Sunday, April 19, 2015

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டு இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு - கோரிக்கை-பாடல்

                 18.04.2015 அன்று அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள் விழா  இன்னிசை நிகழ்ச்சிக்குச் சென்றுவிட்டு இரவு காலங்கடந்து( 19 அதிகாலை 1.30)க்கு வீடு  திரும்பிய அசதியில்  19.04.2015 காலை 7.30 வரைத் தூங்கிக் கொண்டிருந்த என்னை செல்லிடப் பேசியின் அழைப்பு ஒலி எழுப்பியது.
எனது மாணவரும் மருதன்தலைப் பள்ளித் தமிழாசிரியருமான மகா.சுந்தர் பேசி இன்று  தமிழ்நாடு ஆசிரியர் இய்க்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு கோரிக்கைகளை வலியுறுத்தி நடத்த உள்ள உண்ணாநிலைப் போராட்டத்தில்  கோரிக்கைகளை உள்ளடக்கிய இசைப்பாடல் ஒன்று வேண்டும் என்றார். 

           முதல்நாள் இசைநிகழ்ச்சி நடத்திய சோர்விலிருந்த நான் மறுக்கவும் முடியாமல் உடன்படவும் முடியாமல் மென்று விழுங்கிக் கொண்டிருக்கையில் இன்னும்  சிறிது நேரத்தில் பாடல் கட்டாயம் வேண்டும் என்ற அன்புக் கட்டளையோடு பேசியை மூடிவிட்டார்.
அவர் சொன்ன கோரிக்கைகள் அடிப்படையில் 30 நிமிடங்களில் ஒரே மூச்சில் எழுதிய பாடல். இசையையும் பேசியிலேயே கேட்டுப் பதிவு செய்து கொண்டு  அரங்கில் பாடி அசத்தியிருக்கிறார். இதோ அந்தப் பாடல் வரிகள்.

கோரிக்கைகள் வெல்லவே
கோடிக்கைகள் உயர்த்துவோம்
கூடிஒன்று சேர்ந்துநாம்
குரல்கொடுப்போம் வாருங்கள்

கேட்பதெங்கள் உரிமையே
கொடுப்பதுங்கள் கடமையே
கெஞ்சிக்கேட்டும் திறக்கவில்லை
கல்லாய்ப்போன் மனங்களே
தட்டித்திறக்கத் தூண்டிவிட்ட 
தவறுஎங்கள்  மீதில்லை 
தடைகள் தகர்க்க முனைந்திட்டோம்
சிறைகள் நிரப்பத் தயங்கிடோம்                        --- கோரிக்கைகள்

அறிவுக்கண்ணைத் திறந்திடும் 
ஆசிரியர் இனமதை
அச்சுறுத்தும் சக்திகளை
அகற்றி எம்மைக் காத்திடு
உழைத்து ஓய்ந்த ஆசிரியர்
வாழ்வில்ஒளி வீசிட - பழைய
ஓய்வுஊதியத் திட்டத்தை
உடனேஅமல் படுத்துக                                     --- கோரிக்கைகள்

நாடுயர நல்லபணி 
நாங்களாற்ற வில்லையா?
நடுவணரசு ஊதியம்படி
எங்களுக்கு இல்லையா?
ஒருகண்ணில் வெண்ணெய்வைத்து
மறுகண்ணில் சுண்ணாம்பா?
ஊதியத்தில் அவர்க்கிணையாய்க் 
கொடுப்பதிலென்ன வீறாப்பா?                                --- கோரிக்கைகள்

தாய்மொழியில் படிக்கப் படிக்க
தழைக்கும் உயர்ந்த சிந்தனை
தமிழ்ப் பாடத்தை முதல்பாடமாய்
வைப்பதிலேன் வஞ்சனை?
பலநிலையில் பயிற்சி பெற்று
பயிற்றுப் பணியைத் தான்பெற
பணியமர்த்த வைத்திருக்கும் 
நுழைவுத் தேர்வு ஏனய்யா?                           --- கோரிக்கைகள்

கல்வித் தரத்தை உயர்த்திடும்
பள்ளிப் பணிக்கு இடைஞ்சலாய்
கண்டபணியைக் கொடுத்து எங்கள்
கவனம் சிதைத்தல் முறையில்லை
ஒன்றுபட்டுக் கேட்கிறோம்
உரிமைக்குரலை உயர்த்தியே
வெல்லும் வரை தொடருவோம்
விடியல் பயணம் நோக்கியே                         --- கோரிக்கைகள்

2 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

ஒன்றுபட்டுக் கேட்கிறோம்
உரிமைக்குரலை உயர்த்தியே
வெல்லும் வரை தொடருவோம்
விடியல் பயணம் நோக்கியே
அருமை ஐயா
போராட்டம் வெல்லட்டும்

திண்டுக்கல் தனபாலன் said...

அருமையான வரிகள் ஐயா...

வாழ்த்துக்கள்...

Post a Comment