Saturday, October 22, 2011

துளிர் இளம் படைப்பாளிகள் பயிற்சிப் பட்டறை

          22.10.2011 அன்று  தமிழ்நாடு அறிவியல் இயக்க புதுக்கோட்டை மாவட்டக் கிளை துளிர்  சிறுவர் அறிவியல் திங்கள் இதழ் சிறுவர் படைப்பாளிகளுக்கான ஒருநாள் பயிற்சிப் பட்டறையை தமிழ்நாடு அறிவியல் இயக்க அலுவலகக் கூட்ட அரங்கில் நடத்தியது.                                                                                                                    த.நா.அறிவியல் இயக்க மாவட்டத் தலைவர் திரு லெ.பிரபாகரன் அவர்கள் தலைமையிலும் மாநிலச் செயற்குழு உறுப்பினர் கோவிந்தசாமி, தா.சிவராமகிருஷ்ணன்.  நகரப் பொருளாளர் பழனிமுத்து ஆகியோர் முன்னிலையிலும் பயிற்சிப் பட்டறை தொடங்கியது.நகரச் செயலாளர் பழனிச்சாமி வரவேற்புரையாற்றினார். மாநிலத் துணைத் தலைவர் எஸ.டி.பாலகிருஷ்ணன் அவர்கள் பட்டறைப் பயிற்சியினைத் தொடங்கி வைத்து ”துளிர் இதழ்” பற்றிய அறிமுக உரையாற்றினார். புதுக்கோட்டை நகர எல்லைக்குட்பட்ட பல்வேறு பள்ளிகளில் தேர்ந்து அனுப்பப் பட்ட 32 மாணவர்கள் படைப்புப் பயிற்சி மேற்கொண்டனர்.                                            
              த.மு.எ.க.ச மாநிலச் செயற்குழு உறுப்பினர் கவிஞர் நா.முத்துநிலவன் கதைகள் படித்தலும் படைத்தலும் பற்றிய கருத்துகளை நடித்துக் காட்டி விளக்கினார். கருத்தாளர் எழுத்தாளர் இராசி.பன்னீர் செல்வம் கவிதை புனையும் பயிற்சியளித்தார். பாவலர் பொன்.கருப்பையா பாடல். கட்டுரை எழுதவும், எளிய அறிவியல் ஆய்வுகள் செய்யவும், ஓவியம் வரையவும் பயிற்சியளித்தார். 
            விளையாட்டு மற்றும் பாடல்களுடன் சோர்வில்லாது இளம் படைப்பாளிகள் ஆர்வமுடன் பல்வேறு படைப்புத் திறன் பயிற்சியினைப் பெற்றனர். அவர்கள் படைத்த கவிதைகள், கட்டுரைகள், ஓவியங்கள், கதைகள், படைத்தவர்களின் ஒளிப்படம் மற்றும் முகவரியோடு துளிர் இதழில் வெளியிட மாநிலத் துணைத் தலைவர் மாநில மையத்திற்கு உடன் அனுப்பிவைத்தார். 
              பட்டறையில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் துளிர் மற்றும் அறிவியல் வெளியீடு நூல்கள் அளிக்கப்பட்டது. நிறைவு நிகழ்வில் மாவட்டத் துணைத் தலைவர் மணவாளன், மாவட்டச் செயலாளர் செயபாலன் ஆகியோர் படைப்பாளிகளைப் பாராட்டிப் பேசினர். த.நா.அறிவியல் இயக்க மாவட்டப் பொருளாளர் வீரமுத்து  அனைவருக்கும் நன்றி கூற பிரியா மனங்களுடன் இளம் படைப்பாளிகள் பிரிந்து சென்றனர்.

