Thursday, May 30, 2013

கோடை அறிவியல் திருவிழா

              புதுக்கோட்டை தமிழ்நாடு அறிவியல் இயக்கக் கூட்ட அரங்கில் 2013 மே 28,29 ஆகிய இரண்டு நாள்கள் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் குழந்தைகளுக்கான கோடை அறிவியல் திருவிழாவினை நடத்தியது.
                மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 70 குழந்தைகள் இத்திருவிழாவி்ல் கலந்து கொண்டனர்.
             முதல் நாள் அறிவியல் திருவிழா  தமிழ்நாடு அறிவியல் இயக்க புதுக்கோட்டை மாவட்டத் துணைத்தலைவர் பாவலர் பொன்.கருப்பையா அவர்கள் தலைமையில் நடந்தது. டீம் ஸ்பெஷாலிடி மருத்துவமனை நிருவாக இயக்குநர் ரொட்டேரியன் மருத்துவர்  கே.ஹெச்.சலீம் அவர்கள் விழாவினைத் தொடக்கி வைத்துச் சிறப்புரையாற்றினார். புதுக்கோட்டை நகரத் துளிர் இல்ல ஒருங்கிணைப்பாளர் திரு ஆர்.சுப்பிரமணியன் அவர்கள் வரவேற்புரை யாற்றினார். 
“எத்தனை எத்தனை ஆக்கத்திறமைகள் “ எனும் பாவலர் பொன்.க வின் பாடலோடு திருவிழா தொடங்கியது. மாணவிஜெ.சுபிக்ஷா தனது திருநெல்வேலி துளிர் இல்ல மாநில மாநாட்டு அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.
             “ கற்பனையும் கைத்திறனும்“ எனும் தலைப்பில் மாநிலத் துணைத்தலைவர்                              திரு எஸ்.டி.பாலகிருஷ்ணன் முகமையர்களுக்கு பயிற்சியளித்தார்.அதனையடுத்து,   தமிழ்நாடு அறிவியல் இயக்க புதுக்கோட்டை ஒன்றியத் தலைவர் திரு பொன்.க.மதிவாணன் அவர்கள்                  “ மாயமில்லை மந்திரமில்லை“ என்னும் விழிப்புணர்வு நிகழ்ச்சியினை நடத்தி பங்கேற்பாளர் களை பிரமிக்க வைத்தார்.
               முகாமில் கலந்து கொண்ட குழந்தைகளுக்குஇடைவேளையில் ரொட்டி,  மோரும், நண்பகல் சிறப்பான உணவும் வழங்கப்பட்டது. கவிஞர் ஆர்.நீலா அவர்கள் “ இயற்கையோடு வாழப்பழகு மனிதா” எனும் பாடல் பயிற்சியளித்தார்.

                பிற்பகல் அமர்வில் பாவலர் பொன்.கருப்பையா அவர்கள் “ எளிய அறிவியல் ஆய்வுகளை“ செலவின்றி, குறைந்த செலவில் எப்படிச் செய்யலாம் என்பதைச் செயல்முறை விளக்கங்களோடு செய்துகாட்டி குழந்தைகளைச் செய்யப் பயிற்சியளித்தார். திரு பாலா அவர்கள் குழந்தைகளுக்கு“ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்  “ எனும் தலைப்பில்பாடல்கள், விளையாட்டுகள்  நடத்தி உற்சாகப் படுத்தினார்.

               இரண்டாம் நாள் நிகழ்ச்சிகள் பங்கேற்ற மாணவர்களின் பாடல்களோடு தொடங்கியது. மாணவி பா.அதிபா வரவேற்க, முதல்நாள் நிகழ்ச்சித் தொகுப்பினை மாணவர்கள் வழங்கினர்.
த.நா.அ.இயக்க நகரத் தலைவர் கவிஞர் ராசி.பன்னீர்செல்வன் அவர்கள் “கவிதை கற்போம் , கவிதை படைப்போம் ” எனும் தலைப்பில் மாணவர்களுக்குக் கவிதை எழுதப் பயிற்சியளித்தார். 

