Thursday, February 23, 2012

பேரிடர் மேலாண்மை- ஸ்ரீபாரதி கலைஅறிவியல் கல்லூரி

இயற்கையின் படைப்புகள் எல்லாவற்றையும் நேசிப்போம். ஏற்றம் தரும் மாற்றங்களை யோசிப்போம்.
                20.02.2012 அன்று மாலை 4.30 மணிக்கு புதுக்கோட்டை ஸ்ரீ பாரதி் கலை அறிவியல் கல்லூரி மாணவியர்  அழகம்மாள் புரத்தில் நடத்திய நாட்டு நலப் பணித்திட்ட சிறப்பு முகாமில், பாவலர் பொன்.கருப்பையா அவர்கள் ”இயற்கைப் பேரழிவில் மாணவியர் பங்கு ” என்னும் தலைப்பில் சிறப்புரையாற்றிச்  செயல் முறை விளக்கங்களும் செய்து காட்டினார்.
             முகாமின் திட்ட அலுவலர்  செல்வி தமிழ்வாணி அவர்கள் வரவேற்க, கல்லூரியின் முதல்வர் திருமதி ஜானகி சுவாமிநாதன் அவர்கள் தலைமையேற்றார்.
              பாவலர் பொன்.க அவர்கள் தனது உரையில் இயற்கைப் பேரிடர் என்றால் என்ன? பேரிடர்களுக்கான காரணிகள் யாவை? பேரிடர் வருமுன் காத்தல் எவ்வாறு? பேரிடர் காலத்து மேற்கொள்ள வேண்டிய பணிகள் என்னென்ன? பேரழிவு நிகழ்ந்த பின்னர் மாணவியர் ஆற்ற வேண்டிய பணிகள் யாவை? என்னும் வினாக்களுக்கான விளக்க உரையினை வழங்கினார்.
முதலுதவியின் நோக்கம், முதலுதவியாளரின் தகுதிகள், முதலுதவியில் பின்பற்ற வேண்டிய முதன்மைச் செயல்கள், மயக்கம், மாரடைப்பு, காயங்கள். எலும்பு முறிவு,  நச்சுக் கடிகள், அதிர்ச்சி முதலியவற்றுக்குச் செய்ய வேண்டிய முதலுதவிகள் பற்றி விளக்கினார். தொடர்ந்து காயங்களின் இரத்த ஒழுக்கை நிறுத்தும் முறைகள், எலும்பு முறிவுக்குப் போட வேண்டிய கட்டுகளின் வகைகள், தீக் காயங்கள், நீரில் மூழ்கியவர்களை மீட்டலும் முதலுதவி செய்தலும் பற்றிய செயல் முறை விளக்கங்களைச் செய்து காட்டினார்.             முதலுதவியில் பயன் படுத்தப் படும் தட்டை முடிச்சு, வளைய முடிச்சு. உயிர்காக்கும் முடிச்சு, நாற்காலி முடிச்சு முதலியவற்றைப் போடும் பயிற்சி முகாம் மாணவர்களுக்கு அளிக்கப் பட்டது.
                     மாணவியர் பயிற்சியில் ஆர்வமுடன் ஈடுபட்டதும், அரும்பிய அய்யப்பாடுகளைக் கேட்டுத் தெளிவு பெற்றதும் சிறப்பாக இருந்தது.

புதிய தலைமுறை -இது எப்படிப் பெற்ற சுதந்திரம்?

