Sunday, March 24, 2013

கலிலியோ துளிர் இல்ல நிகழ்வு

இயற்கையின் படைப்புகள் எல்லாவற்றையும் நேசிப்போம். ஏற்றம் தரும் மாற்றங்களை யோசிப்போம்.
                             23.03.2013 அன்று புதுக்கோட்டை கலீப் நகர் கலிலியோ துளிர் இல்லத்தில் உலக சிட்டுக்குருவிகள் நாள், உலக வன நாள், உலக நீர் வள நாள் ஆகிய மூன்று சிறப்பான நாள்கள் பற்றிய கருத்துப் பகி்ர்வு நிகழ்த்தப்பட்டது.
                            துளிர் இல்லச் செயலாளர் வரவேற்றார். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டத் துணைத் தலைவர் பாவலர் பொன்.கருப்பையா அவர்கள் உலக நீர் வள நாள் பற்றிய கருத்துரையினைத் துளிர் இல்லத்தாருக்கு வழங்கினார்.
                          அவர் தனது உரையில் இன்றைய நிலையில் நீர் வளப் பாதிப்பு, அதற்கான காரணங்கள், நீர் மாசு மற்றும் பற்றாக்குறை நோய் பாதிப்பு, மழைநீர் சேகரிப்பு, நீர் நிலைகளைப் பாதுகாத்தலின் அவசியம், பாதுகாக்கப்பட்ட குடிநீ்ர் வழங்குவதில் அரசின் கடமை பற்றிய கருத்துகள் பற்றி துளிர்களோடு விவாதித்தார்.
                        நிறைவாக பிறந்தநாள், குடும்ப சிறப்பு விழா நாள்களில் மரக்கன்றுகள் நட்டுப் பாதுகாக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

                         அதனைத் தொடர்ந்து. தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டச் செயலாளர்   திரு கா.செயபாலன் வனப் பாதுகாப்பு பற்றியும், நகரத் துளிர் இல்ல அமைப்பாளர்                   திரு ஆர்.சுப்பிரமணியன்  சிட்டுக் குருவிகள் பாதுகாப்பு பற்றியும் கருத்துரை வழங்கினர்.

                        தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநிலத் துணைச் செயலாளர் எஸ்.டி.பாலகிருஷ்ணன் அவர்கள் காணொளிக் காட்சி மூலம்  புவியின் நீர் வளம் பற்றிய கருத்துகளை வழங்கினார். துளிர் இல்ல உறுப்பினர்களின் துடிப்பான ஈடுபாட்டுடன் விவாதம் நடைபெற்றது.
                        நிறைவாக துளிர் இல்லப்  பொருளாளர் நன்றி கூறினார்.

Friday, March 22, 2013

இயற்கையின் படைப்புகள் எல்லாவற்றையும் நேசிப்போம். ஏற்றம் தரும் மாற்றங்களை யோசிப்போம்.
          அனைத்துலக தண்ணீர் நாளை(22.03.2013 ) யொட்டி புதுக்கோட்டை அரிமளம் ஒன்றியம் தாஞ்சூர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டத் துணைத் தலைவர் பாவலர் பொன்.கருப்பையா உரையாற்றியபோது.. உடன் பள்ளித் தலைமையாசிரியர் திருமதி சித்ராதேவி, உதவியாசிரியர் செல்வநாயகி.

அனைத்துலகத் தண்ணீர் நாள்

இயற்கையின் படைப்புகள் எல்லாவற்றையும் நேசிப்போம். ஏற்றம் தரும் மாற்றங்களை யோசிப்போம்.

                     22.03.2013 அனைத்துலகத் தண்ணீர் நாள்.  இந்நாளினையொட்டி  அறந்தாங்கிக் கல்வி மாவட்டம், அரிமளம் தாஞ்சூர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஒரு விழிப்புணர்வுக் கூட்டத்தினை நடத்தியது.
               
