Thursday, August 22, 2013

ஹிரோஷிமா-நாகசாகி நினைவு நாள்

              புதுக்கோட்டை, அசோக்நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 22.08.2013 அன்று ,முற்பகல் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பாக ஹிரோஷிமா-நாகசாகி நினைவு நாள் நிகழ்வு நடைபெற்றது. 

           பள்ளித் தலைமையாசிரியர் திருமதி இலாஹிஜான் அவர்கள் தலைமையேற்றார். பள்ளிப் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் சபாரெத்தினம் முன்னிலையேற்றார்.

         வரவேற்புரை மற்றும் நிகழ்ச்சித் தொகுப்பினைப் பள்ளி மாணவி விநோதினி நிகழ்த்தியது புதுமையாகவும் சிறப்பாகவும் இருந்தது.
மாணவர்களின் அறிவியல் இயக்கப் பாடலைத் தொடர்ந்து, நியுட்டனின் மூன்றாவது் இயக்க விதி பற்றிய மாணவர் செயல் விளக்கம் நிகழ்ந்தது சிறப்பு.

        பள்ளிப் பட்டதாரி ஆசிரியரும் த.நா.அ.இயக்க செயற்குழு உறுப்பினருமான திரு பழனிச்சாமி அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். 

       த.நா.அ.இயக்க மாநிலப் பொருளாளர் திரு.லெ.பிரபாகரன் ஹிரோஷிமா-நாகசாகி குண்டு வெடிப்பு வரலாற்றினையும் அழிவுகளையும் பற்றி உரையாற்றினார்.

      அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அறிவியல் இயக்க, புதுக்கோட்டை மாவட்டத் துணைத்தலைவர் பாவலர் பொன்.கருப்பையா அவர்கள்                       “ அணுவின் சக்தி ஆக்கத்திற்கே“ என்னும் தலைப்பில் சிறப்புரையாற்றினார். மதம், இனம், சாதி, மொழி பேதங்களின் அடிப்படையில் நடக்கும் போர்கள் மற்றும் வன்முறைப் பயங்கரவாதங்கள் ஒழிக்கப்பட வேண்டும். போர்களற்ற, மனிதநேயமிக்க சமூகம் உருவாக அன்பு, அறவழி, கருணை, ஒற்றுமையுணர்வு இளந்தலைமுறையிடம் உருவாக்கப்பட வேண்டும் என்பதனைப் பாடல், கதைகள் மூலம் நகைச்சுவையுணர்வோடு வழங்கினார். 

       பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் மிகுந்த ஈடுபாட்டுடன் நிகழ்ச்சியினைச் சுவைத்தனர். நிறைவில் பள்ளி ஆசிரியர் மகாலெட்சுமி நன்றி கூறினார்.

No comments:

Post a Comment