Wednesday, October 12, 2011

பயிலரங்கம்

            12.10.2011 அன்று புதுக்கோட்டை பெருமாநாடு சுதர்சன் கல்வியியல் கல்லூரியில் எளிய அறிவியல் ஆய்வுகள் பற்றிய ஒருநாள் பயிலரங்கம் சிறப்பாக நடை பெற்றது. கல்வியில் கல்லூரியின் முதல்வர் முனைவர் ரெங்கராசன் அவர்கள் தலைமையேற்றார்.  துணை முதல்வர் திரு இராசா சுவாமிநாதன் அவர்கள் வரவேற்புரையாற்றினார். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டத் துணைத் தலைவர் புலவர் பொன்.கருப்பையா அவர்கள் கல்வியியல் கல்லூரி ஆசிரியர் பயிற்சி மாணவர்களுக்கு ” கற்பித்தலில் பயன் தரும் எளிய அறிவியல் ஆய்வுகள்” என்னும் தலைப்பில்  செயல் முறை களுடன்  பயிற்சியளித்தார்.                                                                                               
               நடுநிலை, மேல்நிலை பயிலும் மாணவர்களுக்கு பயிற்றுவித்தலில்  செலவில்லாத, குறைந்த செலவிலான இயற்பியல், வேதியியல், உயிரியல், மின்னியல் சார்ந்த எளிய ஆய்வுகள் பல பயிற்சியில் செய்து காட்டப்பட்டன. பயிற்சி ஆசிரியர்கள் தங்களை முழுமையாக பயிற்சியில் ஈடுபடுத்திக் கொண்டு தேவையான விளக்கங்களை பயிற்றுநரிடம் கேட்டுத் தெளிவு பெற்றனர். பயிற்சியின் விளைவு மிகவும் பயனுள்ளதாக இருந்ததாக பயிற்சி ஆசிரியர்கள் கருத்தளித்தனர்.                                                                                                   
                நிகழ்ச்சியினை பேராசிரியர் பரமேசுவரன் அவர்கள் ஒருங்கிணைத் திருந்தார்.  நிறைவாக கல்வியியல் கல்லூரியின் முதல்வர், இத்தகு பயிற்சி மாணவர்களின் கல்விப் பணிக்கு சிறந்த படிக்கட்டாக அமையும் எனக்கூறி நன்றி பாராட்டினார்.

