Sunday, February 24, 2013

செம்மொழிக் கருத்தரங்கம் - ஜே.ஜே. கல்லூரி

இயற்கையின் படைப்புகள் எல்லாவற்றையும் நேசிப்போம். ஏற்றம் தரும் மாற்றங்களை யோசிப்போம்.
             சென்னை செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தோடு புதுக்கோட்டை திலகவதியார் திருவருள் ஆதீனமும் சிவபுரம் . ஜே.ஜே.கலை அறிவியல் கல்லூரியும் இணைந்து, புதுக்கோட்டை சிவபுரம் ஜே,ஜே. கலைஅறிவியல் கல்லூரியில், நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்னும் தலைப்பில் பிப்ரவரி 4,5,6 நாள்களில் சிறப்பான கருத்தரங்கினை நடத்தியது.
             அக்கருத்தரங்கின் தொடக்க நிகழ்விற்கு ஜெ.ஜெ.கல்வி நிறுவனங்களின் செயலாளர் திரு நா.சுப்பிரமணியன் அவர்கள் தலைமையேற்று நடத்தினார். தவத்திரு தயானந்த சந்திர சேகரன் அவர்கள் வரவேற்புரையாற்றினார். தொடக்க உரையினை தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக இலக்கியத் துறைத் தலைவர் முனைவர் வ.குருநாதன் ஆற்றினார்.  அன்றைய பிற்பகல் சிலப்பதிகாரத்தில் சமயப் பொதுமை என்னும் தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. முனைவர் கு.சிவமணி தலைமையேற்றார். சைவம் என்னும் தலைப்பில் முனைவர் சேதுராமன் , வைணவம் என்னும் தலைப்பில் இரா.சம்பத்குமார், சமணம் என்னும் தலைப்பில் முனைவர் மு.பழனியப்பன் ஆகியோர் கருத்துரைகள் வழங்கினர். கவிஞர் மு.பா. வரவேற்புரையினையும் கவிஞர் பறம்பு நடராசன் நன்றியுரையும் ஆற்றினர்.

                இரண்டாம் நாள் (5.02.13) முற்பகல் அமர்வில் சிலப்பதிகாரத்தில் அரசியல் என்னும் தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. செந்தூரான் கல்விக் குழுமத் தலைவர் இராம.வைரவன் தலைமை  வகித்தார். முனைவர் முத்து வரவேற்புரையாற்றினார். அரசன் எனும் தலைப்பில் முனைவர் அய்க்கண் , குடி என்னும் தலைப்பில் முனைவர் மறைமலை இலக்குவனார், சுற்றம் என்னும் தலைப்பில் பேரா. கு.தயாநிதி ஆகியோர் கருத்துரை வழங்கினர் . மணிச்சுடர் கலைக்கூட நிருவாகி புலவர் பொன்.கருப்பையா நன்றியுரையாற்றினார்.


நேரு இளையோர் மையக் கலைப் போட்டிகள்

           இந்திய அரசு-நேரு இளையோர் மையத்தின் புதுக்கோட்டைக் கிளையின் சார்பாக, 09.02.2013 சனிக்கிழமை , புதுக்கோட்டை தமிழ்நாடு அறிவியல் இயக்கக் கூட்ட அரங்கில், மாவட்ட அளவிலான கலை விழாப் போட்டிகள் நடைபெற்றன. மாவட்டம் முழுவதிலிருந்தும் பலஇளைஞர் குழுக்கள் போட்டிகளில் பங்கேற்றனர். கிராமியக் கலைகளான கும்மி, கோலாட்டம்,  ஒயிலாட்டம், தெம்மாங்கு இசைப்பாட்டு, மற்றும் பரதநாட்டியம் ஆகிய குழுப்போட்டிகளும்  தனித்திறன் போட்டிகளும் சிறப்பாக நடைபெற்றன.

            மாநில நல்லாசிரியர் பாவலர் பொன்.கருப்பையா, சிறுகதை ஆசிரியர் ஆர்.நீலா, தேசிய நல்லாசிரியர் ஏ.கருப்பையன் ஆகியோர் நடுவர்களாக இருந்து சிறந்த குழுக்களைத் தேர்வு செய்தனர். தேர்வு செய்யப்பட்ட குழுக்கள் மாநில அளவில் திருப்புரில் நடைபெறும் போட்டிகளுக்கு அனுப்பப் படுவதாக ஒருங்கிணைப்பாளர் அறிவித்தார்.

