Saturday, October 22, 2011

துளிர் இளம் படைப்பாளிகள் பயிற்சிப் பட்டறை

          22.10.2011 அன்று  தமிழ்நாடு அறிவியல் இயக்க புதுக்கோட்டை மாவட்டக் கிளை துளிர்  சிறுவர் அறிவியல் திங்கள் இதழ் சிறுவர் படைப்பாளிகளுக்கான ஒருநாள் பயிற்சிப் பட்டறையை தமிழ்நாடு அறிவியல் இயக்க அலுவலகக் கூட்ட அரங்கில் நடத்தியது.                                                                                                                    த.நா.அறிவியல் இயக்க மாவட்டத் தலைவர் திரு லெ.பிரபாகரன் அவர்கள் தலைமையிலும் மாநிலச் செயற்குழு உறுப்பினர் கோவிந்தசாமி, தா.சிவராமகிருஷ்ணன்.  நகரப் பொருளாளர் பழனிமுத்து ஆகியோர் முன்னிலையிலும் பயிற்சிப் பட்டறை தொடங்கியது.நகரச் செயலாளர் பழனிச்சாமி வரவேற்புரையாற்றினார். மாநிலத் துணைத் தலைவர் எஸ.டி.பாலகிருஷ்ணன் அவர்கள் பட்டறைப் பயிற்சியினைத் தொடங்கி வைத்து ”துளிர் இதழ்” பற்றிய அறிமுக உரையாற்றினார். புதுக்கோட்டை நகர எல்லைக்குட்பட்ட பல்வேறு பள்ளிகளில் தேர்ந்து அனுப்பப் பட்ட 32 மாணவர்கள் படைப்புப் பயிற்சி மேற்கொண்டனர்.                                            
              த.மு.எ.க.ச மாநிலச் செயற்குழு உறுப்பினர் கவிஞர் நா.முத்துநிலவன் கதைகள் படித்தலும் படைத்தலும் பற்றிய கருத்துகளை நடித்துக் காட்டி விளக்கினார். கருத்தாளர் எழுத்தாளர் இராசி.பன்னீர் செல்வம் கவிதை புனையும் பயிற்சியளித்தார். பாவலர் பொன்.கருப்பையா பாடல். கட்டுரை எழுதவும், எளிய அறிவியல் ஆய்வுகள் செய்யவும், ஓவியம் வரையவும் பயிற்சியளித்தார். 
            விளையாட்டு மற்றும் பாடல்களுடன் சோர்வில்லாது இளம் படைப்பாளிகள் ஆர்வமுடன் பல்வேறு படைப்புத் திறன் பயிற்சியினைப் பெற்றனர். அவர்கள் படைத்த கவிதைகள், கட்டுரைகள், ஓவியங்கள், கதைகள், படைத்தவர்களின் ஒளிப்படம் மற்றும் முகவரியோடு துளிர் இதழில் வெளியிட மாநிலத் துணைத் தலைவர் மாநில மையத்திற்கு உடன் அனுப்பிவைத்தார். 
              பட்டறையில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் துளிர் மற்றும் அறிவியல் வெளியீடு நூல்கள் அளிக்கப்பட்டது. நிறைவு நிகழ்வில் மாவட்டத் துணைத் தலைவர் மணவாளன், மாவட்டச் செயலாளர் செயபாலன் ஆகியோர் படைப்பாளிகளைப் பாராட்டிப் பேசினர். த.நா.அறிவியல் இயக்க மாவட்டப் பொருளாளர் வீரமுத்து  அனைவருக்கும் நன்றி கூற பிரியா மனங்களுடன் இளம் படைப்பாளிகள் பிரிந்து சென்றனர்.

No comments:

Post a Comment