                 இக்கூ்ட்டத்திற்குப் பள்ளிக் கல்வியாளர் திரு ஆவுடை முத்து தலைமையேற்றார்.  ஆசிரியர் திருமதி பெ.சித்ராதேவி வரவேற்புரை யாற்றினார்.  தமிழ்நாடு அறிவியல் இயக்க புதுக்கோட்டை மாவட்டத் துணைத் தலைவர் பாவலர் பொன்.கருப்பையா                         “ நீரின்றி“......என்னும் தலைப்பில் பாடல் கதைகளுடன் தொடக்க உரையாற்றினார். 
              
                அருகி வரும் தண்ணீர் பிரச்சனைகள், தண்ணீர் பற்றாக்குறைக்கான சமூகக் காரணிகள், இயற்கையைப் பேண வேண்டியதன் அவசியம், தண்ணீர் மாசுபாடுகளும், பாதுகாக்கப்பட்ட குடிநீர் பற்றியும் தனது உரையில் மாணவர்களுக்கு உணர்த்தினார்.

              அடுத்து, காணொளிப் படக்காட்சிகளுடன் மாணவர்களுக்கு தண்ணீரின் இன்றியமையாமை, தண்ணீர் வறட்சி நோய்கள், தண்ணீர் பற்றிய அரசின் கொள்கை பற்றி தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநிலத் துணைச் செயலாளர் திரு எஸ்.டி.பாலகிருஷ்ணன் உரையாற்றினார். 

               மாவட்ட அறிவியல் இயக்கச் செயலாளர் திரு கா.செயபாலன், துளிர் இல்ல நகர அமைப்பாளர் திரு ஆர்.சுப்பிரமணியன் ஆகியோர் விளக்க உரையாற்றினர். 

             பள்ளி மாணவர்கள் தண்ணீர் பற்றிய பாடல், ஆடல், பேச்சு, நாடகம் எனப் பல்வேறு கலை நிகழ்ச்சிகளை நடத்தியது சிறப்பாக இருந்தது.  நிகழ்ச்சிகளை பள்ளி ஆசிரியர் செல்வநாயகி தயாரித்திருந்தமை பாராட்டிற்குரியது. 

            இந்நிகழ்வில் ஊராட்சி மன்றத் தலைவர் திரு மு.சரவணன், சத்துணவு அமைப்பாளர் திருமதி பிரேமா, பெற்றோர் அருணாசலம், முதலியப்பன் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிறைவாகப் பள்ளித் தலைமை ஆசிரியர் திருமதிபெ.சித்ராதேவி நிகழ்ச்சியின் சிறப்பினைச் சொல்லி நன்றி கூறினார்.


Tuesday, March 12, 2013

                 9.03.2013 அன்று பிற்பகல் 4.00 மணிமுதல் 6.00 மணிவரை, புதுக்கோட்டை டி.வி.எஸ் குடியிருப்புப் பகுதி கலிலியோ துளிர் இல்லக் கூட்டம் , தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டச் செயலாளர் திரு செயபாலன் அவர்கள் தலைமையி்ல் நடைபெற்றது. செயற்குழு உறுப்பினர் ஆர்.சுப்பிரமணியன் முன்னிலையேற்றார். துளிர் இல்லத் தலைவர் வரவேற்றார்.
                 தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டத் துணைத் தலைவர் பாவலர் பொன்.கருப்பையா அவர்கள், துளிர் இல்ல உறுப்பினர்களுக்கு எளிய அறிவியல் ஆய்வுகளைச் செய்து காட்டி, மாணவர்களிடையே அறிவியல் மனப்பான்மை, படைப்பாற்றல் திறன் வளர்க்கும் வழிமுறைகளை விளக்கினார்.
                   மாணவர்கள் செலவில்லாத எளிய அறிவியல் ஆய்வுகளையும், குறைந்த செலவில் செய்து பார்க்கக்கூடிய ஆய்வுகளையும் செய்து பார்த்து மகிழ்ந்தனர். அனைத்துத் துளிர்களும் ஆர்வத்துடனும் ஈடுபாட்டுடனும் கலந்து கொண்டது சிறப்பாக இருந்தது.
                 திரு சுப்பிரமணியன் அவர்கள் “துளிர்“ அறிவியல் திங்களிதழ் பற்றியும் அவ்விதழில் மாணவர் பங்கு பற்றியும் உரையாற்றினார்.
                 துளிர் இல்லச் செயலாளர் நன்றி கூறக் கூட்டம் இனிதே முடிந்தது.

