Friday, September 23, 2011

உயிரி உரங்கள்

தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம், தேசிய அறிவியல் தொழில்நுட்ப மன்றம் ஆகியவற்றின் பங்களிப்போடு, புதுக்கோட்டை வெங்கடேசுவரா பல்தொழில் நுட்பப் பயில் கல்லூரி மற்றும் புதுக்கோட்டை மனிதவளம் மற்றும் இயற்கைவள மேம்பாட்டுச் சேவை அறக்கட்டளை ஆகியவை இணைந்து, புதுக்கோட்டையில் 22,23-9-2011 ஆகிய இரு நாள்கள் மக்களிடையே அறிவியல் மனப்பான்மையை பரப்பும் கருத்தரங்கு நடைபெற்றது. 22.09.2011 முதல் நாள் புதுக்கோட்டை வெங்கடேசுவரா பல்தொழில் நுட்பப் பயில் கல்லூரியில் ”மாணவர்களிடையே உயிர் உரங்கள்” பற்றிய விழிப்புணர்வுக் கருத்தரங்கம் கல்லூரி அறங்காவலர் திரு ஆர்.ஏ.குமாரசாமி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. குழந்தைகள் நல மருத்துவர் இரா.சுந்தர், தாளாளர் பி.கருப்பையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஹேண்ட்ஸ் தொண்டு நிறுவன நிருவாக இயக்குநர் திரு.மு.சரவணன் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். கேண்டில் தொண்டு நிறுவன அறங்காவலர் திரு.எம்.பி.பழனிச்சாமி, ரிவார்ட்ஸ் நிறுவனர் திரு ஏ.பாஸ்கர், இயற்கை விவசாயி திரு ஜி.எஸ்.தனபதி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். உயிர் உரங்களின் தேவை மற்றும் முக்கியத்துவம் பற்றி வம்பன் கிரிஸ் விஞ்ஞான் கேந்திர பேராசிரியர் முனைவர் வி.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் கருத்துரையாற்றினார். கருத்தரங்கில் ” வேதி உரங்களும் வேதனைகளும்” என்ற தலைப்பில் மரகதவள்ளி அறக்கட்டளையின் நிறுவுனர் புலவர் பொன்.கருப்பையா அவர்கள் சிறப்புரை ஆற்றினார். அவர் தனது உரையில் பண்டை வேளாண் உற்பத்தியும் அன்றைய மக்களின் நல வாழ்வும், இன்றைய நவீன வேளாண் இடு உரங்கள் எவ்வாறு மண்,நீர்.காற்று ஆகிய இயற்கை மூலங்களை மாசுபடுத்தி, விளைபொருள்களில் நச்சேற்றி,அவற்றை நுகரும் மனித இனத்தை இனங்கான இயலா நோய்க் குழியில் தள்ளி, மனிதவளத்திற்கு முட்டுக்கட்டையாய் இருக்கின்றன என்பதைச் சான்றுகளோடு விளக்கி, இயற்கை விவசாயத்தை மேற்கொண்டு, மதிப்புறு மனிதநலம் காக்க வேண்டியதை வலியுறுத்திப் பேசினார். உயிர் உரங்கள் என்னும் தலைப்பில் மாணவர் பேச்சுப் போட்டியில் கலந்து கொண்ட மாணவர்களைப் பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டன. கல்லூரி வளாகத்துள் மரக்கன்றுகள் நடப்பட்டன. நிறைவாக தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் திரு.ஏ.வெங்கடேசு அவர்கள் நன்றியுரையாற்றினார். நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களும் ஆசிரியர்களும் கருத்தரங்கில் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

No comments:

Post a Comment