Monday, August 26, 2013

காசநோய்த் தடுப்பு மற்றும் பராமரிப்பில்

                26.08.2013 முற்பகல் , புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலத்தில். ரீச் தொண்டு நிறுவனமும், செல்வா அறக்கட்டளையும் நடத்திய காசநோய்த் தடுப்பு மற்றும் பராமரிப்பு முகாம் நடைபெற்றது.

               ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் உமா மகேசுவரன் அவர்கள் தலைமையி்ல் , புதுக்கோட்டை மாவட்ட காசநோய்த் தடுப்பு மற்றும் பராமரிப்பு மையச் செயலாளர் பாவலர் பொன்.கருப்பையா, காசநோய் பராமரிப்பிற்கான நோயாளிகளின் சாசனம் பற்றி விழிப்புணர்வுக் கருத்துகளை வழங்கினார்.

              செல்வா அறக்கட்டளை வாசுகி முகாமினை ஒருங்கிணைப்புச் செய்திருந்தார். த.நா.அ.இயக்க மாவட்டச் செயற்குழு உறுப்பினர் தா.சிவராமகிருஷ்ணன் கருத்துரை வழங்கினார். 

               ரீச் தொண்டு நிறுவன மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அலெக்ஸ் பாண்டி நன்றி கூறினார்.

              காசநோய் பாதிக்கப்பட்டவர்கள் முகாமில் பயணடைந்தனர்.

கலிலியோ துளிர் இல்லத்தில்...

புதுக்கோட்டை கலீப் நகர் கலிலியோ துளிர் இல்லத்தில் 25.08.2013 காலை நடைபெற்ற கூட்டத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில, மாவட்டப் பொறுப்பாளர்களுடன் துளிர் இல்ல மாணவர்களுக்கு , போரில்லாப் புது உலகம் படைப்போம் எனப் பாடி உணர்ச்சி ஊட்டிய பாவலர் பொன்.க.


Saturday, August 24, 2013

ஆனந்தஜோதி - ஐம்பெரும் விழாத் தொடக்கத்தில்...


             புதுக்கோட்டை நகர்மன்றத்தில், 24.08.2013 மாலை நடைபெற்ற “ஆனந்தஜோதி” ஐம்பெரும் விழாவின் தொடக்கத்தில் , பெண்களுக்கெதிரான பாலின வன்கொடுமைக்கு எதிராக, பயங்கர வாதத்திற்கு எதிராக, நகைமோகத்திற்கு எதிராகப்  பாடல்களோடு உரை நிகழ்த்தும் பாவலர் பொன்.க .

ஆனந்தஜோதி - திங்களிதழ் படைப்பாளர் சந்திப்பு

 .
புதுக்கோட்டை நகர் மன்றத்தில் 24.08.2013 அன்று முற்பகல் நடைபெற்ற “ஆனந்தஜோதி“ தமிழ்த் திங்களிதழ் ஐம்பெரும் விழாவில், இதழுக்கான படைப்பாளர் சந்திப்பில்  பாவலர் பொன்.கருப்பையா  கவிஞர்.இரமா.ராமநாதன், ஹைக்கூ முருகேஷ், கவிஞர் இளங்கோ மற்றும் படைப்பாளிகளுடன்.

Friday, August 23, 2013

ஜூனியர் ரெட் கிராஸ் - செயற்குழு

                       23.08.2013 மாலை புதுக்கோட்டை முதன்மைக் கல்வி அலுவலர் அறையில், புதுக்கோட்டைக் கல்வி மாவட்ட ஜூனியர் ரெட் கிராஸ் இயக்கச் செயற்குழுக் கூட்டம் முதன்மைக் கல்வி அலுவலர் முனைவர் நா.அருள்முருகன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

