Wednesday, December 14, 2011

பேரிடர் மேலாண்மை

இயற்கையின் படைப்புகள் எல்லாவற்றையும் நேசிப்போம். ஏற்றம் தரும் மாற்றங்களை யோசிப்போம்.
                       01.12.2011 புதுக்கோட்டை அசோக்நகர் நகராட்சி நடுநிலைப் பள்ளியில், பள்ளி மாணவர்களுக்கு பேரிடர் மேலாண்மை பயிற்சியளிக்கப்பட்டது. பள்ளித் தலைமையாசிரியர் திருமதி இலாகிஜான் அவர்கள் வரவேற்றார். நகர்மன்ற உறுப்பினர்திரு க.பாண்டியன் தலைமையேற்றார். பள்ளிப் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் திரு சபாரெத்தினம் அவர்கள் முன்னிலையேற்றார்.
                     
                    இயற்கைச் சீற்றங்கள் எதனால் ஏற்படுகின்றன? அவற்றைத் தடுக்க மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன? பாதிப்பு ஏற்பட்ட காலத்தில் மேற்கொள்ள வேண்டிய இன்றியமையாப் பணிகள் என்னென்ன? என்பதைப் பற்றி மாணவர் மனங்கொள்ளத் தக்க வகையில்  கருத்தாளர் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்டத் துணைத் தலைவர்  பாவலர் பொன்.கருப்பையா அவர்கள் விளக்கினார்.
                    
                    இயற்கைச் சீற்றங்களிலோ, திடீர் நோய்களினாலோ, எதிர்பாராத விபத்துகளினாலோ பாதிக்கப் பட்டவர்களை எவ்வாறு மீட்க வேண்டும், எவ்வாறு முதலுதவி செய்ய வேண்டும்  என்பனவற்றைச் செயல் விளக்கங்களோடு பயிற்சியளித்தார். 
             குறிப்பாக நீரில் மூழ்கியவரை நீளக் கயிறு கொண்டு மீட்டல், தீ, புகை சூழ்ந்த மாடிப் பகுதியில் சிக்கி மயக்கமுற்றவரை தவழ்ந்து மீட்டல், தீயணைப்பவர் தூக்கு மூலம் மீட்டுக் கொணர்தல், சாலை விபத்து, கட்டட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டல், மயக்கமுற்றவர்களை இயல்பு நிலைக்குக் கொண்டு வருதல் , செயற்கைச் சுவாசமளித்தல், நெஞ்சழுத்த முறையில் இதயத் துடிப்பை மீளச் செய்தல், இரத்த ஒழுக்கை நிறுத்தும் வழி முறைகள், எலும்பு முறிவுகளுக்கு முக்கோணக் கட்டுத் துணி கொண்டு கட்டுகள் போடுதல், காயம் பட்டவரை ஒருவராக, இருவராக, நால்வர் சேர்ந்து தூக்கிச் செல்லுதல்,உருவாக்கத்தூக்கிகள்தயாரித்தல்ஆகியவற்றில்பயிற்சிஅளிக்கப்பட்டது.                                                                                                                 
                     முதலுதவியில் பயன் படும் முடிச்சுகள் போடுவது பற்றிய பயிற்சியும் அளிக்கப் பட்டது, 
மாணவர்கள் மிகுந்த ஈடுபாட்டுடன் பயிற்சி பெற்றனர். நிறைவாக பள்ளிப் பட்டதாரி ஆசிரியரும் தமிழ்நாடு அறிவியல் இயக்க நகரச் செயலாளருமான திரு பழனிச்சாமி அவர்கள் நன்றியுரையாற்றினார்.

No comments:

Post a Comment