Friday, November 22, 2013

அரிய ஐசான் வால் நட்சத்திர பரப்புரை

வான்வெளியில்  29.11.2013 அதிகாலை 12.15 மணிக்கு நிகழ உள்ள, ஐசான் வால் நட்சத்திரம் பற்றிய விழிப்புணர்வு பரப்புரையினை தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தமிழ்நாடெங்கும் சிறப்பாக நடத்தி வந்து கொண்டிருக்கிறது.

புதுக்கோட்டையில் இன்று கந்தர்வகோட்டை வித்ய விகாஷ் பள்ளி, பெருங்களுர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் ஐசான் வால் நட்சத்திரம் பற்றிய விழிப்புணர்வு நடத்திய அறிவியல் இயக்கக் குழு, புதுக்கோட்டை இராணியார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் முதன்மைக் கல்வி அலுவலர் அவர்கள் முன்னிலையில் பரப்புரையினை மேற்கொண்டது.
பள்ளி மாணவியரும் ஆசிரியர்களும் வால்நட்சத்திரம் பற்றிய பல்வேறு
வினாக்களைக் கேட்டு விளக்கம் பெற்றனர்.

வான் நோக்கு நிகழ்வும் நடத்திக் காட்டப்பட்டது.

புதுக்கோட்டை கல்வி மாவட்ட அறிவியல் கண்காட்சி

     22.11.2013 அன்று புதுக்கோட்டை கல்வி மாவட்ட அறிவியல் கண்காட்சி திரு இருதய மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
அழைப்பின் பேரில் கண்காட்சியினைக் காணச் சென்றேன். ஒவ்வொரு அரங்கிலும் மாணவர்களின் அருமையான அறிவியல் படைப்புகள் செய்முறையோடு விளக்கப்பட்டன.

    முதன்மைக் கல்வி அலுவலர் முனைவர் நா.அருள்முருகன் அவர்கள்  திருமயம் கோட்டை மற்றும் ஆலயங்களில் கண்டுபிடித்து வெளிப் படுத்தியிருந்த  ஓவியக் கண்காட்சி அரங்கம் சென்றதும் அதிர்ந்து விட்டேன்.

         காரணம் இத்தனை ஆண்டுகள் மனித நாகரிக காலம் கி.மு. 5000 வரையிலும் அறியப்பட்டிருந்த நிலையில் கோட்டை மற்றும் நழுவப்படக் காட்சி ஆதாரங்கள் தென்தமிழக வரலாறு கி.மு பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முந்தியதாக இருப்பது பெரும் வியப்பளித்தது.
அதைவிட அவ்வாதாரங்களை முதன்மைக் கல்வி அலுவலரே பார்வையாளர்களுக்கு விளக்கியது அதைவிட வியப்பு. இலக்கிய இலக்கண ஆய்வுகளில் புதிய புதிய பரிமாணங்களை ஆய்ந்து
வெளிப்படுத்திய முனைவர், வரலாற்றில் இத்தனை ஆழமாக, இதுவரை அறியப்படாத உண்மையினை வெளிக்கொணர்ந்துள்ளமை வரலாற்றாய்வாளர்களையே திகைக்க வைத்துள்ளது. 

அவரோடு இருந்து விளக்கங்கள் கேட்டறிந்த அந்தத் தருணம் ஒரு புதிய அனுபவம் .

இப்படியும் ஒரு அலுவலரா?

