில் ஒன்றாகத் தமிழ் உள்ளது. இன்னும் இலங்கை, மலேசியா, அமெரிக்கா. கனடா, நார்வே,  செர்மனி, பிரான்சு, மொரீசியசு, தென்னாப்பிரிகா, ஆசுதிரேலியா போன்ற உலக நாடுகளிலும் தமிழைத்தாய் மொழியாகக் கொண்டவர்கள் வாழ்கிறார்கள்.  புலம்பெயர்ந்த இந்திய, இலங்கைத் தமிழர்களால்  தமிழ் சர்வதேச மொழியாக்கப்பட்டுள்ளது நமக்குப் பெருமைதான்.

தொன்மை, மென்மை, இனிமை,தனித்தியங்கும் தன்மை, இலக்கிய வளம் முதலான  பதினோரு கூறுகளால்  உயர்தனிச் செம்மொழி எனும் பெருமை பெற்றுள்ளது நம் தாய்மொழியாம் தமிழ்மொழி.

இத்தகு சீரிளமைத் திறம்வாய்ந்த நம் தாய்மொழி அண்மைக் காலமாக பிறமொழிக் கலப்பால் தன்  தனித்தன்மையை இழந்து வருவது வேதனைக்குரியது.

உலகமயமாக்கல், தாராள வணிகமயம், அந்நிய முதலீடுகள், அயலகப் பொருள்கள் மீதான மக்கள் மோகம் முதலிய காரணிகளால்  தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட தமிழ் மக்கள் அயல்மொழி கலப்போடு பேசத்தொடங்கிவிட்டனர்.

இன்னும் மக்களை ஈர்க்கும் பெருவெளி ஊடகங்களும், சின்னத்திரை வண்ணத்திரை உரையாடல்களும் விளம்பரங்களும் தமிழ்மொழிச் சிதைவிற்கு பெரும் பங்காற்றுவது சொல்லொணாத் துயரம்.  

இந்தநிலை இப்படியே தொடர்ந்தால் நம்தாய்மொழியாம் தமிழ்மொழி தன் சுயம்பினை இழந்து அழிந்துபடும் நிலைக்கும் தள்ளப்பட்டுவிடும். அதன் விளைவு  மூத்த பெருங்குடியாகிய தமிழினம் காலப்போக்கில் இல்லாமலே போகுமோ என்ற அச்சமும் ஏற்படுகிறது.

நாம் என்ன செய்ய வேண்டும்?

நம் தாய்மொழி தமிழைப்   பிறமொழிக் கலப்பின்றிப் பேச வேண்டும்.
தாய்மொழி வழியிலேயே சிந்திக்க வேண்டும்.
படைப்புகளை பிறமொழிக் கலப்பின்றி எழுத, பேச வேண்டும்.
 தமிழிலேயே கையெழுத்திடவும், முன்னெழுத்தை தமிழிலும் இட வேண்டும்.
படைப்பாளிகள் தமிழ் மொழியின் சிறப்புகளை தங்களின் படைப்புகளில் அமைக்க வேண்டும்.
தமிழ்ப் பண்பாட்டுக் கூறுகளை இயன்ற வழிகளில்  பின்பற்றவும் பரப்பவும் வேண்டும்.
தமிழ்ப் பாரம்பரிய விழாக்களைச் சிறப்பாகக் கொண்டாட வேண்டும்.
தமிழ்ப் பாரம்பரிய கலைகளை நிகழ்த்தல் வேண்டும்.
தமிழகப் பாரம்பரிய விளையாட்டுகளை ஊக்குவிக்க வேண்டும்.
தமிழ்க் கலாச்சார உணவுகளையே உண்ண வேண்டும். 
தமிழ்க் கலாச்சார உடைகளையே அணிய வேண்டும்
நம் தமிழிலக்கியங்களையும் படைப்புகளையும் உலகறியச் செய்ய அவற்றை பிறமொழிகளில் பெயர்த்துப் பதிக்க வேண்டும் .

பிறமொழிகளுக்கு நாம் எதிரிகள் இல்லை. நம் தாய்மொழியின் தளர்ச்சிக்கு நாம் காரணமானவர்களாகவும் இல்லை என இந்த உலகத் தாய்மொழிநாளில் ஓர் உறுதி பூணுவோம்.