               மாலை 4.00 மணிக்கு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு வருகை தந்தவர்களை   மாவட்ட நேரு யுவகேந்திரா ஒருங்கிணைப்பாளர் திரு க.சதாசிவம் வரவேற்றார். எஸ்.வி.எஸ் மோட்டார் குழும நிருவாக இயக்குநர் திரு ஜெயக்குமார் அவர்கள் தலைமை தாங்கினார். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டத் தலைவர் திரு லெ.பிரபாகரன் அவர்கள் முன்னிலையேற்றார். 
              பாவலர் பொன்.க அவர்களின் தமிழ்த்தாய் வாழ்த்தோடு விழா தொடங்கியது. எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத் திட்ட ஒருங்கிணைப்பாளர் திரு ஆர். இராஜ்குமார் அவர்கள் வாழ்த்துரை வழங்க, புதுக்கோட்டை கல்வியியல் கல்லூரி முதல்வர் முனைவர் சிவ.கார்த்திகேயன் அவர்கள்  பரிசுகள் வழங்கிச் சிறப்புரையாற்றினார்.  தேசிய இளையோர் படைத் தொண்டர் எம்.அப்பாவு அவர்கள் நன்றியுரை யாற்ற நாட்டுப் பண்ணுடன் விழா சிறப்பாக நிறைவுற்றது.

Friday, February 22, 2013

பெண்ணியம் மேம்பட....



        14.02.2013 அன்று பெண்களுக்கு எதிரான வன்முறையைக் கண்டித்து உலகம் முழுவதும் 100 கோடிப் பேர் பேரெழுச்சி நாள்  கடைப் பிடிக்கப் பட்டது. புதுக்கோட்டையில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் புதுக்கோட்டை அரசினர் மகளிர் கலைக் கல்லூரி, கைக்குறிச்சி சிறீ பாரதி கலை அறிவியல் கல்லூரிகளில் அவ்வெழுச்சி நாளையொட்டி கருத்தரங்கம் நடைபெற்றது. பேராசிரியை மோகனா அவர்கள் பெண்களின் பிரச்சனைகள் குறித்து உரை வீச்சு நிகழ்த்தினார்.
அந்நிகழ்வில் பாவலர் பொன்.கருப்பையா எழுதி இசையமைத்துப் பாடிய பாடல் இது.

பெண்ணினமே      நிமிர்ந்து     எழுகவே
பேதமிலா          துரிமைகள்     பெறுகவே
கண்ணில்லாமல்    காட்சிகள்  நெஞ்சில்     மலருமா?
பெண்ணில்லாமல்  மாட்சிகள்  மண்ணில்  பெருகுமா?
மென்மை  காட்டும்  பெண்ணின்  வாழ்வில்  கண்ணீர்   ஏனம்மா?
விண்ணைத்  தாண்டும்  தன்மை  என்றும்  பெண்ணில்  தானம்மா.

புவியில்   வாழும்   உயிரில்   பாதி   பெண்ணே   உன்னினம்
புலரும்   மேன்மை  யாவினும்   நாத  மூலம்  உன்னிடம்
பெண்ணைத்  தாக்கும்  வன்மை  தீர  ஒன்றாய்க்  கூடுவோம்
பெண்மை  போற்றும்  பண்பை  நாளும்  மண்ணில்  நாட்டுவோம்

பள்ளியில்  பயிலும்  சிறுமியர்  மீதும்  பாலியல்  தாக்கலா? 
வல்லுறவாய்ப்  பெண்ணைக்  கூட்டாய்க்  குதறும்  வக்கிரம்  போக்கவா
வெள்ளித்  திரையில்  விளம்பர  முறையில்  கவர்ச்சிக்குப்  பெண்களா?
கிள்ளியே  எரிக்கக்  கொள்ளியை உயர்த்து குமுறும் எரிமலையாய்

கூலிக்குச்  செல்லும்  பேதையைச்  சீண்டும்  கொடியரைச்  சாடுவோம்
வேலியே   பயிரை  மேய்ந்திடும்  போக்கை  வேரொடு  வீழ்த்துவோம்
பாலுக்குக்  காவல்  புனையை  வைக்கும்  பகடியை  நீக்குவோம் 
பாலியல்  பொருளாய்  பாவையை  நோக்கும்  பதர்களைப்  பொசுக்குவோம் 

அச்சம்   நாணம்   மடமும்    பயிர்ப்பும்   அடிமையின்  சின்னமா?
உச்சம்   நாடும்   பெண்ணே  உனக்குள்   ஒடுங்கிட     எண்ணமா?
ஏச்சையும்  கேலிப்   பேச்சையும்  விழி  வீச்சினில்  எரித்திடு
மூச்சுள்ள  வரையும்   பெண்ணினப்  பெருமை  காப்பதில்  முனைந்திரு

துருவங்கள்    இரண்டும்   எதிரெதி    ராயின்  ஈர்ப்ப  தியல்பன்றோ
உருவத்தால் ஆண்பெண்  வேறென்  றாலும் உரிமைகள் சமமன்றோ
இரக்கைகள்  ரெண்டும்  இணையாய்  இயங்கப்  பறப்பது  எளிதன்றோ
இருகைகள்  இணைத்து  எழுப்புவோம்  ஓசை  எல்லாமும்  சமமென்றே