               அதனைத் தொடர்ந்து த.மு.எ.க.ச.மாநிலத் துணைத்தலைவர் கவிஞர் நா.முத்துநிலவன் அவர்கள் “கதைகேட்போம், கதை சொல்வோம் ” எனும் தலைப்பில் குட்டிக் கதைகள், விடுகதைகள், சொலவடைகள் முதலியவற்றைக் கூறி, மாணவர்களுக்குக் கதை எழுதும் பயிற்சியினை அளித்தார்.  ” வரைந்து பழகுவோமே” என்னும் தலைப்பில் ஓவியர் அண்ணாமலை அவர்கள் திருவிழாவில் கலந்து கொண்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் ஓவியம் வரையும் முறை, வண்ணம் தீட்டும் கலை ஆகியவற்றைக் கற்பித்தார். சிறந்த ஓவியங்களும், கவிதைகளும், கதைகளும் தேர்வு செய்யப்பட்டன. புதுக்கோட்டை நேரு இளையோர் மைய மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு.க.சதாசிவம் அவர்கள் “ காகிதத்தில் கலை வடிப்போம் “ எனும் தலைப்பில், பல்வேறு தொப்பிகள் செய்யவும், பேசும் காகம் செய்யவும் பயிற்சியளித்தார். 
             
                 முகாம் குழந்தைகள் ஐந்து குழுக்களாகப் பிரிக்கப் பட்டு, “ மரங்களோடு பேசுவோம் “ என்னும் கள ஆய்வுக்குச் சென்று பலவகை மரங்களை ஆய்வு செய்து  முகாமில் தொகுத்து அறிக்கை அளித்தது சிறப்பாக இருந்தது.

               நிறைவு விழாவிற்குத் தணிக்கையாளர் திரு எஸ்.தியாகராசன் அவர்கள் தலைமை யேற்றார். கவிஞர் நீலா வரவேற்க, மாநில செயற்குழு உறுப்பினர் சி.கோவிந்தசாமி, மாவட்டச் செயற்குழு உறுப்பினர் த.சிவராமகிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
ஒவ்வொரு அமர்வுச் செயலிலும் சிறப்பான படைப்புகளை வழங்கிய மாணவர்கள் பரிசுகள் வழங்கிப் பாராட்டப் பட்டனர்.  இரண்டுநாள் அறிவியல் திருவிழாவிலும் கலந்து கொண்ட குழந்தைகள் அனைவருக்கும் பாராட்டுச் சான்றிதழ் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தால் வழங்கப் பட்டது.
               த.நா.அ.இயக்க மாவட்டப் பொருளாளர் திரு ம.வீரமுத்து அவர்கள் நன்றி கூற திருவிழா இனிதே நிறைவுற்றது.


Monday, May 20, 2013

சிக்கப்பட்டி- பட்டிமன்றம்

             20.05.2013 அன்று புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வட்டம், சிக்கப்பட்டியில் ஆலய ஆறாம் மண்டகப்படியினை முன்னிட்டு  சிந்தனைப் பாட்டுப் பட்டி மன்றம் நடைபெற்றது.
             “மக்கள் மனதில் நீங்காது நிலைத்து நிற்பவை, குடும்ப உறவு, காதல் திரையிசைப் பாடல்களா?  சமுதாய தத்துவப் பாடல்களா?“ என்னும் தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது.
             பட்டிமன்ற நடுவராக புலவர் மகா.சுந்தர் அவர்கள் தனது முன்னுரையில்  இருசார் அணியினையும் அறிமுகம் செய்து. இரு தலைப்புகளிலும் உள்ள திரையிசைப் பாடல்களைக் கோடிட்டுக் காட்டினார்.
              மக்கள் மனதில் நீங்காது நிலைத்து நிற்பவை சமுதாய தத்துவப் பாடல்களே என்ற அணித் தலைமையாக  பாவலர் பொன்.கருப்பையா அவர்கள், சமூக மாற்றத்திற்கு வித்திட்ட, இளைஞர்களைப் பக்குவப் படுத்திய, பட்டுக்கோட்டை கலியாண சுந்தரம், கவிஞர் கண்ணதாசன், வாலி ஆகியோர்களின்  பாடல்களைப் பாடி, நடப்பியலை நகைச் சுவையுடன் எடுத்துரைத்தார்.
            அடுத்து வாதிட்ட சிதம்பர ஈசுவரன், மக்கள் விரும்புவது குடும்ப உறவு மற்றும் காதல் பாடல்களே என்பதற்குச் சான்றான திரையிசைப் பாடல்களை இருகுரல் இசையோடு பாடிப் பாராட்டுப்  பெற்றார்.
             சமுதாய, தத்துவப் பாடல்களே என்ற தலைப்பில் அடுத்துப் பேசிய இராச.செய்சங்கர், கொச்சையான திரையிசைப் பாடல்கள் இளைய சமுதாயத்தைக் கெடுக்கும் நிலையினையும், சமூக மாற்றத்திற்கு வழிகாட்டிய பழைய புதிய பாடல்களைப் பாடியும், உணர்ச்சிகரமான எடுத்துக் காட்டுகளுடன் வாதிட்டுப் பாராட்டினைப் பெற்றார்.
            குடும்ப உறவு காதல் பாடல்கள் என்ற தலைப்பில் பேசிய வள்ளியப்பன் அவர்கள் தாயின் பெருமை , காதலின் அருமை பற்றிய பாடல்களைச் சுட்டிக்காட்டிப் பேசினார்.
             பட்டிமன்ற நடுவர் மகா.சுந்தர் தனது நிறைவுரையில், காதலைக் கண்ணியமாகவும், குடும்ப உறவுகளை குதூகலமாகவும் காட்டிய திரைஇசைப் பாடல்களையும்,  இளைஞர் முதல் முதியோர் வரை இதமாக சமூக நிலைகளை உயர்த்திவரும் தத்துவப் பாடல்களையும் ஒப்பிட்டு. காதல் பாடல்களைவிட. சமுதாய மாற்றத்திற்காகத் தத்தவார்த்தமாகப் பாடப்பட்ட திரையிசைப் பாடல்களே காலத்தால் அழியாமல் மக்கள் மனதில் என்றும் நிலைத்திருக்கின்றன எனத் தீர்ப்பளித்தார்.
           அறந்தாங்கி அலெக்ஸ் குழுவினர் பாடல்களுக்கு இசையமைத்திருந்தது அருமை.

