Monday, March 28, 2016

வீதியில் ஒதுங்கிய வரிகள்

“வீதி ” கலை இலக்கியக் களம் பற்றி எழுந்த எண்ணங்கள்
25 ஆவது  சிறப்பு நிகழ்வின் அடர்த்தி மற்றும் கால நெருக்கடி குறித்து அரங்கில் பகிரப்படாத வரிகள் இங்கே...


          

இதயமெழு  எண்ணங்களை ஈடேற்ற வாய்த்த களம்
          இலக்கிய தாகம் தீர்க்கும் இன்சுவை நீர்த்தடாகம்
கருத்துக் கதிர் விளைக்கும் கலைஇலக்கியக் கழனி
         கற்பனைச் சிறகடிக்கக் கைகொடுக்கும் காற்றுவெளி

பண்பாட்டுப் பயிர் விளையும் பசியநல் நாற்றங்கால்
         பல்சுவைத் திறன் வளர்க்கும் பயன்மிகு பயிற்சிக்கூடம்
தயக்கநடை பயில்வோரைத்  தாங்கித் தள்ளும் நடைவண்டி
          தளர்வினில்  சுகமளிக்கும் சுமைதாங்கி மேடைக்கல்

திறன்களைத் திரட்டித் தரும் தீஞ்சுவைத் தேன்கூடு
            திகட்டாத விருந்தளிக்கும் தெள்ளமுதக் கனிச்சோலை
வாடாது மணம் பரப்பும் வண்ணமலர்த் தோட்டம் - அது
            வெள்ளித் ்திங்கள் காணும் வேட்கைமிகு வீதிக்களம்.

Sunday, March 27, 2016

வீதி கலை இலக்கியக் களம் -25

வீதி கலை இலக்கியக் களத்தின்  25 ஆவது திங்கள்  சிறப்புக் கூட்டம் இன்று தி.பி 2047 மீனம் 14 ஆம் நாள் புதுக்கோட்டை நில அளவையர் சங்கக் கூட்ட அரங்கில் கவிஞர் நா.முத்துநிலவன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
ஆக்சுபோர்டு சுரேசு, பாவலர் பொன்.கருப்பையா, இரா.செயலெட்சுமி, கு.ம.திருப்பதி, ச.கத்தூரி ரெங்கன், பசீர்அலி ஆகியோர் முன்னிலையேற்றனர். 

வரவேற்பினை வைகறை கவிதைநடையில் வழங்கினார்.
வீதி கூட்ட அறிக்கையினை கவிஞர் மு.கீதா வழங்கினார்.
வீதியில் கவிஞர் ஆர்.நீலா எழுதிய அலைகளின் குரல்கள் என்னும் கவிதைத் தொகுப்பு நூலினை ஆனந்த விகடன் பொறுப்பாசிரியர் பாரதி தம்பி அவர்கள் வெளியிட்டு பாராட்டுரை வழங்கினார். நூலின் முதல் பிரதியினை திரைப்படக் கலைஞர் பாலசக்தி அவர்கள் பெற்றுக் கொண்டார். வளரி இதழாசிரியர் அருணா சுந்தரராசன் அவர்கள் நூல் மதிப்புரையாற்றினா்ர்,

சுரேசுமான்யா, குருநாதசுந்தரம், தூயன், மணிகண்டன், சலீல், ஆகியோர் வீதியில் தங்கள் அனுபவங்கள் பற்றி சிற்றுரை நிகழ்த்தினர்.
சச்சின், மாலதி, ரேவதி, சூரியாசுரேசு, பவல்ராசு, அமிர்தா தமிழ், சுகன்யாஞானசூரி, மீனாட்சிசுந்தரம், நாகநாதன், நிலாபாரதி, மகேசுவரி முருகபாரதி ஆகியோர் கவிதைகள் வழங்கினர்.

ஏற்புரையினை கவிஞர் நீலா வழங்கினார். வீதி நிறுவனர் முனைவர் நா.அருள்முருகன் அவர்கள் ஆய்ந்து வெளியிட்ட “புதுக்கோட்டை பாறை ஓவியங்கள்” ஆவணப்பட முன்னோட்டத்தினை செல்வா வெளியிட்டார். கவிஞர் ராசி பன்னீர்செல்வம் ஏற்புரையாற்றினார்.

நிகழ்ச்சியினை மகா.சுந்தர் மற்றும் ஸ்டாலின் சரவணன் ஆகியோர் தொகுத்து வழங்கினர்.

பொன்.க, சோலச்சி,மற்றும் ஓவியா ஆகியோர் இசைப்பாடல்கள் வழங்கினர்.
ஓவியக்கவிதைக் கண்காட்சி சிறப்பாக அமைந்திருந்தது. அனைவருக்கும் இயற்கைச் சிற்றுண்டி வழங்கப்பட்டது,

இன்றைய வீதியில் எனது தொடக்கப்பாடல்

நினைப்பதை நல்லதாக நினைப்போம்- அதை
நேர்வழியில் செயல்படுத்தி முடிப்போம் 
சந்தேகம் கிளம்பி விட்டா - பல 
சலசலப்புக் குறுக்கில் வரும்
சாதிக்கிற நினைப்பையே தடுக்கும் - மனம்
சஞ்சலமாக் குழம்பி நம்மை முடக்கும்

துணிஞ்சு செய்யும் செயலதிலே 
தொடர்ந்துமே முன்னேற்றம் இருக்கும்
தோல்வி தன்னை நினைச் சுப்புட்டா
தொடக்கமே தடுமாறிக் குழப்பும்
ஏற்றம் தரும் வழிகளைப் பெருக்கு - உன்னை
எடறிவிடும் எண்ணங்களை நொறுக்கு
மாற்றமொன்றே உன்னுடைய பொறுப்பு - அதுக்கு
மனசில் பற்றவேணும் புதுநெருப்பு

தடைகடக்கும் நடை முறைதான்
தரணியில் மேம்பட்டு நெலைக்கும்
தரைபிளந்து விதை முளைக்கும் 
தாவரந்தான் விளைச்சலைப் பெருக்கும்
தனிக்காட்டு ராசாவா முழங்கு -
தடைக்கல்லை படிக்கட்டா மாற்று-ஏறித்
தலையாய வெற்றிகளை ஈட்டு

சாதனை  களத்த னையும்
சங்கடத்தைக் கடந்து வந்தவையே 
சாதித் திட்டமாந்  தர்களும்
சந்தித்த வேதனை எத்தனையோ
சுகமாக வாந்திடவா பொறந்தோம் - நிலவும்
சோர்வுகளைப் போக்கஏனோ மறந்தோம்
சோதனையை வென்று செயலாற்று - உலகம் 
சொந்தமுன்னு சொல்லுமுனைப் பார்த்து.