Friday, February 22, 2013

பெண்ணியம் மேம்பட....



        14.02.2013 அன்று பெண்களுக்கு எதிரான வன்முறையைக் கண்டித்து உலகம் முழுவதும் 100 கோடிப் பேர் பேரெழுச்சி நாள்  கடைப் பிடிக்கப் பட்டது. புதுக்கோட்டையில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் புதுக்கோட்டை அரசினர் மகளிர் கலைக் கல்லூரி, கைக்குறிச்சி சிறீ பாரதி கலை அறிவியல் கல்லூரிகளில் அவ்வெழுச்சி நாளையொட்டி கருத்தரங்கம் நடைபெற்றது. பேராசிரியை மோகனா அவர்கள் பெண்களின் பிரச்சனைகள் குறித்து உரை வீச்சு நிகழ்த்தினார்.
அந்நிகழ்வில் பாவலர் பொன்.கருப்பையா எழுதி இசையமைத்துப் பாடிய பாடல் இது.

பெண்ணினமே      நிமிர்ந்து     எழுகவே
பேதமிலா          துரிமைகள்     பெறுகவே
கண்ணில்லாமல்    காட்சிகள்  நெஞ்சில்     மலருமா?
பெண்ணில்லாமல்  மாட்சிகள்  மண்ணில்  பெருகுமா?
மென்மை  காட்டும்  பெண்ணின்  வாழ்வில்  கண்ணீர்   ஏனம்மா?
விண்ணைத்  தாண்டும்  தன்மை  என்றும்  பெண்ணில்  தானம்மா.

புவியில்   வாழும்   உயிரில்   பாதி   பெண்ணே   உன்னினம்
புலரும்   மேன்மை  யாவினும்   நாத  மூலம்  உன்னிடம்
பெண்ணைத்  தாக்கும்  வன்மை  தீர  ஒன்றாய்க்  கூடுவோம்
பெண்மை  போற்றும்  பண்பை  நாளும்  மண்ணில்  நாட்டுவோம்

பள்ளியில்  பயிலும்  சிறுமியர்  மீதும்  பாலியல்  தாக்கலா? 
வல்லுறவாய்ப்  பெண்ணைக்  கூட்டாய்க்  குதறும்  வக்கிரம்  போக்கவா
வெள்ளித்  திரையில்  விளம்பர  முறையில்  கவர்ச்சிக்குப்  பெண்களா?
கிள்ளியே  எரிக்கக்  கொள்ளியை உயர்த்து குமுறும் எரிமலையாய்

கூலிக்குச்  செல்லும்  பேதையைச்  சீண்டும்  கொடியரைச்  சாடுவோம்
வேலியே   பயிரை  மேய்ந்திடும்  போக்கை  வேரொடு  வீழ்த்துவோம்
பாலுக்குக்  காவல்  புனையை  வைக்கும்  பகடியை  நீக்குவோம் 
பாலியல்  பொருளாய்  பாவையை  நோக்கும்  பதர்களைப்  பொசுக்குவோம் 

அச்சம்   நாணம்   மடமும்    பயிர்ப்பும்   அடிமையின்  சின்னமா?
உச்சம்   நாடும்   பெண்ணே  உனக்குள்   ஒடுங்கிட     எண்ணமா?
ஏச்சையும்  கேலிப்   பேச்சையும்  விழி  வீச்சினில்  எரித்திடு
மூச்சுள்ள  வரையும்   பெண்ணினப்  பெருமை  காப்பதில்  முனைந்திரு

துருவங்கள்    இரண்டும்   எதிரெதி    ராயின்  ஈர்ப்ப  தியல்பன்றோ
உருவத்தால் ஆண்பெண்  வேறென்  றாலும் உரிமைகள் சமமன்றோ
இரக்கைகள்  ரெண்டும்  இணையாய்  இயங்கப்  பறப்பது  எளிதன்றோ
இருகைகள்  இணைத்து  எழுப்புவோம்  ஓசை  எல்லாமும்  சமமென்றே

No comments:

Post a Comment