Wednesday, May 15, 2013

இயற்கையின் படைப்புகள் எல்லாவற்றையும் நேசிப்போம். ஏற்றம் தரும் மாற்றங்களை யோசிப்போம்.
                        தமிழ்நாடு அறிவியல் இயக்க வளர்ச்சி உபகுழு மாநில மாநாடு, புதுக்கோட்டையில் 2013 மே ,14,15  ஆகிய இருநாள்கள் நடை பெற்றது. 
                      முதல்நாள் மாநாட்டிற்கு மாநிலத் தலைவர் முனைவர் மணி அவர்கள் தலைமையேற்றார். மாநிலத் துணைத் தலைவர் எஸ்.டி.பாலகிருஷ்ணன் மாநாட்டு நிகழ்வுகளை ஒருங்கிணைத்து நடத்தினார்.
                      புதுக்கோட்டை மாவட்டத் தலைவர் திரு லெ.பிரபாகரன் அவர்கள் வரவேற்புரையாற்றினார். கன்னியாகுமரி மாவட்ட மலர் குழுவின் “ இயற்கையோடு வாழப் பழுகு மனிதா” என்ற பாடலோடு மாநாடு தொடங்கியது. 
                     மாநிலப் பொதுச் செயலாளர் திரு ஸ்டீபன் நாதன்  அவர்கள் மாநாட்டினைத் தொடக்கி வைத்து உரையாற்றினார்.
                     மாநிலத் துணைத் தலைவர் பேராசிரியர் மோகனா அவர்கள் பெண்களும் வாழ்வாதாரங்களும்  பற்றி உரைவீச்சு நிகழ்த்தினார். பேரா.இராசமாணிக்கம் அவர்கள்  பெண்களைப் பாதிக்கும் வாழ்வியல் சிக்கல்கள் பற்றி விளக்கினார்.
                     மலர் குழு அனுபவங்கள் பற்றி தேவி அவர்களும், துளிகள் பணிகள் பற்றி விருதுநகர் தமிழரசி அவர்களும் அனுபவங்களைப் பகிர்ந்தனர்.
                   பிற்பகல் அமர்விற்கு திரு தியாகு அவர்கள் தலைமையேற்றார்.                                                           பாவலர் பொன்.கருப்பையா அவர்கள் எழுதி இசையமைத்த “ புமியைக் காத்திடும் இயற்கையை மனிதன் அழிப்பது சரிதானா? என்ற பாடலோடு  இரண்டாம் அமர்வு தொடங்கியது. 
திரு டி.பி.ரெகுநாத் அவர்கள் இயற்கை வளங்கள் மீட்சி பற்றியும், சிரவாக் கோட்டை இராமலிங்கம் அவர்கள் கனிமவளங்கள் அரசியலார், வலியோரால் அபகரித்து அழிக்கப் பட்ட அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார்.
                  திரு நாராயணமூர்த்தி  அவர்கள் நீர் மேலாண்மை பற்றி கருத்துரை வழங்கினார்.