இயற்கையின் படைப்புகள் எல்லாவற்றையும் நேசிப்போம். ஏற்றம் தரும் மாற்றங்களை யோசிப்போம்.
                   புதிய தலைமுறை அறக்கட்டளையும் காந்தி கல்வி நிலையமும் இணைந்து, புதுக்கோட்டை  கைக்குறிச்சி வெங்கடேசுவரா கல்வி நிறுவனத்தில், 2012 பிப் 9 மற்றும் 10 ஆகிய இருநாள்கள்  இந்திய சுதந்திரப் போராட்டம் குறித்த ஒளிப்படக் கண்காட்சி மற்றும் பயனுள்ள வாழ்க்கைக்குத் தேவையான பண்புகள் குறித்த பயிற்சி முகாமினை ” இது எப்படிப் பெற்ற சுதந்திரம்?” என்னும் தலைப்பில்  சிறப்பாக நடத்தியது. 
           அம்முகாமில் பாவலர் பொன் கருப்பையா அவர்கள் 10.02.2012  முற்பகல் அமர்வில் ”தியாக மனப்பான்மை” என்னும் தலைப்பில் கருத்துரையாற்றினார். 
தனது  உரையில் நாட்டின் விடுதலைக்காக உடல். பொருள், ஆவியினைத் தியாகம் செய்த மாந்தர்களின் அருஞ்செயல்களை விளக்கி இன்றைய இளைஞர்களின் சிரமங்களை நோக்கிப் பயணிக்கும் போக்கினை மாற்றி சிகரங்களை நோக்கிச் செல்ல வேண்டிய பாதைகளுக்கான பண்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார். 
               புதிய தலைமுறை அறக்கட்டளை  புதுக்கோட்டை மாவட்ட  நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் திரு ந.சுதாகர் அவர்கள் வரவேற்க, மாவட்ட நுகர்வோர் சங்கச் செயலாளர் பொறியாளர் சு.தனவேலு அவர்கள் தலைமை உரை யாற்றினார். மேனாள்  தலைமைப் பொறியாளர் பொறி. சொக்கலிங்கம் அவர்கள் முன்னிலையுரையாற்றினார். நிறைவில் கல்லூரியின் முதல்வர் திருமதி பிரின்சி இமாகுலேட் அவர்கள் நன்றியுரையாற்றினார்.  

தமிழ்ப் புத்தாண்டு நாள் -2043

இயற்கையின் படைப்புகள் எல்லாவற்றையும் நேசிப்போம். ஏற்றம் தரும் மாற்றங்களை யோசிப்போம்.
                 புதுக்கோட்டை சண்முகா நகர் இளந்தென்றல் கலைமன்றம் மற்றும் பகுதி குடியிருப்போர் நலச்சங்கத்தின் சார்பாக தி.பி 2043 சுறவம் முதல் நாள்  சண்முகாநகரில் 7 ஆம் ஆண்டு பொங்கல் விழா மற்றும் தமிழ்ப் புத்தாண்டு நாள் விழாச்  சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
              விழாவினையொட்டி பகுதி மாணவர்களுக்கான பேச்சு, பாட்டு, ஓவியப் போட்டிகளும், இளைஞர்களுக்கான இறகுப் பந்துப் போட்டிகளும், மகளிர்க்கான கோலப்போட்டிகளும், நடைபெற்றன.
             திறந்த வெளியில் பொங்கலிட்டு இயற்கைக்கு நன்றி தெரிவித்து, விளையாட்டுச் சுடர் தொடர் ஓட்டம் காலையில்தொடங்கியது.                                  விளையாட்டுப் போட்டி நடுவர்களாக தலைமையாசிரியர் திரு பொன்.க.மதிவாணன், திரு சத்தியமூர்த்தி, திரு.இரா.மணிமாறன், திரு கருணாநிதி, திரு சாண்டில்யன் ஆகியோர் செயல்பட்டனர்
 அதனைத் தொடர்ந்து  மழலையர், சிறுவர், இளைஞர். பெற்றோர் முதலியவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நாள் முழுவதும் நடைபெற்றது. பகுதி மக்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
            இரவு நிகழ்வாக போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழா நடைபெற்றது. 
            விழாவிற்குப் பகுதி குடியிருப்போர் நலச்சங்கத் தலைவர் திரு உ.சரவணன் தலைமையேற்க, திரு ப. இராமசாமி, முன்னிலையேற்றார். கவிநாடு மேற்கு ஊராட்சி மன்றத் த லைவர் திரு.இரா.சந்திரசேகரன் அவர்கள் பரிசுகள் வழங்கினார்.
            அதனைத் தொடர்ந்து புதுகை சாலமன் வழங்கும் இராகம் மெலோடி இசைக்குழுவின் இன்னிசை நிகழ்ச்சியும் நடை பெற்றது. விழாவிற்கு தமிழாசிரியர் அ.சுப்பையா அவர்கள் வரவேற்புரையாற்ற, ஆசிரியர் திரு சீனிவாச நாராயணன் அவர்கள் நன்றிகூறினார். விழா ஏற்பாடுகளை இளந்தென்றல் கலைமன்றத்தின் ஒருங்கிணைப்பாளர் பாவலர் பொன்.கருப்பையா அவர்கள் செய்திருந்தார். திரு சோமசுந்தரம், திரு. கனகராசு, திரு .பா.வெங்கடசுப்பிரமணியன் ஆகியோர் விழாக்குழுவாகச் செயல்பட்டனர்.