Wednesday, March 25, 2015

உழைக்கும் மகளிர் உன்னதம் பெற...

             25.03.2015 அன்று புதுக்கோட்டை அரிமளம் ஊராட்சி ஒன்றியம் மிரட்டுநிலை ஊராட்சியில் உழைக்கும் மகளிரோடு ஓர் இனிய சந்திப்பு.

          மா.ச.சுவாமிநாதன்ஆராய்ச்சி நிறுவனம், அக்சயா, மாவட்ட காசநோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு இயக்கம் ஆகியவை  சார்பாக உழைக்கும் மகளிரை அவர்கள் பணிசெய்யும் இடத்தருகேயே  கூட்டி, அவர்களிடையே உலக மகளிர் நாள் வரலாற்றையும், உலக அளவில் பல்வேறு துறைகளில்  சிறந்து விளங்கிய மகளிர் மேன்மைகள் பற்றியும்  பாவலர் பொன்.கருப்பையா கருத்துரை யாற்றினார்.

          களப்பணியாளர் கந்தசாமி ஒருங்கிணைத்த இந்த நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்றத் தலைவர் பார்த்தசாரதி அவர்கள் தலைமை வகித்தார்.

          மகளிர் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாய்  இருக்கும் அறியாமை, மூடநம்பிக்கை, பயம், வரதட்சணை, வன்கொடுமை , மது ஆகியவற்றை தகர்க்கவும், அறிவியல் மனப்பான்மை வளர்க்கவும் வேண்டியதன் அவசியம் பற்றியும் உழைக்கும் மகளிரிடையே வலியுறுத்தப் பட்டது.

           கலந்துரையாடலில் மகளிர் ஆர்வமுடன் ஈடுபட்டதும், கேள்விகள் கேட்டதும்  சிறப்பாக இருந்தது.

          அறியாமை இருளகற்றும் இந்த அருமையான சந்திப்பு பயனுள்ளதாக அமைந்ததில் மனநிறைவு.


Tuesday, March 24, 2015

உலக காசநோய் நாள்.24.03.2015

உலக காசநோய் நாளன்று (24.03.2015) புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரிக் கூட்ட அரங்கி்ல் , புதுக்கோட்டை மாவட்ட காசநோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு இயக்கம்  கல்லூரிகளுக்கிடையேயான பேச்சு, கட்டுரை, ஓவியப் போட்டிகளை நடத்தியது.
புதுக்கோட்டையில் உள்ள செவிலியர் கல்லூரி, கலை அறிவியல் கல்லூரி, பொறியியல் கல்லூரி, கல்வியியல் கல்லூரிகளைச் சேர்ந்த எண்பத்திரண்டு மாணவர்கள் போட்டிகளில் கலந்து கொண்டனர்.
காசநோய் இல்லாத சமூகத்தை நோக்கி.. என்னும் தலைப்பிலான பேச்சுப் போட்டியில்  கைக்குறிச்சி ஸ்ரீபாரதி கலைஅறிவியல் கல்லூரி மாணவி புனிதவள்ளி முதலிடத்தையும், பொன்மாரி கல்வியியல் கல்லூரி மாணவர் புகழ்மணி இரண்டாமிடத்தையும், கீரை தமிழ்ச்செல்வன் செவிலியர் கல்லூரி மாணவி கீர்த்திகா மூன்றாமிடத்தையும் பெற்றனர்.
“காசநோய்க் கட்டுப்பாட்டில்  சமூகத்தின் பங்கு” என்னும் தலைப்பில் நடந்த கட்டுரைப் போட்டியில் அரசு கல்வியியல் கல்லூரி மாணவி தெ.செல்வராணி முதலிடத்தையும், மவுண்ட் சீயோன் செவிலியர் கல்லூரி மாணவி சு.சத்யா இரண்டாமிடத்தையும், கற்பக விநாயகா செவிலியர் கல்லூரி மாணவி  ம.ஜீவிதா மூன்றாமிடத்தையும் பெற்றனர்.
“காசநோயற்ற வாழ்க்கைக்கு சமூகத்தின் பங்கு” என்னும் தலைப்பில் நடந்த ஓவியப்போட்டியில் கீரை தமிழ்ச்செல்வன் செவிலியர் கல்லூரி மாணவி செ.அன்னைதெரசா முதலிடத்தையும், கிருபாஸ்ரீ இரண்டாமிடத்தையும், கற்பக விநாயகா செவிலியர் கல்லூரி மாணவி இரா.கஸ்தூரி மூன்றாமிடத்தையும் பெற்றனர். புலவர் மா.நாகூர், கவிஞர் சு.இளங்கோ, திரு முத்தையா, ஆர்.சுப்பிரமணியன், ஓவியர் அண்ணாமலை, மு.கருப்பையா ஆகியோர் நடுவர்களாக இருந்தனர்.
வெற்றியாளர்களுக்கு நடந்த பரிசளிப்பு விழாவிற்கு மாவட்ட காசநோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு இயக்கத் தலைவர் ஆர்.இராசகுமார் அவர்கள் தலைமை வகித்தார், மாவட்டச் செயலாளர் புலவர் பொன்.கருப்பையா வரவேற்புரையாற்றினா்ர்,  புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் திரு முருகேசன் அவர்கள் வெற்றியாளர்களுக்குக் கேடயங்களையும் சான்றிதழ்களையும் வழங்கினார்.
மாவட்ட காசநோய்ப் பிரிவு துணை இயக்குநர்  மருத்துவர் எஸ்.ஆர்.சன்திரசேகரன் , மாமன்னர் கல்லூரி ஆங்கிலத்துறைத் தலைவர் பேராசிரியர் கணேசன், தமிழ்த்துறைத்தலைவர் முனைவர் சேதுராமன் , இளைஞர் நீதிக்குழும உறுப்பினர் திரு. லெ.பிரபாகரன், அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் வளர்ச்சி ஆய்வு மையத் தலைவர் திரு தா.சிவராமகிருஷ்ணன்  ஆகியோர் காசநோய் தடுப்பு பற்றி உரையாற்றினர். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டச் செயலாளர் திரு ம.வீரமுத்து அவர்கள் நன்றி நவில்ன்றார்.
 போட்டிகளில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. 
கிராமப்புற மக்களிடையே காசநோய் பற்றிய விழிப்புணர்வு பரப்புரையினைச் சிறப்பாகச் செய்த களப்பணியாளர்  தட்சிணாபுரம் கந்தசாமி அவர்களுக்கு பாராட்டு செய்யப்பட்டது.
அனைவருக்கும் தேநீர், ரொட்டி, பகலுணவு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு புலவர் பொன்.கருப்பையா.