Monday, October 10, 2011

பேரிடர் மேலாண்மை

                           புதுக்கோட்டை சத்தியமங்கலம் கீரைத் தமிழ்ச்செல்வன் கல்வி நிறுவனத்தில் 10.10.2011அன்று  பேரிடர் மேலாண்மை கருத்தரங்கம் நிறுவனத்தின் செயலாளர் திரு பீட்டர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டத் துணைத் தலைவர் பாவலர் பொன்.கருப்பையா அவர்கள் சிறப்புக் கருத்தாளராகக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
                  அவர் தனது உரையில், மனிதகுலத்தைப் பாதித்து வரும் புவிஅதிர்வு, வெள்ளப்பெருக்குகள், புயல்,காட்டுத்தீ  போன்ற இயற்கைச் சீற்றங்களினால் ஏற்படுகின்ற பாதிப்புகள், புவி வெப்பமயமாதலால் நிகழும் வளிமண்டலச் சீர்கேடுகள், ஓசோன் படலத்தின் பாதிப்பினால்  புவியில் பனிப்பாறைகள் உருகி கடல்நீர் மட்டம் உயர்வதால் உள்வாங்கப் படும் நிலப்பரப்பு, சுற்றுச்சூழல் பாதிப்பினால் அழிந்து வரும் பல்லுயிரிகள்  அதனால் ஏற்படும் மனித குல பாதிப்புகள் பற்றி விளக்கினார். அறிவியல் கருவிகளை அபரிமிதமாகவும் தவறாகவும் அழிவிற்காகவும் குறுக்குவழியில் பொருளீட்டப்  பயன்படுத்தும் சுயநலவாதிகளால் இயற்கை வளங்களான நிலம், நீர், காற்று மாசுபடுவதையும் மனிதகுலம் இனம் தெரியாத நோய்களில் சிக்கிச் சீரழியும் நிலையினையும் சுட்டிக்காட்டி, இயற்கையைப் பாதுகாக்க மரக்கன்றுகள் நட்டு வளர்க்க வேண்டிய அவசியத்தையும், தோல்,சாயத் தொழிற்சாலைக் கழிவுகள் தூய்மையாக்கத்திற்குப் பின் வெளியேற்றப் பட வேண்டியதன் அவசியத்தை யும்  வலியுறுத்தினார்.
                     இவையன்றி விழாக்காலங்களில் காற்றுமண்டலத்தைப் பாழ்படும் வேள்விகளில் பொருள்களை எரித்தல், வெடி மத்தாப்பு கொளுத்துதல், எளிதில் அழியாத மெல்லிய பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்துதல, தேவையற்ற வெப்ப ஒளி உமிழ்விளக்குகளின் அலங்காரம் முதலியவற்றைத் தவிர்ப்பதன் மூலம் இயற்கைச் சீற்றங்களைத் தவிர்க்கலாம் என்பதையும் எடுத்துரைத்தார்.
             ஆக்கத்திற்காகக் கண்டுபிடிக்கப்பட்ட அணுவின் சக்தி அழிவுக்குப் பயன் படுத்தப் படுவதற்கான கண்டனக் கருத்தையும் பதிவு செய்தார். பசுமை இல்ல வாயுக்களால் வளிமண்டலமும் அதைச் சார்ந்து வாழும் உயிரினமும் பாதிக்கப் படாமல் இருக்க, தொழில் கூடங்களுக்கு, காற்று, கடல்நீர், சூரியஒளி (வெப்பம்)இயற்கைக் கழிவுகள் (குப்பை)முதலானவற்றின் மூலம் ஆற்றல் சக்தியினை உருவாக்கும் முயற்சிகள் மென்மேலும் பெருக வேண்டியதன் அவசியத்தையும் உணர்த்தினார்.
                          கல்வி நிறுவனத்தில் பயிலும் கல்வியியல் ஆசிரியர்ப் பயிற்சி மாணவர்கள், செவிலியர் கல்லூரி, செவிலியர் தொழில் நுட்ப மாணவர்கள் என 300 மாணவர்களும் பேராசிரியர்களும் துறை வல்லுநர்களும் கலந்து கொண்டு, கருத்தரங்கில் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டது சிறப்பாக அமைந்தது. கல்வியில் கல்லூரி முதல்வர் வரவேற்க, துறைத் தலைவர் திரு முத்து அவர்கள் நன்றியுரை யாற்றினார்.

Friday, October 7, 2011

நாட்டு நலப் பணித் திட்ட முகாம்

                    புதுக்கோட்டை திருக்கோகர்ணம் அரசு மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட முகாம் திருவப்புர் பகுதியில் 3.10.2011 முதல் நடைபெற்று வருகிறது. அம்முகாமின் ஐந்தாம் நாள் நிகழ்வில் தமிழ்நாடு அறிவியல் இயக்க புதுக்கோட்டை மாவட்டத் துணைத் தலைவர் புலவர் பொன்.கருப்பையா அவர்கள் முகமையர்க்கு ”மந்திரமா? தந்திரமா? என்னும் அறிவியல் விழி்ப்புணர்வு  நிகழ்ச்சியினை நடத்தினார்.
              அவர் தனது உரையில் அறியாமை மற்றும் மூடநம்பிக்கைகள் பாமர மக்களின் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாக இருப்பதையும் அவற்றை நீக்க அறிவியல் சிந்தனைகளை சமுதாயத்தில் பரப்ப வேண்டிய அவசியம பற்றி வலியுறுத்தினார்