Friday, March 8, 2013

அனைத்துலக மகளிர் நாள்

                                      08.03.2013 அன்,று புதுக்கோட்டை சத்தியமங்கலம் கீரை தமிழ்ச்செல்வன் கல்வியியல் கல்லூரியில் ,புதுக்கோட்டை சங்கமம் ஜேஸீஸ் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து அனைத்துலக மகளிர் நாள் விழாவினைச் சிறப்பாகக் கொண்டாடியது.
                                      விழாவிற்கு புதுக்கோட்டை சங்கமம் ஜூனியர் சேம்பர் இன்டர்நேஷனல் தலைவர் திரு. வே.குமாரவடிவேலு தலைமையேற்றார். கீரை தமிழ்ச்செல்வன் கல்விக்குழுமச் செயலாளர் திரு எஸ். பீட்டர் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டப் பொருளாளர் திரு வீரமுத்து வரவேற்புரையாற்றினார்.

                                     கல்வியல் கல்லூரி மாணவியரின் கவிதைப் போட்டி நடைபெற்றது. பெண்ணியம் பற்றிய கவிதைகள் தேர்வு செய்யப் பட்டன. மகளிர் பங்கேற்ற கோலப் போட்டியும் நடைபெற்றது. 
                                    கல்வியல் கல்லூரி பயிற்சி மாணவியர் பங்கேற்ற “பண்பாட்டு மேம்பாட்டில்  பெண்க ளின் பலமா? பலவீனமா?” என்னும் தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. நடுவர் உள்ளிட்ட அணியினர் சிறப்பாக வாதிட்டனர்.

                                   லேணா தமிழ்வாணன் அவர்களின் வருகையும் உரையும் எதிர்பாராத சிறப்பாக அமைந்திருந்தது. 
                                 அதனைத் தொடர்ந்து, மாவட்டக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன விரிவுரையாளர்கள் திரு.நாராயணன், திரு மாரியப்பன், தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டச் செயற்குழு உறுப்பினர் த.சிவராமகிருஷ்ணன் ஆகியோர்  வாழ்த்துரை வழங்கினர்.நிறைவாக தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டத் துணைத் தலைவர் பாவலர் பொன்.கருப்பையா பட்டி மன்றம், கவிதைப் போட்டிகளில் பங்கேற்றவர்களைப் பாராட்டியும், ஏன் மகளிர் நாள் கொண்டாடப் படுகிறது என்பதன் விளக்கத்தையும், சாதனை மகளிர் சந்தித்த சோதனைகளும் இன்றைய மகளிர் படும் வேதனைகள் பற்றியும் “ பெண்ணினமே நிமிர்ந்து எழுகவே“ என்னும் பாடலுடன் உரையாற்றினார்.
                                கவிதை, கோலப்போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கும் பட்டிமன்றத்தில் பங்கேற்ற மாணவியர்க்கும் செயலாளர் பீட்டர் அவர்கள் பரிசுகளை வழங்கிப் பாராட்டினார். நிறைவாக நிகழ்வினைத் தொகுத்து வழங்கிய கல்வியல் கல்லூரி முதல்வர் திரு கேசவன் அவர்கள் நன்றியுரையாற்றிட நாட்டுப் பண்ணுடன் விழா இனிதே முடிந்தது., 