 

Friday, March 6, 2015

முழுநிலா முற்றத்தில்...

இயற்கையின் படைப்புகள் எல்லாவற்றையும் நேசிப்போம். ஏற்றம் தரும் மாற்றங்களை யோசிப்போம்.

05.03.2015 மாலை கவிஞர் மு.கீதா அவர்கள் இல்ல மேல்தளத்தில் புதுக்கோட்டை முழுநிலா முற்றத்தின் இரண்டாம் கூட்டம் கவிஞர் ஆர்.நீலா அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

கவிஞர் அமிர்தா அவர்களின் மகள் செல்வி எழில்ஓவியாவின் “புகலிடம் தேடிப்பறவையாய்“ எனும் ஈழத்தமிழ்ப் பாடலுடன் கூட்டம் தொடங்கியது. 

கவிஞர்கள் மாலதி, மகாசுந்தர், அமிர்தா ஆகியோர் கவிதைகள் வழங்கினர்.

கவிஞர் நீலா அவர்கள் “ சொல்லமுடியாத கதை” என்னும் சிறுகதை வாசிக்க,  கதை பற்றிய கருத்துகள் பகிரப்பட்டன.

கவிஞர் முத்துநிலவன் “பண்டைப் புகழும்” என்னும் பாடலோடு ஐக்கூ கவிதை பற்றிய விளக்கமளித்தார்.

பாவலர் பொன்.கருப்பையா ” காலநிலை மாறிப்போச்சுங்க” என்னும் பாடலோடு  திரு வெ.இறையன்பு அவர்கள் காஞ்சிபுரத்தில் தொடங்கிய “நிலவொளி இயக்கம்” பற்றிய கருத்தினைப் பதிவு செய்தார்.

கவிஞர் வைகறை அறிமுகம் செய்த பாஷோ ஐக்கூ கவிதை இதழை கவிஞர் நா.முத்துநிலவன் அவர்கள் வெளியி்ட கவிஞர் ஆர்.நீலா அவர்கள் பெற்றுக் கொண்டார்கள்.