                 மாவட்ட ஜே.ஆர்.சி.அமைப்பாளர் திரு வி.இராஜேஸ் சீனிவாஸ் 2012-13 ஆண்டறிக்கையினை அளித்தார், அதனைத் தொடர்ந்து தணிக்கை செய்யப்பட்ட  நிதிநிலை அறிக்கை  பகிரப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது.
               புதுக்கோட்டை மாவட்டக் கல்வி அலுவலர் திரு. வெ.இராமச்சந்திரன், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் திருமதி ஆ.சுசீலா, கவுரவ ஆலோசக  திரு த.இராமமூர்த்தி, இணை அமைப்பாளர்கள் ஹ.மீனாட்சி சுந்தரம், ஜே.அஜ்மீர் அலி, திருமதி சி.சாந்தி,  செயற்குழு உறுப்பினர்கள் திரு.கோ.முத்துரகுநாதன்,  திரு.சரவணன் ஆகியோர் அறிக்கை மற்றும் செயல் திட்டத்தின் மீதான கருத்துகளை வழங்கினர்.

              ஜே.ஆர்.சி.ஆலோசகர்களுக்கான ஒருநாள் முகாம் செப் 7 ல் கடையக்குடியில் நடத்துவது, 
            ஜூனியர்களுக்கான இரண்டுநாள் உண்டு உறைவிட பயிற்சி முகாம் முதல் பருவ விடுமுறையில் நடத்துவது,  
             கல்வி மாவட்டத்தில் உள்ள நடுநிலைப் பள்ளிகளுக்கும் ஜே.ஆர்.சி. இயக்க நடவடிக்கைகளை விரிவு படுத்துவது, 
            மெட்ரிக் பள்ளிகளை மேலும் அதிக அளவில் ஜே.ஆர்.சி இயக்கத்தில் இணைப்பது,                   கல்வி மாவட்ட அனைத்து ஜே.ஆர்.சி. இயக்கம் நடைமுறையில் உள்ள பள்ளிகளுக்கும் முதல் உதவிப் பெட்டி வழங்குவது                                                                                          ஆகிய முடிவுகள் மேற்கொள்ளப் பட்டன.

செயற்குழு உறுப்பினர் திரு. பாபு அவர்கள் நன்றி கூறினார்.

போரில்லாப் புது உலகம் படைப்போம்...

                         .23.08.2013 அன்று முற்பகல் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பாக புதுக்கோட்டை கடையக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியி்ல் ஹிரோசிமா-நாகசாகி நினைவு நாள் பள்ளித் தலைமை ஆசிரியர் திருமதி சே.பேச்சியம்மாள் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
                     
                      பள்ளி ஆசிரியர் திருமதி செ.தெய்வானை அவர்கள் வரவேற்புரையாற்றினார்.
தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநிலப் பொருளாளர் திரு.லெ.பிரபாகரன் ஜப்பான் ஹிரோசிமா-நாகசாகியில் 1945ல் நடந்த அணுகுண்டு வீச்சின் வரலாற்றையும் அழிவினையும் மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்

                    தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டத் துணைத் தலைவர் பாவலர் பொன்.க உலகெங்கும் தொடரும் அணுஆயுதப் போர்கள், அதன் விளைவுகள் மனிதகுல அழிவு பற்றி மாணவர் மனங்கொளத்தக்க வகையில் பாடல் கதைகள் மூலம் விளக்கினார்
அவர் தனதுரையில்  மத,இன, சாதி பேதங்கள் நீக்கப்பட வேண்டியதையும், மனிதநேயத்தோடு இளைய தலைமுறை வளர்ந்து போர்களே இல்லாத புது உலகத்தைப் படைக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தினார்.

                  நிறைவில் பள்ளி ஆசிரியர் திரு வெங்கடசுப்பிரமணியன் அவர்கள் நன்றி கூறினார். 

Thursday, August 22, 2013

அழகிய புவியினில் அமைதி நிலவிட...

                
               22.08.2013 அன்று பிற்பகல் புதுக்கோட்டை இராணியார் அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பாக ஹிரோஷிமா-நாகசாகி நினைவுநாள் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்விற்குப் பள்ளித் தலைமையாசிரியர் திருமதி தங்கம் கிரேஸ் அவர்கள் தலைமையேற்றார்.
            
              பள்ளி அறிவியல் பட்டதாரி ஆசிரியர் திரு மாரிமுத்து அவர்கள் வரவேற்புரையாற்றினார்.