Monday, March 4, 2013

வழிகாட்டி சமூகப் பணி மன்ற விழா

                               03.03.2013 முற்பகல் புதுக்கோட்டை கோயில்பட்டி சமுதாயக் கூடத்தில், கோயில்பட்டி “வழிகாட்டி சமூகப்பணி மன்றத்தின் இரண்டாம் ஆண்டு கல்வி ஊக்குவிப்புப் பரிசளிப்பு விழா நடைபெற்றது.
                                        விழாவிற்கு அப்பகுதி நகர் மன்ற உறுப்பினர் திரு.ரெ.முத்துச்சாமி அவர்கள் தலைமைதாங்கினார். ஊர்த்தலைவர் க.சுப்பையா அம்பலம் அவர்கள் முன்னிலையேற்றார். வழிகாட்டி சமூகப்பணி மன்றத்தின் தலைவர் , தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாவட்டச் செயலாளர் திரு எஸ்.ரெங்கராசு அவர்கள் அனைவரையும் வரவேற்றார்.
                                     வழக்குரைஞர் செல்வக்குமார், தலைமையாசிரியர் பெட்லாராணி,பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் திரு கே.அடைக்கலம், மேனாள் நகர்மன்ற உறுப்பினர் பி.கருப்பையா, தி.க.மாரிமுத்து ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
                                     கடந்த ஆண்டு 10,12, வகுப்பு அரசுப் பொதுத்தேர்வுகளில் மாவட்ட அளவில், பள்ளி அளவில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கும், 80 விழுக்காடு மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கும் , கோயில்பட்டி நகராட்சி நடுநிலைப்பள்ளியில் வகுப்பு வாரியாக முதலிடம் பெற்ற மாணவர்களுக்கும், மணிமன்றம் மரகதவள்ளி அறக்கட்டளையின்  நிறுவுனர் புலவர் பொன்.கருப்பையா பரிசுகளை வழங்கிப் பாராட்டுரை நல்கினார்.




                                   அவர் தனது உரையில்  மதிப்பெண்கள் பெறுவது மட்டும் குறிக்கோளாகக் கொள்ளாமல் சமூக மேம்பாட்டிற்கான திறன் பெறும் வாய்ப்புகளும் மாணவர்களுக்க உருவாக்கிக் கொடுக்கப் படவேண்டும். அதற்காக பெற்றோர், ஆசிரியர், சமுதாயம் இணைந்து செயலாற்ற வேண்டும் என வலியுறுத்தினார். விழா நிறைவில் மன்ற ஆலோசனைக் குழு உறுப்பினர் திரு கே.ஆனந்தகுமார் நன்றி கூறினார்.
இயற்கையின் படைப்புகள் எல்லாவற்றையும் நேசிப்போம். ஏற்றம் தரும் மாற்றங்களை யோசிப்போம்.

Sunday, March 3, 2013

தேசிய அறிவியல் நாள் -2013

28.02.2013 அன்று தேசிய அறிவியல் நாள் புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் கொண்டாடப் பட்டது.
அன்று காலை 10.00 மணிக்கு புதுக்கோட்டை நகராட்சி நடுநிலைப்பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டத் துணைத் தலைவர் புலவர் பொன்.கருப்பையா தேசிய அறிவியல் நாள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். பள்ளித் தலைமை ஆசிரியர் திரு விஜயமாணிக்கம் தலைமையில் விழாத் தொடங்கியது. பள்ளி மாணவர்களின் அறிவியல் கண்காட்சியினை புலவர் பொன்.கருப்பையா திறந்து வைத்தார். 
மாணவர்களுக்கு அறிவியல் விழிப்புணர்வு பற்றிய கருத்துகளை “எளிய அறிவியல் ஆய்வுகள்“ செய்து காட்டி விளக்கினார்.