இக்கூட்டத்தில்  கவிஞர்கள் பொன்னையா, உப்பை தமிழ்க்கிறுக்கன், சிவா, சுரேசுமான்யா, சோலச்சி,  அப்பாசு, நாணயவியல் கழக பஷீர், மல்லிகா, செயலெட்சுமி, ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தினை ஏற்பாடு செய்த கவிஞர் மு.கீதா அவர்கள் பெருமாள் முருகன் அவர்களின் “மாதொருபாகன்“ தொடர் நூல் பற்றிய  அறிமுகத்தோடு, ரொட்டி, கோதுமைப்பால், தேநீர் ஆகியனவற்றையும் வழங்கி வருகை தந்தோர்க்கு நன்றிகளை நவில்ன்றார்

 நிறைவாக வைகறை அவர்களின் நன்றி அறிவிப்போடு அடுத்த  முழுநிலா முற்றக் கூட்டம் காமராசபுரம் கவிஞர் ரேவதி அவர்களின் இல்லத்தில் நடத்த முடிவுசெய்யப்பட்டது.

Tuesday, March 3, 2015

சமூகத் தொண்டில் சிறந்த சாதனையாளர் - ரோட்டரி விருது

புதுக்கோட்டை ரோட்டரி சங்கமும் மகாராணி ரோட்டரி சங்கமும் இணைந்து 01.03.2015 அன்று ஆளுநர் வருகையை முன்னிட்டு  புதுக்கோட்டையில் தொழில்முறை மற்றும்  சேவையாளர்களை விருதுகள் வழங்கிச் சிறப்பித்தது.

சமூகத் தொண்டில் சிறந்த சாதனையாளராக பாவலர் பொன்.கருப்பையா அவர்களுக்கு ஆளுநர் ஜகந்நாதன் அவர்கள் விருதினை வழங்கிச் சிறப்பித்தார்.

துளிர் இல்லங்களில் தேசிய அறிவியல் நாள் ஓவியப்போட்டி

01.03.2015 அன்று கலீப்நகர் கலிலியோ கலிலி, மார்கோனி துளிர் இல்ல மாணவர்களுக்கு தேசிய அறிவியல் நாளையொட்டி “ஓவியப் போட்டி” நடத்தப்பட்டது.
 துளிர் இல்ல ஒருங்கிணைப்பாளர்கள் திருமதி உஷாநந்தினி, திரு.குமரேசன்,தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநிலத் துணைத் தலைவர் திரு பாலா ஓவியர் இளங்கோ ஆகியோர் துளிர் இல்லக் குழந்தைகளோடு தேசிய அறிவியல் நாள் பற்றிக் கலந்துரையாடி, ஓவியப்போட்டி வெற்றியாளர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

தேசிய அறிவியல் நாள் - ஸ்ரீபாரதி கல்வியியல் கல்லூரி

 தேசிய அறிவியல் நாளன்று கைக்குறிச்சி ஸ்ரீபாரதி கல்வியியல் கல்லூரியில் கல்வியியல் ஆசிரியர் பயிற்சி மாணவர்களுக்கு தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டத் துணைத் தலைவர் பாவலர் பொன்.கருப்பையா “ எளிய அறிவியல் ஆய்வுகள்” என்ற தலைப்பில் செய்முறைகளோடு கருத்துரையாற்றினார்.
இரண்டு லிட்டர் கொள்ளளவுள்ள காற்று நிரப்பப்பட்ட ஒரு நெகிலிப்பை 40 கி.கி. எடையினைத் தூக்கும் ஆற்றல் பெற்றது என்பதை விளக்கிய ஆய்வு.

எளிய முறையில் கரியமில வாயுவைத் தயாரித்துப் பலூனில் சேகரிக்கும் ஆய்வு.

மந்திரமா? தந்திரமா?

27.02.2015 அன்று புதுக்கோட்டை ஜே.சி யுடன் இணைந்து தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டத் துணைத் தலைவர் பாவலர் பொன்.கருப்பையா, பெருங்களுர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தேசிய அறிவியல் நாளையொட்டி “மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சியினை நடத்திக் காட்டினார்.

கண்ணதாசன் இலக்கியப் பேரவை-பாட்டுப்போட்டி

புதுக்கோட்டை கண்ணதாசன் இலக்கியப் பேரவையும் கைக்குறிச்சி சிறீபாரதி கல்வி நிறுவனங்களும் இணைந்து சிறீபாரதி பொறியியல் கல்லூரியில் நடத்திய கண்ணதாசனின் தேசிய, தெய்வபக்திப் பாட்டுப் போட்டியில் நடுவராக வெற்றியாளர்களைத் தேர்ந்து நல்லிசைப்பாடல்கள் குறுவட்டுகளைப் பரிசாக வழங்கியபோது..