              த.நா.அ.இயக்க மாநிலப் பொருளாளர் திரு.லெ.பிரபாகரன் அவர்கள் அணுஆயுதங்களால் ஆகும் அழிவுகள் பற்றியும் இரண்டாம் உலகப் போரின் இறுதியில் சப்பானின் இரு நகரங்கள் அணுகுண்டால் அழிக்கப்பட்ட அவலத்தையும் வரலாற்றுப் பின்னணியோடு  எடுத்துரைத்தார்.

               பாவலர் பொன்.கருப்பையா “ அழகிய புவியினில் அமைதி நிலவ...” எனும் தலைப்பில். உலகெங்கும் நடைபெறும் பயங்கர வாத நிகழ்வுகளையும், அவற்றால் மனிதகுலம் அழிவினையும் குறிப்பிட்டு, புவியி்ல் அமைதி நிலவ , மனிதநேயச் சிந்தனை இளைய தலைமுறையினருக்கு ஊட்டப்பட வேண்டிய அவசியத்தை உணர்த்தினார்.

             அவர் மேலும் தனதுரையில் பண்டையத் தமிழகப் போர் நெறிமுறையில் பெண்டிர், குழந்தைகள், நோய்ப்பட்டோர், முதியவர்கள் பாதிக்கப்படாத அறமுறையினைச் சான்று காட்டி, அண்மையக் கால அணு ஆயுதப் போர்களால் பச்சிளங்குழந்தைகள்கூட அழிகின்ற அவலத்தைச் சுட்டிக் காட்டினார். 

            புவியில் அமைதி நிலவ அன்பு. கருணை, விட்டுக்கொடுக்கும் பண்பு, இன, மத, சாதிப் பாகுபாடில்லாத நேசம் வளர வேண்டும் என்பதைப் பாடல், கதைகளுடன் நகைச்சுவையாய் மாணவர்க்கு எடுத்துரைத்தார். 

           நிறைவில் பள்ளி வரலாற்றாசிரியர் திரு பொன்.தங்கராசு அவர்கள் நன்றி கூறினார்..

ஹிரோஷிமா-நாகசாகி நினைவு நாள்

              புதுக்கோட்டை, அசோக்நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 22.08.2013 அன்று ,முற்பகல் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பாக ஹிரோஷிமா-நாகசாகி நினைவு நாள் நிகழ்வு நடைபெற்றது. 

           பள்ளித் தலைமையாசிரியர் திருமதி இலாஹிஜான் அவர்கள் தலைமையேற்றார். பள்ளிப் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் சபாரெத்தினம் முன்னிலையேற்றார்.

         வரவேற்புரை மற்றும் நிகழ்ச்சித் தொகுப்பினைப் பள்ளி மாணவி விநோதினி நிகழ்த்தியது புதுமையாகவும் சிறப்பாகவும் இருந்தது.
மாணவர்களின் அறிவியல் இயக்கப் பாடலைத் தொடர்ந்து, நியுட்டனின் மூன்றாவது் இயக்க விதி பற்றிய மாணவர் செயல் விளக்கம் நிகழ்ந்தது சிறப்பு.

        பள்ளிப் பட்டதாரி ஆசிரியரும் த.நா.அ.இயக்க செயற்குழு உறுப்பினருமான திரு பழனிச்சாமி அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். 

       த.நா.அ.இயக்க மாநிலப் பொருளாளர் திரு.லெ.பிரபாகரன் ஹிரோஷிமா-நாகசாகி குண்டு வெடிப்பு வரலாற்றினையும் அழிவுகளையும் பற்றி உரையாற்றினார்.

      அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அறிவியல் இயக்க, புதுக்கோட்டை மாவட்டத் துணைத்தலைவர் பாவலர் பொன்.கருப்பையா அவர்கள்                       “ அணுவின் சக்தி ஆக்கத்திற்கே“ என்னும் தலைப்பில் சிறப்புரையாற்றினார். மதம், இனம், சாதி, மொழி பேதங்களின் அடிப்படையில் நடக்கும் போர்கள் மற்றும் வன்முறைப் பயங்கரவாதங்கள் ஒழிக்கப்பட வேண்டும். போர்களற்ற, மனிதநேயமிக்க சமூகம் உருவாக அன்பு, அறவழி, கருணை, ஒற்றுமையுணர்வு இளந்தலைமுறையிடம் உருவாக்கப்பட வேண்டும் என்பதனைப் பாடல், கதைகள் மூலம் நகைச்சுவையுணர்வோடு வழங்கினார். 

       பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் மிகுந்த ஈடுபாட்டுடன் நிகழ்ச்சியினைச் சுவைத்தனர். நிறைவில் பள்ளி ஆசிரியர் மகாலெட்சுமி நன்றி கூறினார்.

Thursday, August 15, 2013

இராயப்பட்டி ஊ.ஒ.தொடக்கப்பள்ளிக்கு புரவலர் நிதி வழங்கல்

                     புதுக்கோட்டை ஒன்றியம், இராயப்பட்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி விழாவில் சிறப்புரையாற்றச் சென்ற பாவலர் பொன்.கருப்பையா, அப்பள்ளிக்கு புரவலர் திட்டத்தினைத் தொடங்க, புரவலர் நிதிக்கான காசோலையினை, புதுக்கோட்டை உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் ,உணவக உரிமையாளர் சங்கத் தலைவர் சண்முக பழனியப்பன், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் ஆகியோர் முன்னிலையில் பள்ளித் தலைமை ஆசிரியர் க.மதிவாணனிடம் வழங்குகிறார்.

மூத்த குடிமக்கள் அமைப்பில்...

              புதுக்கோட்டை பாலா தமிழரங்கில் நடைபெற்ற 67 ஆவது இந்திய விடுதலை நாள் விழாவில் பாவலர் பொன்.கருப்பையா கலந்து கொண்டார். 
             மூத்த குடிமக்கள் அமைப்பின் தலைவர் க.இராமையா நாட்டுக் கொடியினை ஏற்றினார். கொடிவணக்கப் பாடலை துளசிராமன் பாடினார். உறுதிமொழி எடுத்துக் கொள்ளப் பட்டது.

               அதனையடுத்து அரங்கில் நடைபெற்ற கூட்டத்திற்கு சுப்பிரமணிய காடுவெட்டியார் தலைமையேற்றார்.

            மூத்த குடிமக்கள் அமைப்பின் தலைவர் க.இராமையா அவர்கள் வரவேற்புரையினையும் நிதிஅறிக்கையினையும் அளித்தார்.

            சூன், சூலை, ஆகத்துத் திங்கள்களில் பிறந்த மூத்த குடிமக்கள் ஆடைபோர்த்திச் சிறப்பிக்கப்பட்டனர். 

           தலைமை உரையினையடுத்து பாவலர் பொன்.க விடுதலைநாள் விழா உரையாற்றினார்.

            தனியார் மயம் , தாராளமயம், உலகமயம் கொள்கை களால்.அடித்தட்டு மக்கள் தங்கள்  அடிப்படை உரிமைகளை இழந்து கொண்டிருப்பதையும், நாட்டில் பெருகி வரும் பன்னாட்டுக் கலாச்சாரங்களையும்  பயங்கரவாதங்களையும் குறிப்பிட்டு, சமூக, பொருளாதார, பெண்விடுதலைக்காகத் தங்கள் இன்னுயிரை ஈந்த தியாகிகளின் எதிர்பார்ப்புகள் நிறைவேற, நாட்டில் அமைதி நிலவ, உலக அரங்கில் இந்தியா  நல்லரசாக, வல்லரசாக விளங்க, வலிமையும் திறமையும் மிக்க இளைய தலைமுறை முனைய வேண்டும் என்னும் கருத்தை வலியுறுத்தினார்.

67 ஆவது இந்திய விடுதலைநாள் விழாவில்...

                      மூன்றடுக்குப் பாதுகாப்போடும், குண்டு துளைக்காத கவச உடைகளோடும், சுற்றிலும் இராணுவப் பாதுகாப்போடும் இன்றைய 67 ஆவது இந்திய விடுதலைநாள் விழாக்களும் கொடியேற்றங்களும் நாடெங்கும் நடைபெற்றது.