அன்று நண்பகல் 12.00 மணிக்கு புதுக்கோட்டை வடவாளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஜே.சி.ஐ. சார்பில் நடைபெற்ற தேசிய அறிவியல் நாள் விழாவில் தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டத் துணைத் தலைவர் புலவர் பொன்.கருப்பையா  சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.புதுக்கோட்டை ஜே.சி.ஐ தலைவர் திரு ரியாலுதீன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில்  பொன்.க அவர்கள் “மந்திரமா தந்திரமா?“ நிகழ்ச்சியினைச் செய்து காட்டி மாணவர்களுக்கு அறிவியல் விழிப்புணர்வினை ஏற்படுத்தினார். மாணவர்கள் உற்சாகமாக செயல் விளக்கத்தில் ஈடுபாடு காட்டினர். ஜே.சி.ஐ செயலாளர் யோகா பாண்டியன்  நன்றி கூறினார்.

            அன்று பிற்பகல் 3.00 மணிக்கு புதுக்கோட்டை தமிழ்நாடு அறிவியல் இயக்க அலுவலகக் கூட்ட அரங்கில் புதுக்கோட்டை சங்கமம் ஜேஸீஸ் உடன் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து தேசிய அறிவியல் நாள் விழாவினைக் கொண்டாடியது. விழாவிற்கு சங்கமம் ஜேஸீஸ் தலைவர் திரு.வே குமாரவேலு முன்னிலை வகித்தார். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டத் துணைத் தலைவர் திரு. அ.மணவாளன் தலைமை யேற்றார். மாவட்டப் பொருளாளர் திரு.வீரமுத்து அவர்கள் வரவேற்புரையாற்றினார்.  
ஜே.சி. பேராசிரியர் மு.கருப்பையா, மாவட்டக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன விரிவுரையாளர் திரு எம்.மாரியப்பன், த.அ.இயக்க மாவட்டச் செயலாளர் திரு. கா.ஜெயபாலன், மாவட்டத் துணைத் தலைவர் புலவர் பொன்.கருப்பையா, திரு.மஸ்தான் பக்ருதீன், மாநிலச் செயற்குழு உறுப்பினர் திரு.சி.கோவிந்தசாமி, மா.செ.கு.உறுப்பினர் த.சிவராமகிருஷ்ணன், திரு முத்துக்குமார், தலைமையாசிரியர் சாமி.சத்தியமூர்த்தி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
கவிதை, கட்டுரை, ஓவியப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும், தேசியக் குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் விருது பெற்றவர்களுக்கும் நினைவுப் பரிசுகளும் வழங்கப்பட்டன. ஜே.ஸி இரா.ச.சிங்க பாண்டியன் அவர்கள் நன்றியுரையாற்றினார்.

Saturday, March 2, 2013

சிறீ பாரதி கலை அறிவியல் கல்லூரி- செஞ்சுருள் சங்கம்

                 26.02.2013 அன்று முற்பகல் புதுக்கோட்டை கைக்குறிச்சி சிறீ பாரதி கலை அறிவியல் கல்லூரியில்  செஞ்சுருள் சங்க விழிப்புணர்வுக் கூட்டம் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் ஜானகி சுவாமிநாதன் அவர்கள் தலைமை தாங்கினார்.  செஞ்சுருள் சங்க ஒருங்கிணைப்பாளர் விசயசாமுண்டீசுவரி வரவேற்புரை நிகழ்த்தினார். 
                    சிறப்பு விருந்தினராக புலவர் பொன்.கருப்பையா கலந்து கொண்டு  ஹெச்.ஐ.வி. மற்றும் குருதிக் கொடை பற்றிக் கருத்துரையாற்றினார். அவர் தனது உரையில் பெண்களுக்கான இயற்கை பாதிப்புகள்., அவற்றிலிருந்த பாதுகாத்துக் கொள்ளும் வழி முறைகள் , வளரிளம் பெண்கள் சந்திக்கும் சமூகப் பிரச்சனைகள், அவற்றைச் சமாளிக்கும் வழிமுறைகள் பற்றித் தெளிவாக விளக்கினார்.
                    உயிர் காக்கும் திரவமான குருதியின் பகுதிப் பொருள்களின் தன்மை, குருதி வகைகள், குருதிக் கொடையின் அவசியம், குருதிக் கொடையளிக்கத் தகுதியுடையோர். குருதிக் கொடையளிக்கக் கூடாதோர். அக்கொடையின் பலன்கள், ஆகிய செய்திகளை செஞ்சுருள் சங்க மாணவியர்க்கு மனங்கொளத் தக்க வகையில் வழங்கினார். 
                 செஞ்சுருள் சங்க மாணவ ஒருங்கிணைப்பாளர் பாண்டிச்செல்வி நன்றி கூறினார்.