Wednesday, November 20, 2013

சிறுவர் செஞ்சிலுவைச் சங்க ஒருநாள் கருத்தரங்கம்

20.11.2013 அன்று புதுக்கோட்டை அரசு முன்மாதிரி மேல்நிலைப் பள்ளியில் , புதுக்கோட்டை கல்வி மாவட்ட ஜே.ஆர்,சி. ஆலோசக ஆசிரியர் களுக்கான ஒரு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது.அதில்  “முதலுதவி” பற்றிய கருத்துரையினைத் தொடர்ந்து செயற்குழு உறுப்பினர் பாவலர் பொன்.க. விபத்தில் காயமுற்றோர்க்கு முக்கோணக் கட்டுத்துணிகளைக் கொண்டு எவ்வாறு தாடைக்கட்டு போட்டு இரத்த ஒழுக்கை நிறுத்துவது என்பது பற்றிய செயல் விளக்கத்தினைச் செய்து காட்டினார்.
ஒரு ஆலோசக ஆசிரியருக்கு விலா எலும்பு முறிவுக்கு எப்படிக் கட்டுப் போட்டு முதலுதவி செய்ய வேண்டுமென்பதை விளக்கினார்.
இரண்டு அகலக் கட்டுத்துணிகளைக் கொண்டு விலா எலும்பு முறிவுக்கு ஆலோசகர் போட்ட கட்டினைக் காட்டி விளக்கியபோது..

தலைப் பகுதியில் பட்ட காயத்துள் கண்ணாடித் துண்டு, தகரம், ஆணி முதலியன இருக்குமானால் அவ்விடத்தில் பாதுகாப்புத் வளையம் வைத்துத் தலைக் கட்டு எவ்வாறு போடுவது என்பதைச் செய்து காட்டுகிறார்

Sunday, November 17, 2013

ஒவ்வொரு நாளும் புதிதாய்ப் பிறப்போம்

17.11.2011 அன்று புதுக்கோட்டை  ஆக்ஸ்போர்டு சமையல் கலைக் கல்லூரியில் நடந்த             த மு எ க ச திருக்கோகர்ணம் கிளைக் கூட்டத்தில் பாவலர் பொன்.க . எழுதி இசைத்துப்                                                                                           பாடிய பாடல்.

ஓடுகிற ஓடைநீரைப் போல மனசு இருக்கணும்
ஒவ்வொரு நாளு விடியும் போதும் புதுசு புதுசாப் பொறக்கணும் -நாம                                               புதுசு புதுசாப் பொறக்கணும்                                                                                                  -- ஓடுகிற 

தேங்கிக் கெடக்கும் குட்டைநீரில்  தீங்குசெய்யும்   புழுக்கள்    நெளியும்
தேக்கி     வைக்கும்  துயரம்நெஞ்சில்  தேடலுக்குத் தடையா  அமையும்
தென்றல் நம்மைத்  தீண்டுமுன்னே  சூறாவளிக்  காற்றாய்த்  தோன்றும்
தேவையற்ற  சுமையை  நீக்கத் தேன்மலரின்  இதழ்கள்  விரியும்                     -- ஓடுகிற

வெம்மை   குளிரக்    கருமேகம்        மண்ணில்   மழையைப்        பொழியுது
வெடிச்சுச் செதறும்  மகரந்தந்தான்  வெளைச்சல்  பெருக்கித்  தருகுது
வெந்தனலாய்க்  கவலை  தேங்க      மனசில்         மகிழ்ச்சி             கருகுது
வெளியேறும்  வேர்வைத்  துளியே வியக்கு ம் உழைப்பைப்  பெருக்குது    -- ஓடுகிற

அழுத்தம்  நெறைஞ்ச  எடந்தனிலே  வெடிக்கும்  நிகழ்வு      இயற்கையே 
அரும்பும்  இடரைக்     கடப்பதிலே    ஆற்றல்  பெருகும்          நெறையவே                                         ஆற்றாத   சோகம்      ஆழியும்             அடுத்து    சுமையைப்       பகிரவே
ஆறுதலை ஏற்கும்      நெஞ்சில்            அமைதி    தவழும்           நெடுகவே          -- ஓடுகிற 

Saturday, November 9, 2013

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு.

இயற்கையின் படைப்புகள் எல்லாவற்றையும் நேசிப்போம். ஏற்றம் தரும் மாற்றங்களை யோசிப்போம்.
தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் மகாத்மா கல்வி நிறுவனங்களும் இணைந்து 09.11.2013 அன்று ஆரியுர் பொறியியல் கல்லூரியில் நடத்திய 21 ஆவது தேசிய குழந்தைகள் அறிவியல் மாவட்ட மாநாட்டில் பாவலர் பொன்.க., அறிவியல் இயக்க மாவட்ட மாநிலப் பொறுப்பாளர்களுடன்.