     நிகழ்ச்சியில் வெற்றுக் கையில் தங்கச் சங்கிலி, விபுதி, குங்குமம்  வர வழைத்தல், தேங்காய்க்குள் மலர் வரவழைத்தல், எலுமிச்சை பழத்துள் இரத்தம் வரவழைத்தல், தண்ணீரால் தேங்காயை தீப்பற்றி எரிய வைத்தல், தீப்பந்தங்களை உடல், நாக்கில் தேய்த்தல், கோப்பில் உள்ள படங்களை மறைய வைத்தல், சீட்டுகள் வண்ணம் மாற்றுதல், உள்ளங்கையில் சூடம் ஏற்றி அதை வாயில் போட்டு விழுங்குதல், இறுக்கியும் இறுகாத கயிறு. ஆகிய தந்திரக் காட்சிகளை அவர் செய்த போது முகமை மாணவர்களும் பகுதி மக்களும் வியந்து மகிழ்ந்தனர். அனைத்தும் மந்திரமல்ல... தந்திரமும் அறிவியலும்தான் என்பதை நிகழ்ச்சி நடத்திய பொன்.க. அவர்கள் விளக்கினார்.

        நிகழ்ச்சியின் தொடக்கத்தில் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் திரு கண்ணன் அவர்கள் வரவேற்புரையாற்றினார். நிறைவில் திருக்கோகர்ணம் அரசு மேல்நிலைப் பள்ளி உதவித் தலைமையாசிரியர் திரு பாபு அவர்கள் நன்றியுரையாற்றினார்

Tuesday, October 4, 2011

நாட்டு நலப் பணித் திட்ட முகாம்

                    புதுக்கோட்டை அரசு முன்மாதிரி மேல்நிலைப் பள்ளியில் 3.10.2011 முதல் 9.10.2011 வரை அப்பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட முகாம் நடைபெற்று வருகிறது. முகாமின் இரண்டாம் நாள் 4.10.2011 பிற்பகல் 4.00 மணிமுதல் 7.00 மணி வரை முகமை மாணவத்  தொண்டர்களுக்கு ” பேரிடர் மேலாண்மை-இயற்கைச் சீற்றங்கள், மீட்பு மற்றும் முதலுதவி” பற்றிய பயிற்சி, தமிழ்நாடு அறிவியல் இயக்க புதுக்கோட்டை மாவட்டத் துணைத் தலைவர் மற்றும் புதுக்கோட்டை ஜே.ஆர்.சி செயற்குழு உறுப்பினர் பாவலர் பொன்.கருப்பையா அவர்களால் அளிக்கப் பட்டது.  பயிற்சியில் இயற்கையைப் பாதுகாத்தல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, வருமுன் காக்கும் உத்திகள், பேரிடரில் பாதிக்கப் பட்டோரை மீட்டல், முதலுதவி அளித்தல் பற்றிய செயல் விளக்கங்கள் செய்து காட்டப்பட்டன. மூர்ச்சையுற்றோரை சுய நினைவுக்குத் திருப்புதல், செயற்கைச் சுவாசமளித்தல், காயம்பட்டோரின் இரத்த ஒழுக்கை நிறுத்தும் முறைகள், எலும்பு முறிவுகளுக்குக் கட்டுப் போடுதல், நீரில் மூழ்கியோரை மீட்டலும் முதலுவியும், தீ விபத்தில் சிக்கியவர்களை மீட்டலும் முதலுதவியும், பாதிக்கப் பட்டோரைத் தூக்கிச் செல்லும் முறைகள், அவசியமான கட்டுகளும் முடிச்சுகளும் பற்றிய செயல்முறைகள் முகாம் மாணவர்களுக்குக் கற்றுத் தரப்பட்டது. மாணவர்கள் ஆர்வமுடனும் ஈடுபாட்டுடனும்  இருந்தது பாராட்டத் தக்கது.
                முகாமின் திட்ட அலுவலர் திரு செல்வக்குமார் அவர்கள் நிகழ்ச்சியினை ஒருங்கிணைத்திருந்தார்.