                   புதுக்கோட்டை தாகூர் மழலையர் பள்ளி விடுதலைநாள் விழாவில் பாவலர் பொன்.கருப்பையா கலந்து கொண்டு நாட்டுக் கொடியினையேற்றி, பேதமறியாப் பிஞ்சு உள்ளங்களுக்கு, விடுதலைபெற உழைத்த உத்தமர்களின் தியாகங்கள் பற்றியும், இன்று பெருகிவரும் வன்முறைகள் களையப்பட இளயை தலைமுறை அன்பு, பொறுமை, சகிப்புத் தன்மை, அறவழி ஆகியவற்றைக் கடைப் பிடிக்க வேண்டும் என்பதையும்  அறஉரையாற்றினார்.


                 பள்ளிக் குழந்தைகளின்  விடுதலை பற்றிய உரை, பேச்சுகள் சிறப்பாக இருந்தன.


               சாதனை புரிந்த மழலையர்க்கு இனிப்போடு எழுதுகோல்களையும் பரிசுகளாக வழங்கினார்.


கீரனூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி ஜெனிவா ஒப்பந்த விழாவில்

            .புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 14.08.2013 அன்று ஜெனிவா ஒப்பந்த நாள் விழா, பள்ளி உதவித் தலைமை ஆசிரியர் திரு இரா.முருகன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

           பள்ளி ஜே.ஆர்.சி. ஆலோசகர் திருமதி ப.மேகலா விழா ஒருங்கிணைப்புப் பணிகளைச் செய்திருந்தார்.

           திரு முருகன் அவர்களின் வரவேற்புரையினை அடுத்து, புதுக்கோட்டை மாவட்ட ஜே.ஆர்.சி செயற்குழு உறுப்பினர் பாவலர் பொன்.கருப்பையா அவர்கள் ஜெனிவா ஒப்பந்த வரலாறு, இன்றையப் போர்களும் பயங்கரவாதங்களும் மறைய நாம் மேற்கொள்ள வேண்டியன, எதிர்கால உலக அமைதிக்கான அறவழிகள், மனிதநேயம் மலர இளைய தலைமுறை மேற்கொள்ள வேண்டியன பற்றிய கருத்துரையினை வழங்கினார்.

        ஜே.ஆர்.சி மாணவர்களுக்கு மட்டுமல்லாது பள்ளி அனைத்து மாணவர்க்கும் தேவையான கருத்தாக அவரது பேச்சு அமைந்திருந்ததாக நன்றி கூறிய ஆசிரியர் சரவணன் குறிப்பிட்டார். 

.த.மு.எ.க.ச புதுக்கோட்டை மாவட்டப் பொதுக்குழுவில்

.                12.08.2013 அன்று மாலை புதுக்கோட்டை ஆக்ஸ்போர்டு சமையல் கலைக் கல்லூரியில் தமுஎகசவின்  புதுக்கோட்டை மாவட்டப் பொதுக்குழு மாவட்டத்தலைவர் பிரகதீசுவரன் தலைமையி்ல் நடைபெற்றது.
              மாவட்டச் செயலாளர் இரமா.ராமநாதன் வேலை அறிக்கை அளித்தார். அறிக்கையின் மீதான விவாதங்களி மாவட்டக் குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
             மிகச்சிறந்த சமுதாய மேம்பாட்டு அமைப்பான தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின்  புதுக்கோட்டை மாவட்டத்தில் பல கிளைகளின் அண்மைக்கால செயல்பாடுகள் மந்தநிலையில் இருப்பதையும், உறுப்பினர் சேர்க்கை, கிளைச்செயல்பாடுகளில் மாவட்டப் பொறுப்பாளர்களின் தீவிர ஈடுபாடு அதிகரிக்கப் பட வேண்டும் என்பதையும் பாவலர் பொன். கருப்பையா தனது கருத்துரையில் பதிவு செய்தார்.

             சிறப்பாகச் செயல்பட்ட கறம்பக்குடி கிளைப் பொறுப்பாளர்களையும், தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்களையும் அவர் பாராட்டிப் பேசினார். தமுஎகச வில் இணைய விரும்பும் நாட்டுப்புறக்கலைஞர்களையும் வரவேற்றார்.