15.05.2013 இரண்டாம் நாள் மாநாடு பாவலர் பொன்.க .வின் “பெண்ணினமே நிமிர்ந்து எழுகவே“ “ அழகிய புமியில் அமைதிப் பு மலரவேண்டும்“ ஆகிய பாடல்களோடு தொடங்கியது.                                            காலை அமர்விற்கு திரு இராஜ்குமார் அவர்கள் தலைமையேற்றார். திரு காமேஸ் அவர்கள் நீர்ச்சேமிப்பு பண்ணைக் குட்டைகள் பற்றியும்,  திரு இரமேஸ்பாபு கடற்கரை சார்ந்த வாழ்வாதாரப் பாதிப்புகள் பற்றியும் கருத்துரை வழங்கினர். 
                   குழு விவாதத்திற்குப் பின்னர் நிறைவு விழாவிற்கு திரு எஸ்.டி.பாலகிருஷ்ணன் தலைமையேற்றார். திரு எஸ்.சுப்பிரமணியன் நிறைவுரையாற்ற மாநாடு சிறப்பாக முடிவுற்றது.

Sunday, May 5, 2013

சண்முகா நகரில் நுகர்வோர் குழு

இயமாற்றங்களை யோசிப்போம்.ற்கையின் படைப்புகள் எல்லாவற்றையும் நேசிப்போம். ஏற்றம் தரும்
                            புதுக்கோட்டைமாவட்டம் புதுக்கோட்டை கவிநாடு மேற்கு சண்முகா நகர் மற்றும் விரிவாக்கப் பகுதியி்ல்  04.05.2013 அன்று நுகர்வோர் குழு அமைப்புக் கூட்டம் நடைபெற்றது.
                                புதுக்கோட்டை மாவட்ட நுகர்வோர் குழு தலைவர் ( பொ ) ரொட்டேரியன் திரு ஆர்.யு.இராமன், மாவட்டப் பொருளாளர் திரு வேழவேந்தன் ஆகியோர்  வருகை தந்து சண்முகா நகர் நுகர்வோர் குழுவினை அமைத்து வைத்தனர்.
மாவட்டச் செயற்குழு உறுப்பினர் பாவலர் பொன்.கருப்பையாநுகர்வோர் குழுவினரை அறிமுகம் செய்து வரவேற்புரையாற்றினார்.அவர் பேசுகையில்  நுகர்வோர் குழுவின் அவசியம், தனிநபர் விழிப்புணர்வும், பொதுநலனும் பற்றிக் குறிப்பிட்டார்.                                                  திரு வேழவேந்தன் தனது உரையில் மாவட்ட நுகர்வோர் குழு தொடங்கப்பட்ட 1985 ஆம் ஆண்டிலிருந்து குழுவின் செயல்பாடுகள், சாதித்தவை , நுகர்வோர்யார்? நுகர்வோரின்பாதிப்புகளும் விழிப்புணர்வும் பற்றிக் கூறினார்.
                               இராமன் அவர்கள் பேசுகையி்ல் நுகர்வோரின்  எட்டு உரிமைகள், பத்துக் கடமைகள் பற்றி விளக்கி தனி நபர்க்காக மட்டுமன்றி பகுதிமக்களின் பாதிப்பின்போதும் நுகர்வோர் குழு ஆற்ற வேண்டிய கடமைகள் பற்றி விளக்கினார். 
                               திருவாளர்கள் பாவலர் பொன்.கருப்பையா, உ.சரவணபாண்டி, அ.சுப்பையா,க.கனகராஜ், சி.சோமசுந்தரம், குரு.முத்துராஜ்பாண்டிக்குமார், வெ.சீனிவாசநாராயணன், க.சுப்பிரமணியன், சுரேஷ் அகிலா,ச.கோபாலகிருஷ்ணன், அ.சோமசுந்தரம், பா.வெங்கடசுப்பிரமணியன்,சண்முகபாண்டி,கரு.கருணாநிதி, சாண்டில்யன், கண்ணன், இரவி, க.இராசசேகர், அருணாசலம்,ச.சுப்புராமன், இரா.ஜெயக்குமார்,  திருமதியர் சித்ராசத்தியமூர்த்தி, வள்ளிக்கண்ணு, ஞானசுந்தரி, ஆனந்தவள்ளி ஆகியோர் கொண்ட நுகர்வோர் குழு அமைக்கப்பட்டது. ஆண்டு உறுப்பினர் கட்டணம் செலுத்தித் தங்களை நுகர்வோ்ர் குழு உறுப்பினர்களாகப் பதிவு செய்து கொண்டனர், 
                           இக்குழுவிற்குத் தலைவராக பாவலர் பொன்.கருப்பையா, செயலாளராக திரு அ.சோமசுந்தரம், பொருளாளராக திரு அ.சுப்பையா ஆகியோர் அமைப்புக் குழுவால் தேர்வு செய்யப் பட்டனர், 
உறுப்பினர்களின் சந்தேகங்களும் கருத்துகளும் பகிர்ந்து கொள்ளப் பட்டது.
                            நிறைவில் பொருளாளர் திரு அ.சுப்பையா அவர்கள் நன்றி கூறினார்.