Sunday, February 24, 2013

நேரு இளையோர் மையக் கலைப் போட்டிகள்

           இந்திய அரசு-நேரு இளையோர் மையத்தின் புதுக்கோட்டைக் கிளையின் சார்பாக, 09.02.2013 சனிக்கிழமை , புதுக்கோட்டை தமிழ்நாடு அறிவியல் இயக்கக் கூட்ட அரங்கில், மாவட்ட அளவிலான கலை விழாப் போட்டிகள் நடைபெற்றன. மாவட்டம் முழுவதிலிருந்தும் பலஇளைஞர் குழுக்கள் போட்டிகளில் பங்கேற்றனர். கிராமியக் கலைகளான கும்மி, கோலாட்டம்,  ஒயிலாட்டம், தெம்மாங்கு இசைப்பாட்டு, மற்றும் பரதநாட்டியம் ஆகிய குழுப்போட்டிகளும்  தனித்திறன் போட்டிகளும் சிறப்பாக நடைபெற்றன.

            மாநில நல்லாசிரியர் பாவலர் பொன்.கருப்பையா, சிறுகதை ஆசிரியர் ஆர்.நீலா, தேசிய நல்லாசிரியர் ஏ.கருப்பையன் ஆகியோர் நடுவர்களாக இருந்து சிறந்த குழுக்களைத் தேர்வு செய்தனர். தேர்வு செய்யப்பட்ட குழுக்கள் மாநில அளவில் திருப்புரில் நடைபெறும் போட்டிகளுக்கு அனுப்பப் படுவதாக ஒருங்கிணைப்பாளர் அறிவித்தார்.

               மாலை 4.00 மணிக்கு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு வருகை தந்தவர்களை   மாவட்ட நேரு யுவகேந்திரா ஒருங்கிணைப்பாளர் திரு க.சதாசிவம் வரவேற்றார். எஸ்.வி.எஸ் மோட்டார் குழும நிருவாக இயக்குநர் திரு ஜெயக்குமார் அவர்கள் தலைமை தாங்கினார். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டத் தலைவர் திரு லெ.பிரபாகரன் அவர்கள் முன்னிலையேற்றார். 
              பாவலர் பொன்.க அவர்களின் தமிழ்த்தாய் வாழ்த்தோடு விழா தொடங்கியது. எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத் திட்ட ஒருங்கிணைப்பாளர் திரு ஆர். இராஜ்குமார் அவர்கள் வாழ்த்துரை வழங்க, புதுக்கோட்டை கல்வியியல் கல்லூரி முதல்வர் முனைவர் சிவ.கார்த்திகேயன் அவர்கள்  பரிசுகள் வழங்கிச் சிறப்புரையாற்றினார்.  தேசிய இளையோர் படைத் தொண்டர் எம்.அப்பாவு அவர்கள் நன்றியுரை யாற்ற நாட்டுப் பண்ணுடன் விழா சிறப்பாக நிறைவுற்றது.

No comments:

Post a Comment