            ஆகத்து 17,18 நாள்களில் தூத்துக்குடியில் நடைபெற உள்ள தமிழகப் பண்பாட்டுச் சூழல் மாநாட்டில் கலந்து கொள்ள எட்டுப் பிரதிநிதிகளை அனுப்புவது, தொடக்கக் கல்வியில் ஆங்கில வழிக்கல்வியின் திணிப்புக்கு எதிர்ப்பு, புதுக்கோட்டை தொடர்வண்டி நிலையத்தை சந்திப்பாக மாற்றக் கோரல், பாதாள சாக்கடைத் திட்டம் விரைந்து முடித்தல் போன்ற பல தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.
முன்னதாக அண்மையில் மறைந்த கலையுலகச் சிற்பிகள், பி.பி.சீனிவாஸ, டி.எம்.சௌந்தரராசன், கவிஞர் வாலி, உத்தரகாண்ட் இயற்கைச் சீற்றத்தில் உயிரிழந்தோர் ஆகியோர்க்கு அஞ்சலி செய்யப்பட்டது.

         மாவட்டப் பொருளாளர் மதியழகன் நன்றி கூறக் கூட்டம் இனிதே முடிவுற்றது.

Tuesday, August 13, 2013

ஜெனிவா ஒப்பந்த நாள் - கருத்தரங்கம்


              புதுக்கோட்டை அருள்மிகு பிரகதம்பாள் அரசினர் மேல்நிலைப் பள்ளியி்ல், 12.08.2013 அன்று புதுக்கோட்டை கல்வி மாவட்ட ஜே.ஆர்,சி யின் சார்பாக ஜெனிவா ஒப்பந்த நாள் கருத்தரங்கம்  கௌரவ ஆலோசகர் திரு இராமமூர்த்தி அவர்கள் தலைமையி்ல் நடைபெற்றது.

             புதுக்கோட்டை மாவட்ட ஜே .ஆர்.சி ஒருங்கிணைப்பாளர் இராஜேஸ் சீனிவாசன் வரவேற்புரையாற்றினார்.

          கருத்தரங்கில் மேனாள் இணை ஒருங்கிணைப்பாளர்  பாவலர் பொன்.கருப்பையாஅவர்கள் ஜெனிவாஒப்பந்தம் பற்றியும் மனித நேயம் பற்றியும் கருத்துரையாற்றினார்.

          அவர் தனது உரையில் ஜெனிவா ஒப்பந்தம் உருவாகக் காரண மாயிருந்த  ஜீன் ஹென்றி டுனாண்ட் அவர்களின் வாழ்க்கைவரலாற்றில்,  தான் நேரில் கண்ட சால்பரினோ போரின் அவலங்களையும் அதனால் உயிரிழந்த மக்களைக் காக்கப் போராடிய நிகழ்வுகளையும் தனது “சால்பரினோ நினைவுகள் “ என்னும் நூலில் பதிவு செய்திருந்தமையை விளக்கிக் கூறினார்.

        அந்நூலின் இறுதியில் தனது எதிர்காலக் கனவுகளாக இரண்டு செய்திகளைப் பதிந்திருந்தார்

        1. போரில் பாதிக்கப்பட்ட வர்களுக்கு உதவ ஒவ்வொரு நாட்டிலும் நிவாரணச் சங்கம் அமைக்கப்பட வேண்டும். இதன் அடிப்படையில்தான் ரெட்கிராஸ் இயக்கம் உருவானது.
       2. போர்களின்போது காயமுற்ற , உடல்நலம் குன்றியவர்க்கும் நிவாரணச் சங்க உறுப்பினர்களுக்கும் பாதுகாப்பு  அளிக்க பன்னாட்டு சட்டதிட்டங்கள் வகுக்கப்பட வேண்டும். - இதன் அடிப்படையில் 1864ல் முதல் ஜெனிவா ஒப்பந்தம் அமெரிக்காவில் உருவாக்கப்பட்டது

       இதனையடுத்து 1906ல் கடல்போரில் பாதிக்கப்ட்டவர்களின் பாதுகாப்பு மற்றும் விதிகள் ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்டது.

