Monday, May 4, 2015

முழுநிலா முற்றம்-5

             மேழம் திங்கள் முழுநிலவு நாளன்று கீரனூர் செயா அவர்கள் இல்லத்தில்  முழுநிலா முற்றத்தின் அய்ந்தாவது கூட்டம் கூடியது.

          புதுக்கோட்டை இலக்கிய அமைப்பினர் கூடிக் கொண்டாடினர்.
கவிஞர் நா.முத்துநிலவன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற அக்கொண்டாட்டத்தில் பாடல், கவிதை, தொடர் கதை உருவாக்கம், தந்திரத் திறமை, முதலிய பல்கலைகள் பகிரப்பட்டன.

          பாவலர் பொன்.கருப்பையா அவர்களின் “வெண்ணிலவு” பாடலோடு தொடங்கியது முற்றம்.
         
         கவிஞர் மு.கீதா அவர்கள் நிகழ்வினைத் தொகுத்தளிக்க திருமதி அஞ்சலிதேவி தங்கம் மூர்த்தி , ஸ்டாலின் சரவணன், முத்துப்பாண்டியன், மதியழகன், பொன்.க., கவிஞர் தங்கம் மூர்த்தி, முத்துசாமி, பேரா முனைவர் கருப்பையா, புதுகை புதல்வன் ஆகியோரின் கவிதைத் தேர் வலம் வந்தது.
          
        கவிஞர் முத்துநிலவன் தொடங்கிய தொடர் கதை உருவாக்கம் அனைவரின் சிந்தனைக்கும் நல் விருந்தானது. சுரேசு மான்யாவின் நினைவில் நின்ற நிகழ்வு அனைவர் நினைவிலும் நின்றது.
       
         இரா.சம்பத்குமார், இரவிச்சந்திரன், அந்தோணி ஆகியோர் பங்கேற்றனர். குழந்தைகளின் (ம)தந்திரத் திறமை, பலகுரல் பேச்சு ஆகியன் சுவை ஊட்டின
         
          மூன்று மணி நேரம் செவிக்கும் சிந்தனைக்கும்  விருந்தாக அமைந்தது  முழுநிலா முற்ற நிகழ்வு.

          ஒருங்கிணைத்திருந்த சகோ.செயலெட்சுமி அவர்களின் நெகிழ்வான நன்றியும் நிறைவான சிற்றுண்டி விருந்தும் சிறப்பாக அமைந்தது.

         முழுநிலவினை மேகம் மறைத்து விட்டால் ஏங்கும் மனதின் புலம்பலை  பாடலாக எழுதி இசையமைத்துப் பாடி மகிழ்வித்தார் பாவலர் பொன்.க.
                                               இதோ அந்த பாடல்...

வெண்ணிலவு முகத்துக்கு மேகத்திரையோ?
வெட்கப்பட்டு கருங்கூந்தல் மறைநிலையோ?
உன்னில் நான் நனையவே... ஒருதிங்கள் ஏங்கியிருந்தேன்
என்னிடத்தில் ஊடல்என்ன இன்னும் திரை விலக்கலையோ?

அம்புலியே வெள்ளொளியால் மகிழ வைப்பாய்
அன்பில்லையோ கள்ளவிழி காட்டு கின்றாய்
பாலில் நான் மூழ்கிடும்... எண்ணம் பாதி நீராகுதே
பதுங்கிச் சிணுங்கிடாமல் பளிங்கு முகம் காட்டடி

நட்டநடுக் காட்டினுள்ளே நானிருந்தால்
நாணிமரக் கிளைகளைப் போர்த்திக் கொள்வாய்
பொட்டல் வெளியில் புரள்வோம்... உன்னுள் பொய்க்கோபம் ஏதுக்கடி?
பொழுது கரைகிறது பனியும் சுடுகிறது புவிதழ் மலர்த்திடடி.

உருதந்த விண்வெளித்தாய் தடை செய்தாளோ ?
ஒளிதந்த ஆதவனுக்கு அஞ்சு கின்றாயோ?
நட்சத்திரத் தோழிக் கூட்டமே.... நகைதிடும் என்னும் நினைப்போ?
நாணமென்றால் சொல்லிவிடு நானனுப்பும்
தென்றலுந்தன் துகிலை உரித்துவிடும்டீ