புதுக்கோட்டை-கவிஞர் மன்றக் கூட்டம்

             24.02.2013 அன்று மாலை புதுக்கோட்டை கவிஞர் மன்றத்தின் திங்கள் கூட்டம் புதுக்கோட்டை பாலபவனத்தில் நடைபெற்றது.
புதுக்கோட்டை இலக்கியப் பேரவையின் தலைவர் மு.முத்து சீனிவாசன் தலைமையேற்றார். கவிஞர் மன்ற நிருவாகி நிலவை பழனியப்பன் வருகைதந்திருந்த கவிஞர்களை வரவேற்றார்.

     பாவலர் பொன்.கருப்பையா “ பெண்ணினமே நிமிர்ந்து எழுகவே“ எனும் பாடலோடு கூட்டத்தினைத் தொடங்கி வைத்தார். அவர் தனது உரையில் படைப்பாளிகள் சமூக மாற்றத்திற்காக படைப்புகளை உருவாக்க வேண்டும் எனவும் பிரச்சனைகளைச் சுட்டுவதோடு கவிஞனின் கடமை முடிவதில்லை. அப்பிரச்சனைகளுக்கான தீர்வினை அப்படைப்பாளி தனது படைப்பில் சுட்ட வேண்டும் என்று பேசினார்.
       
        திருக்குறள் கழகத் தலைவர் பா.இராமையா, ஆனந்தஜோதி திங்களிதழ் ஆசிரியர் மீரா சுந்தர், கவிஞர்கள் முத்துப் பாண்டியன், ஷெரிப், கவிபாலா, பீர்முகம்மது, பொன்னையா, ஆ.சா.மாரியப்பன், மற்றும் இளங்கவிஞர்கள் தங்களது கவிதைகளை மன்றத்தில பதிவு செய்தனர். மன்றப் பொறுப்பாளர் கவிஞர் கஸ்தூரிநாதன்  நன்றி கூறினார்
இயற்கையின் படைப்புகள் எல்லாவற்றையும் நேசிப்போம். ஏற்றம் தரும் மாற்றங்களை யோசிப்போம்.
                             224.02.2013 அன்று புதுக்கோட்டை தமிழ்நாடு அறிவியல் இயக்கக் கூட்ட அரங்கில்  அறிவியல் தொழில் நுட்ப மையம் நடத்திய அறிவியல் தொடர்பியல் கல்விக் கருத்தரங்கில்  அறிவியல் மனப்பான்மையினை வளர்த்தல் எனும் தலைப்பில் தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டத் துணைத் தலைவர் புலவர் பொன்.கருப்பையா “ எளிய அறிவியல் ஆய்வுகள்“ எனும் தலைப்பில் செயல்  விளக்கங்களோடு கருத்துரை யாற்றினார். 
செலவில்லாத, மிகக்குறைந்த செலவில் அறிவியல் ஆய்வுகளை எப்படி மேற்கொள்வது என்னும் செயல் விளக்கங்களை பயில்வோர்க்கு அளித்தது சிறப்பாக அமைந்திருந்தது.