        1939ல் இரண்டாம் உலகப்போரில் போர்க்குற்றவாளிகளிடம் மனிதநேயம் என்ற கருத்தும், 
        1949 ஆகச்டு 12ல் போர்க்கைதிகளை நடத்தும் விதம், போரில் கடைப்பிடிக்கப்பட வேண்டிய விதிகள், போரில் ஈடுபடாத மக்களுக்குப் பாதுகாப்பு, பற்றிய கூடுதல் தொகுப்புகள் இணைக்கப்பட்டு ஒரு முழுமையான ஜெனிவா ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது. ஆகிய  வரலாற்றினைக் கூறி, இன்றைய நாளில் உலகெங்கும் தொடரும் பயங்கரவாதங்களும் அதன் விளைவுகளும் எப்படி மனிதகுலத்தைப் பாதித்துக் கொண்டிருக்கிறது என்பதைச் சுட்டிக்காட்டினார்.
ஆசை, கோபம், பொறாமை, இவற்றால் ஏற்படும் மத,சாதி,இன மோதல்கள் வன்முறைகள் மறைய இளைய தலைமுறையினர் மனதில் அன்பு, அறம், கருணை ஆகிய மனித நேயம் மலர்த்தப்பட வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார்.

          நூற்றுக்கு மேற்பட்ட நகரளவுப் பள்ளி ஜீனியர்களும், ஆலோசகர் களும் கலந்து கொண்டு கருத்தரங்கைச் சிறப்பித்தனர்.

       ஜே.ஆர்.சி. மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர்கள் திரு மீனாட்சி சுந்தர்,திருமதி சாந்தி, திரு அஜ்மீர்அலி, ஆகியோர் கருத்தரங்க நிகழ்வுகளை ஒருங்கிணைத்தனர்.

        நிறைவில் இணை ஒருங்கிணைப்பாளர் திருமதி சாந்தி நன்றியுரையாற்றக் கருத்தரங்கம் இனிதே நிறைவுற்றது.

Monday, August 12, 2013

நாகசாகி நினைவு நாளில்...

இயற்கையின் படைப்புகள் எல்லாவற்றையும் நேசிப்போம். ஏற்றம் தரும் மாற்றங்களை யோசிப்போம்.

            தமிழ்நாடு அறிவியல் இயக்கப் புதுக்கோட்டை கூட்ட அரங்கத்தில் 09.08.2013 அன்று நாகசாகி நினைவு நாள் கூட்டம்  த.நா.அ.இயக்க மாவட்டத் தலைவர் அ.மணவாளன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
        
       புதுக்கோட்டை துளிர் இல்லக் குழந்தைகளுக்கு ஹிரோஷிமா நாகசாகி அழிவு பற்றியக் கருத்துப் பொதிந்த ஓவியப் போட்டி நடத்தப் பட்டது.

      கலந்து கொண்ட அனைத்து துளிர் இல்லத்தினருக்கும் நூல்கள் வழங்கப் பட்டது.

       மாவட்டச் செயலாளர் திரு வீரமுத்து அவர்கள் வரவேற்புரை யாற்றினார்.

       மாநிலப் பொருளாளர் திரு லெ.பிரபாகரன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். 
       மாவட்டத் துணைத் தலைவர் பாவலர் பொன்.கருப்பையா அவர்கள் வெற்றி பெற்ற, கலந்து கொண்ட மாணவர்களைப் பாராட்டியும் அணுவின் சக்தி ஆக்கத்திற்கு மட்டுமே... அழிவுக்குப் பயன்படலாகாது எனப் பேசினார்.

       மாவட்டத் தலைவர் திரு செயபாலன் அவர்கள் நன்றியுரை யாற்றினார்.

       செயற்குழு உறுப்பினர்கள்  சேதுராமன், குமரேசன், தா.சிவராம
கிருஷ்ணன், மற்றும் மாவட்ட , வட்டக்கிளைப் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்

Monday, August 5, 2013

புதுக்கோட்டை மாவட்ட நுகர்வோர் குழு பொதுக்குழுவில்..

            04.08.2013 அன்று முற்பகல் புதுக்கோட்டை இராணியார் அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில், புதுக்கோட்டை மாவட்ட நுகர்வோர் குழுவின் மாவட்டப் பொதுக்குழுக் கூட்டம் , மாவட்டத் தலைவர் பொறியாளர் சு.தனவேலு அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

             புதுக்கோட்டை கவினாடு மேற்கு வட்டம் , மாலையீடு சண்முகா நகர் நுகர்வோர் குழுத் தலைவர் பாவலர் பொன்.கருப்பையா, செயலாளர் திரு சோமசுந்தரம் ஆகியோர் பிரதிநிதிகளாகக் கலந்து கொண்டனர்.

            மாவட்டப் பொருளாளர் திருமதி  து.லதா உத்தமன் வரவேற்றார்.

            2012-13 ஆண்டறிக்கையினைப் பொதுச் செயலாளர் க.வேழவேந்தன் அவர்கள் அளித்தார். 2012-13 ஆண்டிற்கான தணிக்கை செய்யப் பட்ட கணக்குகள்  ஏற்பளிக்கப் பட்டது.

           2013-14 ஆண்டிற்கான செயல்திட்டங்கள வடிவமைக்கப் பட்டன.

-- நுகர்வோர் குறைதீர் மன்ற உறுப்பினர் நியமிக்கப்படல் வேண்டும்.
-- புதுக்கோட்டை அரசுப் பொது மருத்துவமனையில் ஸ்கேன் மையம் தொடர்ந்து தொய்வின்றிச் செயல்பட வேண்டும்.
-- நகரப் பெரு வீதிகளில் நடைபாதை ஆக்கிரமிப்புகள் அகற்றப் பட்டு நடப்போர் நலன் காக்கப்பட வேண்டும்.
-- புதுக்கோட்டைத் தொடர் வண்டி நிலையம் , தொடர்வண்டிச் சந்திப்பாக மாற்றப்பட வேண்டும்.
-- திருச்சியிலிருந்து புதுக்கோட்டை காரைக்குடி வழியாகச் செல்லும் விரைவுவண்டிகள் கீரனூர், திருமயம் ஆகிய நிலையங்களில் நின்று செல்ல வேண்டும்.
-- பிளாஸ்டிக் உற்பத்தியினைக் கட்டுப் படுத்த வேண்டும்.
-- தேசிய நுகர்வோர்க் குறைதீர் மன்றம் சென்னையில் நிறுவப்பட வேண்டும்.
போன்ற தீர்மானங்கள் முன்மொழியப்பட்டு நிறைவேற்றப் பட்டன.

          சண்முகா நகர்க் கிளை சார்பாக அதன் தலைவர் பாவலர்பொன்.கருப்பையா அவர்கள், டி.வி.எஸ் - மதுரைச் சாலை, மாலையீடு வழிபிரி மேடை விரிவாக்கப்பட்டு, வேகத்தடை அமைத்து விபத்துகள் தவிர்க்கப் படவேண்டும்,  மாலையீட்டில் பேருந்து நிறுத்தம் அமைக்கப் பட்டு, பேருந்துகள் நின்று செல்ல வழிவகை செய்ய வேண்டும்., 

          புதுக்கோட்டையில் பல இலட்ச ரூபாய்கள் செலவில் நிறுவப்பட்டுச் செயல்படாமல் இருக்கும் போசுநகர் மின் எரி தகன மேடை செயலாக்கம் செய்யப் படல்வேண்டும் ஆகிய தீர்மானங்களை முன்வைத்தார்.

         மாவட்டத் துணைத் தலைவர் இரா.எ.இராமன், மேனாள் மாவட்டத் தலைவர் ஸ்ரீகுமார் ஆகியோர் தீர்மானங்கள் பற்றியும் எதிர்காலத் திட்டங்கள் பற்றியும் உரையாற்றினர். 

         மாவட்டத்தின் பல்வேறு கிளைகளின் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு அவ்வப் பகுதிக் குறைகளைப் பொதுக்குழுவில் பதிவு செய்தனர். மாவட்டத் துணைத் தலைவர் வீ.செல்லப்பன் நிறைவாக நன்றியுரையாற்றினார்.